வைஃபை ஆன் செய்ததும் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு தொடர்புடையவர்கள் மீதான ரெய்டு இன்றும் தொடர்வதாக வீடியோக்கள் வந்து விழுந்தன.
அவற்றைப் பார்த்தபடியே வாட்ஸ் அப் தனது மெசேஜை டைப் செய்யத் தொடங்கியது.

மின்சாரம் மற்றும் மதுவிலக்குத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜியின் உடன் பிறந்த தம்பி அசோக் மற்றும் கோவை செந்தில் கார்த்திகேயன் உள்ளிட்ட சுமார் 40 க்கும் மேற்பட்ட இடங்களில் மத்திய அரசின் வருமான வரித்துறை நேற்று காலை முதல் ரெய்டு செய்து வருகிறது. கரூர், கோவை, சென்னை உள்ளிட்ட இடங்களில் நடந்து வரும் ரெய்டு இன்றும் தொடர்கிறது. நேற்று கரூரில் திமுகவினருக்கும் வருமான வரித்துறையினருக்கும் இடையே நடந்த மோதல் தொடர்பாக இரு தரப்பினர் மீதும் இன்று வழக்கும் பதியப்பட்டிருக்கிறது.
எச்சரித்த ஸ்டாலின்… உஷாரான செந்தில்பாலாஜி
கடந்த மே 2 ஆம் தேதி அமைச்சரவைக் கூட்டம் நடத்திய முதல்வர் கூட்டம் முடிந்த பிறகு பல்வேறு அமைச்சர்களைத் தனித்தனியே அழைத்து, ‘மத்திய அரசின் ஏஜென்சிகள் எந்த நேரத்தில் வேண்டுமானாலும் உங்கள் மீது ரெய்டு நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம். எனவே ஜாக்கிரதையாக இருங்கள்’ என்று எச்சரித்து அனுப்பினார். அந்த எச்சரிக்கை செந்தில்பாலாஜிக்கும் சேர்த்துதான் விடுக்கப்பட்டிருக்கிறது.

இந்த நிலையில் மே 16 ஆம் தேதி அமலாக்கப் பிரிவு செந்தில்பாலாஜியை விசாரிக்கலாம் என்ற உச்ச நீதிமன்ற உத்தரவுக்குப் பின் மேலும் உஷாரானார். இந்த நிலையில்தான் வருமான வரித்துறை கரூருக்கு ரெய்டு வரலாம் என்ற தகவல் அமைச்சர் தரப்பினருக்கு அந்தத் துறையில் இருந்தே சில நாட்கள் முன்பிருந்தே தெரிந்திருக்கிறது. இதனால் எதற்கும் தயாராகத்தான் இருந்தனர் செந்தில்பாலாஜி தரப்பினர்.
அண்ணன் காட்டிய வழி

கடந்த 2021 சட்டமன்றத் தேர்தல் இறுதிகட்ட பிரச்சாரத்தின்போது இதேபோல அசோக் குமார் வீட்டிலும், செந்தில்பாலாஜி வீட்டிலும் ரெய்டு நடத்தப்பட்டது. அப்போது தேர்தல் பணிகளில் இருந்த செந்தில்பாலாஜியை வருமான வரித்துறை அதிகாரிகள் அழைத்தனர். ஆனால் அப்போது வீட்டுக்கு செல்ல மறுத்துவிட்ட செந்தில் பாலாஜி, ‘நீங்கள் என்ன கைப்பற்றுகிறீர்களோ அதை என் பெற்றோரிடம் எழுதிக் கொடுத்துவிட்டுச் செல்லுங்கள்’ என்று சொல்லிவிட்டார். வீட்டுக்கே செல்லவில்லை. அன்று செந்தில்பாலாஜி பின்பற்றிய அதே அணுகுமுறையைத்தான் இப்போது அசோக் பின்பற்றியிருக்கிறார். எப்போது வேண்டுமானாலும் வீடு தேடி ஐடி ரெய்டு வரலாம் என்பதை உணர்ந்த அசோக் கரூரிலேயே இல்லை.
செந்தில்பாலாஜியைக் குறிவைத்துக் களமிறங்கிய வருமான வரித்துறை அவரது வீட்டில் ரெய்டு நடத்தவே இல்லை. மாறாக அவரது தம்பி அசோக் உள்ளிட்ட உறவினர்கள், நண்பர்களின் நண்பர்கள் என்று 40 இடங்களில் ரெய்டு நடத்தியுள்ளது.
ஐடி எதிர்பார்த்த மாதிரி அசோக் குமாரின் வீட்டில் பெரிதாக எதுவும் கிடைக்கவில்லையாம். ஆனால் இப்படியெல்லாம் நடக்கும் என்று தெரிந்துதான் ரெய்டு வட்டத்தை விரிவாக்கியிருந்தது ஐடி. அதாவது அசோக்கின் உறவினர்கள், நண்பர்கள், உறவினர்களின் உறவினர்கள், நண்பர்களின் நண்பர்கள் என்று சங்கிலித் தொடர் வட்டாரம் முழுதும் ரெய்டு நடத்தியது.
இவர்களில் பலர் ஒப்பந்ததாரர்கள், மதுபான பார்கள் உரிமையாளர்கள் என்று பட்டியல் நீள்கிறது. இந்த ரெய்டில் கட்டுக் கட்டாக பணத்தை அள்ளவில்லை என்றால் கூட இந்த ரெய்டில் நாங்கள் எதிர்பார்த்துச் சென்றதை விட முக்கியமான ஆதாரங்கள் கிடைத்துள்ளன என்கிறார்கள் வருமான வரித்துறை அதிகாரிகள். அவை என்ன ஆதாரங்கள்?
திமுகவினரின் பத்தாண்டு பசி- பட்டினி போட்ட பாலாஜி

