அமலாக்கத் துறை விசாரணை என்றால் நெஞ்சு வலி வருமா?: ஜெயக்குமார் கேள்வி!

Published On:

| By Kavi

செந்தில் பாலாஜிக்கு அமலாக்கத் துறை விசாரணை என்றால் நெஞ்சு வலி வருமா? என்று ஜெயக்குமார் கேள்வி எழுப்பியுள்ளார்.

அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான அமலாக்கத் துறை நடவடிக்கை குறித்து அதிமுக சார்பில் ஜெயக்குமார் இன்று (ஜூன் 14) காலை சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் பேசுகையில், “பல நாள் திருடன் ஒரு நாள் அகப்படுவான் என்பது போல 2 ஆண்டுகளில் கோடி கோடியாக கொள்ளையடித்த அமைச்சர் செந்தில் பாலாஜி விஷயத்தில் இன்று நாடே கைத்தட்டி சிரிக்கிறது.


அவர் பொறுப்பேற்ற இரண்டு ஆண்டுகளில் கள்ளச்சாராய சாவுகள் நடந்தன. 2 ஆயிரம் சட்ட விரோத டாஸ்மாக் பார்கள் மூலம் 20 ஆயிரம் கோடி ரூபாய் கொள்ளையடித்துள்ளார். அரசின் கோடிக்கணக்கான வருவாய் ஒரே குடும்பத்துக்கு சென்றுள்ளது. இதனால் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.
டாஸ்மாக்கில் இருந்து வரும் டர்ன் ஓவரில் இருந்தும் மாதம் 50, 60 கோடி ரூபாய் கொள்ளை அடித்திருக்கிறார்.

சில்லறை விற்பனையில் ஒரு பாட்டிலுக்கு 10 ரூபாய் கூட வைத்து விற்பனை செய்துள்ளனர். இந்நிலையில் சட்டப்பூர்வமாக வருமான வரித்துறையும், அமலாக்கத் துறையும் நடவடிக்கை எடுத்திருக்கிறது.

முதல்வர் ஸ்டாலினும், செந்தில் பாலாஜியும் நகையும் சதையும் போன்றவர்கள். அதனால் ஸ்டாலின் துடிதுடித்து போயிருக்கிறார். அண்ணாநகர் மோகன், கார்த்திக் வீட்டில் ரெய்டு நடந்த போது ஏன் துடிக்கவில்லை.

இவர்களை பற்றி விஷயம் தெரிந்தவர் அமலாக்கத் துறையில் மாட்டிக்கொண்டார். ஒத்துழைப்பு தருகிறோம் என்று கூறிய செந்தில் பாலாஜி கைதாக வேண்டியது தானே.
மாநகராட்சி தேர்தலில் கள்ள ஓட்டு போட்டவரை பிடித்து கொடுத்ததற்காக என் மீது 5 எப்.ஐ.ஆர் போட்டு, 20 நாள் உள்ளே இருந்தேன். நான் ஒத்துழைப்பு கொடுத்தேன்.

நீதிமன்றத்தில் என்னை மருத்துவமனைக்கு அழைத்து சென்றதாக போலீஸ் சொன்னது. ஆனால் மருத்துவமனைக்கு அழைத்து செல்லவில்லை. இரண்டு மணி நேரமாக சென்னையை சுற்றி காண்பித்து அதன்பிறகு இரவு 12.30 மணியளவில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

நேற்று வரை நன்றாக வாக்கிங் சென்றிருக்கிறார். எப்படி திடீரென நெஞ்சுவலி வரும். அமலாக்கத் துறை விசாரணை என்றால் நெஞ்சு வலி வருமா?
அமலாக்கத் துறை எய்ம்ஸ் மருத்துவமனையை கொண்டு செந்தில் பாலாஜியை பரிசோதித்து அடுத்தக்கட்ட நடவடிக்கையை எடுக்க வேண்டும்.

செந்தில் பாலாஜி நேற்று கடமையை செய்ய வந்த போலீசாரை எட்டி உதைத்திருக்கிறார். நெஞ்சு வலி உள்ள ஒருவரால் எப்படி எட்டி உதைக்க முடியும். கஸ்டடியில் எடுக்கும் போது மட்டும் நெஞ்சு வலி வந்துவிடுமா. அவருடன் அதிமுகவில் இருந்து போன நாகராஜ் இருந்தார்.

அவருக்கு மருத்துவம் தெரியாது. ஆனால் அவர்போய் ஹார்ட்டை பம்ப் செய்கிறார். அவரால் எப்படி இதை செய்ய முடியும். மருத்துவர்களை கேட்டுப்பாருங்கள், மருத்துவம் தெரியாதவர்கள் இப்படி செய்யக் கூடாது. எந்தவகையில் இவர்கள் செந்தில் பாலாஜியை டீல் செய்தார்கள் என்று தெரியவில்லை” என்று குறிப்பிட்டார்.


