அமலாக்கத் துறை மாறி மாறி பேசுகிறது: என்.ஆர்.இளங்கோ
அமைச்சர் செந்தில் பாலாஜி மனைவி தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனுவை இன்று (ஜூன் 22) விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் வழக்கை ஜூன் 27ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தது.
இந்த வழக்கில் ஆஜரான பிறகு நீதிமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செந்தில் பாலாஜி மனைவி தரப்பு வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ “அமலாக்கத் துறை இந்த மனு நிலைக்கத்தக்கது அல்ல என்று உச்ச நீதிமன்றத்தில் நேற்று தெரிவித்தது. இதை விசாரித்த உச்ச நீதிமன்றம், இந்த விவகாரம் குறித்து உயர் நீதிமன்றம் தீர்மானிக்கும் என்று கூறியது. இதனால் இன்று இந்த ஆட்கொணர்வு மனு விசாரணைக்கு உகந்ததா இல்லையா என முக்கியமாக எடுத்து வைத்தோம்.
இதுவரை உச்ச நீதிமன்றம் கொடுத்த தீர்ப்புகளில் ஆட்கொணர்வு மனு விசாரிக்கும் தேதியில் ஏதாவது நீதிமன்றத்தினால் ஒருவர் நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தியிருந்தால் அந்த உத்தரவு சட்டவிரோதமாகவோ அல்லது இயந்திரத்தனமாகவோ வழங்கப்பட்டிருந்தால் ஆட்கொணர்வு மனு நிலைக்கத்தக்கது என முன் தீர்ப்புகளை வைத்து வாதாடினோம்.
இரண்டாவதாக செந்தில் பாலாஜி மருத்துவமனையில் இருக்கும் காலத்தினை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்கும் போது கழித்து கொள்ள வேண்டுமா? இல்லையா என்ற வாதம் வந்தது.
அதற்கும் உச்ச நீதிமன்ற தீர்ப்புகளை முன்காட்டி, முதல் 15 நாட்களை மீறி போலீஸ் காவல் தரமுடியாது என்று வாதம் எடுத்து வைத்தோம்.
இந்தியாவில் உள்ள சுங்கச் சட்டம், வருமான வரிச்சட்டம், ஜிஎஸ்டி சட்டம் ஆகிய வழக்குகளை விசாரிக்கக் கூடிய அதிகாரிகளுக்கு ஒரு போலீஸ் அதிகாரி என்கிற அதிகாரத்தை அந்தந்த சட்டமே கொடுத்திருக்கிறது.
ஆனால் நாடாளுமன்றம் பணமோசடி தடுப்புச் சட்டத்தை உருவாக்கும் போது அமலாக்கத் துறை அதிகாரிகள் போலீஸ் அதிகாரிகள் என்று வரையறை செய்யவில்லை. அந்த அடிப்படையில் அமலாக்கத் துறை அதிகாரிகள் பணமோசடி தடுப்புச் சட்ட வழக்குகளை புலன் விசாரணை செய்யும்போது போலீஸ் காவலில் எடுக்க அதிகாரமே இல்லை என்ற வாதத்தை எடுத்து வைத்திருக்கிறோம்.
இந்த வாதங்களுக்கு வரும் ஜூன் 27ஆம் தேதி அமலாக்கத் துறை வழக்கறிஞர் துஷார் மேத்தா பதிலளிப்பார்” என்று கூறினார்.
மேலும் அவர், “அமலாக்கத் துறை வசதிக்கு ஏற்றவாறு வாதிடுகிறது. சில நேரங்களில் குற்றவியல் நடைமுறை சட்டம் எங்களுக்கு பொருந்தாது என்கிறார்கள். சில சமயங்களில் பொருந்தும் என்கிறார்கள் அதுபோன்று ஒருசில சமயம் நாங்கள் போலீஸ் அதிகாரி என்கிறார்கள். சில சமயம் இல்லை என்கிறார்கள்.
அமலாக்கத் துறை வாதத்தின் படி, செந்தில் பாலாஜியிடம் காலை 9.30 மணியில் இருந்து இரவு 11மணி வரை விசாரித்துவிட்டு கையொப்பம் பெற்றுவிட்டார்கள். அதன்பிறகு அதிகாலை 2மணி வரை அவர்கள் செந்தில் பாலாஜியிடம் என்ன விசாரணை நடத்தினார்கள், அவர் எவ்வாறு கையாளப்பட்டார் என்பது குறித்து அமலாக்கத் துறை இருட்டடிப்பு செய்து கொண்டிருக்கிறது. அதைத்தான் விசாரிக்க வேண்டும் என்று சொல்லியிருக்கிறோம். அதிகாலை ஜூன் 14 காலை 1.58 மணிக்கு கைது செய்திருக்கிறார்கள்.
அவர் துன்புறுத்தப்பட்டிருக்கிறார். மோசமாக கையாண்டிருக்கிறார்கள். நாங்கள் போலீஸ் அதிகாரிகள் இல்லை என்று அமலாக்கத் துறையே சொல்லும் போது, அவர்கள் எப்படி போலீஸ் காவலில் எடுக்க முடியும்.
செந்தில் பாலாஜி மீது 2015ல் முதல்நோக்கு வழக்குகள் பதியப்பட்டிருக்கிறது. அப்போது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டிருக்கிறது. ஆனால் 2021ல் திமுக ஆட்சிக்கு வந்த பிறகுதான் பணமோசடி வழக்கு பதிவு செய்யப்படுகிறது. எனவே இதில் உள்நோக்கம் இருக்கிறது. நியாயமான புலன் விசாரணை நடப்பதற்கு வாய்ப்பே இல்லை.
செந்தில் பாலாஜி விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை என்று பொய்யான கருத்தை சொல்கிறார்கள். இவருக்கு 5 முறை சம்மன் அனுப்பியிருக்கிறது. ஒரு முறை செந்தில் பாலாஜி நேரில் ஆஜராகியுள்ளார். 3 முறை ஆவணங்கள் மட்டும் கேட்டதால் செந்தில் பாலாஜியின் ஆடிட்டர் உரிய ஆவணங்களுடன் ஆஜராகினார். கடைசி சம்மன் வந்த போது அது சட்டவிரோதமாக இருக்கிறது என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் முறையிடப்பட்டது. எனவே அதற்கு சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்தது, அந்த தடையை தான் உச்ச நீதிமன்றம் நீக்கியது. எனவே செந்தில் பாலாஜி ஆஜராகவே இல்லை என்று தவறான கருத்தை முன்வைக்கிறது.
சட்டப்பிரிவு 21ஏ என்பது குற்றவியல் நடைமுறை சட்டத்தில் ஏற்படுத்தப்பட்ட ஒரு வழிமுறை. அதை கடைபிடித்தே ஆக வேண்டும். இதை உச்ச நீதிமன்றமே சொல்லியிருக்கிறது. இந்த வாதத்தையும் முன்வைத்தோம்.
ஒருவர் பொய் கூறி பைபாஸ் சர்ஜரி செய்து கொள்வாரா? யார் பொய் சொல்கிறார்கள் என்று அமலாக்கத் துறைதான் சொல்ல வேண்டும்” என்று கூறினார் என்.ஆர்.இளங்கோ.
பிரியா