ஏற்கனவே இருந்த திமுக, அதிமுக ஆட்சிகளில் டாஸ்மாக் மதுபானக் கடைகளைச் சார்ந்து அரசு அனுமதியோடு இயங்கும் பார்கள் அந்தந்த மாவட்டங்களில் இருக்கும் ஆளுங்கட்சிப் புள்ளிகளுக்கு டெண்டர் கொடுக்கப்படும். மாவட்டச் செயலாளரின் நண்பர்கள், ஒன்றியச் செயலாளர், நகர செயலாளர் இப்படிப்பட்ட நிர்வாகிகள் பார்களை எடுத்து நடத்துவார்கள். அதில் பணம் பலமாக புரளும். இந்த பணத்தை வைத்துதான் ஏரியாவில் கட்சி நிகழ்ச்சிகளுக்கு செலவு செய்வார்கள், கெத்தாக உலா வருவார்கள். கடந்த அதிமுக ஆட்சி வரை இந்த நடைமுறைதான் இருந்தது.
2021 திமுக ஆட்சிக்கு வந்த பிறகும் இதே நடைமுறைதான் தொடரும் என்று திமுக நிர்வாகிகள் பத்தாண்டு பசியோடு காத்திருந்தார்கள். ஆனால் துறை அமைச்சரான செந்தில்பாலாஜி திமுக தலைமையிடம் பேசி இதில் புதிய முறையை நடைமுறைப்படுத்தினார். அதாவது அனைத்து மதுபான பார்களையும் சென்ட்ரலைஸ்டு ஆக்கினார்.
கட்சி நிர்வாகிகள் நேரடியாக பார்களை எடுத்து நடத்த முடியாமல் தமிழ்நாடு முழுமைக்கும் ஒரு சிலரே பார்களை எடுத்து நடத்தினர். கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில் மூவாயிரத்துக்கும் மேற்பட்ட அரசு அனுமதி பெற்ற பார்கள் இயங்கின. இவற்றில் 75 சதவிகித பார்களின் லைசென்ஸ் ஏற்கனவே காலாவதியாகிவிட்டது. திமுக அரசில் நமக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று அக்கட்சி நிர்வாகிகள் காத்திருந்த நிலையில்தான்… செந்தில்பாலாஜி அறிமுகப்படுத்திய புதிய முறையால் கட்சி நிர்வாகிகள் கடும் அதிருப்தி அடைந்தனர்.
அதாவது ஒட்டுமொத்தமாக டாஸ்மாக் பார்களில் இருந்து வந்த பணம் தமிழகம் முழுவதிலும் இருக்கும் திமுக நிர்வாகிகளுக்கு பிரித்துக் கொடுக்கப்பட்டது. மாவட்டச் செயலாளர்களுக்கு இது கோபத்தை மட்டுமல்ல மரியாதை போய்விட்டதே என்ற மன உளைச்சலையும் ஏற்படுத்தியது. இதனால்தான் அமைச்சர் செந்தில் பாலாஜியின் வீட்டை நோக்கி போராட்டமும் கடந்த வருடம் நடத்தினார்கள் பார் உரிமையாளர்கள்.
இந்த நடைமுறை வேண்டாம் கட்சிக்கு கெட்ட பெயர் ஏற்படும் என்று அமைச்சர்கள் நேரு, வேலு, சேகர்பாபு போன்றோர் இந்த பணத்தை வாங்க மறுத்திருக்கிறார்கள். இதுபற்றி செந்தில்பாலாஜி முதலமைச்சர் ஸ்டாலினிடம் கூற, அம்மூவரையும் அழைத்த ஸ்டாலின் எச்சரித்து இந்த நடைமுறையை பின்பற்றச் சொல்லி உத்தரவிட்டிருக்கிறார். இந்த வகையில்தான் தமிழகம் முழுவதிலும் இருக்கும் திமுக நிர்வாகிகளுக்கு டாஸ்மாக் பணம் மாதாமாதம் அனுப்பப்பட்டிருக்கிறது. இதுமட்டுமல்ல தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகைகளுக்காகவும் கட்சி நிர்வாகிகளுக்கு டாஸ்மாக் பணம் பிரித்துக் கொடுக்கப்பட்டிருக்கிறது.
ரெய்டில் கிடைத்தவை என்ன?