தொடர்ந்து முதல்வர் ஸ்டாலின் எதிர்க்கட்சித் தலைவராக இருந்த போது பேசிய வீடியோ ஒன்றை போட்டு காண்பித்தார் ஜெயக்குமார். அதில், ‘வருமான வரித்துறைக்கு தனி அதிகாரிகள் தனி சட்டம் இருக்கிறது என்பது எல்லோருக்கும் தெரியும்.

அந்த அடிப்படையில் ஆதாரங்கள் இருந்த காரணத்தால் தலைமை செயலகத்தில் சோதனை நடத்தியிருப்பதாக செய்திகள் வருகிறது. இதுகுறித்து கோட்டையில் இருக்கக் கூடிய முதல்வரை சென்று கேளுங்கள்’ என்று ஸ்டாலின் கூறியுள்ளார்.


இந்த வீடியோவை குறிப்பிட்டு முதல்வரை போய் கேளுங்கள் என்று கூறிய ஜெயக்குமார், ஸ்டாலின் ட்வீட் ஒன்றையும் படித்து காண்பித்தார்.

“தலைமை செயலாளர் வீட்டில் வருமான வரித்துறை சோதனை என்பது தமிழ்நாட்டை தலை குனிய வைத்துள்ளது” என்று ஸ்டாலின் கூறியுள்ளார். அப்படி பார்த்தால், இப்போது விடியாத ஆட்சியில் தமிழகம் தலை குனிந்துவிட்டதா?” என கேள்வி எழுப்பினார்.

தொடர்ந்து, ஆவணங்களில் இடம் பெற்றுள்ள முதல்வர் மற்றும் அமைச்சர்களை ராஜினாமா செய்ய உத்தரவிட வேண்டும். கவர்னருக்கு கடிதம் எழுதியிருப்பதாக அப்போது ஸ்டாலின் சொல்லியிருக்கிறார். அப்படி பார்த்தால் இப்போது செந்தில் பாலாஜியை டிஸ்மிஸ் செய்ய வேண்டியதுதானே. எதற்காக அமைச்சர்களை அனுப்பி வைத்து கொண்டிருக்கிறார்.

ஐசியுவில் இருப்பவர்களை பெரும்பாலும் யாரையும் பார்க்க அனுமதிக்கமாட்டார்கள். தற்போது செந்தில் பாலாஜி அமலாக்கத் துறை கஸ்டடியில் இருக்கிறார். அமலாக்கத் துறை தன்னுடையை கடமையை செய்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் ஒரு குற்றவாளியை போய் அமைச்சர்கள் பார்க்கலாமா? இது சட்டத்தை மீறிய செயல்.

எனவே செந்தில் பாலாஜியை ஸ்டாலின் டிஸ்மிஸ் செய்யவில்லை என்றால், ஆளுநர் ராஜினாமா செய்ய உத்தரவிட வேண்டும்” என்று குறிப்பிட்டார்.


“அதுபோன்று மருத்துவ சிகிச்சையை பொறுத்தவரை, எய்ம்ஸ் நிபுணர்கள் சிகிச்சை அளிக்க வேண்டும். ஓமந்தூரார் மருத்துவர்களும் அரசுக்கு உதவக் கூடாது. அப்படி உதவினால் அவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கூறியது போல அந்த 30 ஆயிரம் கோடி ரூபாய் குறித்தும் விசாரிக்க வேண்டும்” என்றார் ஜெயக்குமார்.

செந்தில் பாலாஜியை அன்று விமர்சனம் செய்துவிட்டு இன்று அவரை அமைச்சரவையில் உட்கார வைத்திருக்கிறார் ஸ்டாலின் என்று கூறிய ஜெயக்குமார், “உச்ச நீதிமன்ற உத்தரவு படி அமலாக்கத் துறை நடவடிக்கை எடுத்திருக்கிறது. போலீசாரை எட்டி உதைத்ததற்காக செந்தில் பாலாஜி மீது எப்.ஐ.ஆர் போட வேண்டும்” என்றார்.

அதிமுக ஆட்சியில் அவர் மோசடி செய்ததாகத் தான் வழக்குத் தொடரப்பட்டுள்ளது என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

இதற்கு பதிலளித்த ஜெயக்குமார், “2015ல் மோசடி செய்திருக்கிறார். தனி நபராக அந்த மோசடியை செய்திருக்கிறார். அவர் மீது ஜெயலலிதா நடவடிக்கை எடுத்தார். 2018ல் எடப்பாடி ஆட்சி காலத்தில் தான் வழக்கு போடப்பட்டது. இந்த விவகாரத்தை பொறுத்தவரை திமுக திசை திருப்ப பார்க்கிறது” என்று விளக்கமளித்தார்.


பிரியா

செந்தில்பாலாஜியை சந்திக்க புறப்பட்டார் முதல்வர்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share