இதற்கும் இந்த ரெய்டுக்கும் என்ன சம்பந்தம் என்று கேட்கிறீர்களா? அசோக்கின் நண்பர்களின் நண்பர்களிடம் நடத்திய ரெய்டுகளின் போது தமிழ்நாடு முழுமைக்கும் திமுக நிர்வாகிகளுக்கு கோடிக்கணக்கில் பிரித்துக் கொடுக்கப்பட்ட இந்த பணம் பற்றிய கணக்கு வழக்குகள் வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு கிடைத்திருக்கின்றன. இத்தனைக்கும் தமிழ்நாட்டில் இன்னும் புதிய மதுபான கடைகளுக்கான ஏலம் முழுமையாக நடக்கவில்லை. நீதிமன்றத்தில் வழக்கு நடப்பதால் லைசென்ஸ் முடியாத 750 பார்கள்தான் அரசு அனுமதியோடு இயங்கி வருகின்றன. அப்படியென்றால் மீதம் இருக்கும் 2500 க்கும் மேற்பட்ட பார்கள் சட்ட விரோதமாகத்தான் இயங்கி வந்திருக்கின்றன.
குறிப்பிட்ட சிலரிடம் இருந்து தமிழ்நாடு முழுவதிலும் இருக்கும் திமுக நிர்வாகிகளுக்கு கடந்த ஓராண்டுக்கும் மேலாக கோடிக்கணக்கான ரூபாய்கள் பிரித்துக் கொடுக்கப்பட்டிருப்பதான பட்டியலை கைப்பற்றியிருக்கிறது வருமான வரித்துறை. ஈரோட்டில் டாஸ்மாக் லாரி ஒப்பந்ததாரர் சச்சிதானந்தம் என்பவர் வீட்டில் 2 கோடி ரூபாய் கைப்பற்றப்பட்டது என்று இன்று காலை தகவல்கள் வந்தன. பணம் கைப்பற்றப்பட்டதோ இல்லையோ இவரைப் போன்ற டாஸ்மாக் தொடர்புடைய பல ஒப்பந்த தாரர்களிடம் இருந்து பல கோடி ரூபாய்களை திமுக நிர்வாகிகளுக்கு கொடுத்த கணக்குகள் கைப்பற்றப்பட்டிருக்கின்றன என்று உறுதிப்படுத்துகிறார்கள் வருமான வரித்துறை அதிகாரிகள்.
இதன் அடுத்த கட்டமாக டெல்லியில் மதுபான கொள்கையில் நடந்த முறைகேடு தொடர்பாக துணை முதல்வர் மணிஷ் சிசோடியாவை விசாரித்து கைது செய்ததைப் போல செந்தில்பாலாஜியையும் விசாரிக்க முடிவு செய்துவிட்டது அமலாக்கத்துறை.
செந்தில்பாலாஜிக்கு அமலாக்கத்துறை சம்மன்

ஏற்கனவே போக்குவரத்துக் கழகத்தில் வேலை வாங்கித் தருவதாக மோசடி செய்த வழக்கில் அமலாக்கத்துறை விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. இதன் அடிப்படையில் ஜூன் முதல் வாரத்தில் செந்தில் பாலாஜியையும், அவரது தம்பி அசோக் குமாரையும் சம்மன் அனுப்பி விசாரணைக்கு வரவைக்க திட்டமிட்டிருக்கிறது அமலாக்கத்துறை.
செந்தில் பாலாஜியை சென்னை அமலாக்கத்துறை அலுவலகத்துக்கும், அவரது தம்பியை டெல்லி அலுவலகத்துக்கும் வர வைத்து விசாரணை நடத்த சம்மன் அனுப்பும் ஏற்பாடுகள் நடந்து வருவதாகச் சொல்கிறார்கள். அப்போது இந்த டாஸ்மாக் பணப் பரிமாற்றம் பற்றியும் விசாரணை நடத்தப்படலாம் என்கிறார்கள்” என்கிற மெசேஜுக்கு செண்ட் கொடுத்து ஆஃப் லைன் போனது வாட்ஸ் அப்.
தலைமை நீதிபதி பதவியேற்பு : முதல்வர் வருவதற்குள் ஆளுநருக்கு என்ன அவசரம்?