ராஜன் குறை
இந்திய அரசியலமைப்பு சட்டத்தை உருவாக்கிய அம்பேத்கர் அதனை நடைமுறைப்படுத்துவதில்தான் அதன் உயிர் இருக்கிறது என்று கூறினார். எந்த சட்டமுமே அதை தவறாகப் பயன்படுத்துபவர்களால் ஒரு மோசமான ஆயுதமாக மாற்றப்பட முடியும். அதிலும் கடுமையான குற்றங்களைத் தடுப்பதற்காக உருவாக்கப்படும் கடுமையான சட்டங்கள் ஒரு எதேச்சதிகார ஆட்சியின் கையில் மோசமான ஆயுதமாக மாறிவிடும்!
சென்ற வாரம் தலைநகர் டெல்லியில் அதன் முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டது நாடெங்கும் அதிர்ச்சி அலைகளை உருவாக்கியுள்ளது. ஆட்சியில் இருக்கும் மாநில முதல்வரை கைது செய்யுமளவு என்ன தீவிரமான ஒரு குற்றத்தை அவர் செய்துள்ளார் என்பது முதல் கேள்வி.
அதிலும் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நேரத்தில் டெல்லி, பஞ்சாப் ஆகிய இரு மாநிலங்களில் ஆட்சியிலுள்ள ஆம் ஆத்மி கட்சி, ஒன்றிய அரசில் ஆளும்கட்சியான பாஜக கட்சிக்கு எதிரான கூட்டணியில் இடம் பெற்று தேர்தலைச் சந்திக்கவுள்ள நேரத்தில் அதன் தலைவரான அரவிந்த் கேஜ்ரிவாலை அவசரமாக கைது செய்ய வேண்டிய தேவை என்ன என்பதே அந்தக் கேள்வியின் முழு வடிவம்.
அரசியல் உள்நோக்கம் காரணமாகவே பாஜக அரசு அமலாக்கத்துறையைப் பயன்படுத்தி இந்த கைது நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது என்பதே அரசியல் நோக்கர்கள், சிந்தனையாளர்கள், எதிர்க்கட்சியினர் குற்றச்சாட்டாக உள்ளது. இதனை நாம் விரிவாக புரிந்துகொள்ள வேண்டும்.
மதுபான விற்பனைக் கொள்கை: வழக்கின் முன் வரலாறு
டெல்லியில் மதுபான விற்பனையை முறைப்படுத்த ஆம் ஆத்மி அரசு ஒரு புதிய சட்டத்தை 2021ஆம் ஆண்டு நவம்பர் மாதம் அறிமுகப்படுத்தியது. ஆளுநர் சக்சேனாவும் இதற்கு ஒப்புதல் அளித்தார். எதிர்க்கட்சிகள் ஆம் ஆத்மி அரசு டெல்லியில் மதுபானத்தை அளவுக்கதிகமாக ஊக்குவிப்பதாக குற்றம் சாட்டியதால் 2022 ஜூலை மாதம் அந்தச் சட்டம் திரும்பப் பெறப்பட்டது.
அதற்கு அடுத்த மாதம் இந்தச் சட்டத்தை உருவாக்கியதிலும், அமல்படுத்தியதிலும் பல முறைகேடுகள் நடந்திருப்பதாக சி.பி.ஐ, துணை முதல்வர் மனிஷ் சிசோதியா உட்பட பதினைந்து பேர் மீது வழக்கு பதிவு செய்தது.
பல கட்ட விசாரணைகளுக்குப் பிறகு சி.பி.ஐ 2023 பிப்ரவரி மாதம் மனிஷ் சிசோதியாவை கைது செய்தது. மார்ச் மாதம் அமலாக்கத்துறை அவரை மீண்டும் கைது செய்தது. மே மாதம் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.
மனிஷ் சிசோதியாவுடன் சத்யேந்திர ஜெயின் என்ற மற்றோர் அமைச்சரும் கைது செய்யப்பட்டுள்ளார். தொடர்ந்து அமலாக்கத்துறை குற்றப்பத்திரிகைகளைத் தாக்கல் செய்து வருகிறது. அதனால் இரண்டு அமைச்சர்களுக்கும் பிணை மறுக்கப்பட்டு வருகிறது.
கடந்த அக்டோபர் மாதம், மனிஷ் சிசோதியா எட்டு மாதங்கள் சிறையில் கழித்து விட்ட நிலையில் பிணை கோரி உச்ச நீதிமன்றத்தை நாடினார். அப்போது நீதிபதி கண்ணா அமலாக்கத்துறையை நோக்கி பல கேள்விகளை எழுப்பினார். மனிஷ் சிசோதியாவை குற்றம்சாட்ட வலுவான ஆதாரங்கள் உள்ளனவா என்று கேட்டார்.
மதுபான மொத்த விற்பனையாளர்கள் கொடுத்த பணம் ஆம் ஆத்மி கட்சியின் கோவா தேர்தல் செலவுக்குப் பயன்பட்டது என்பதை எப்படி நிரூபிப்பீர்கள் என்று கேட்டார். அப்படிச் செய்திருந்தால் கட்சி குற்றவாளியா, மனிஷ் சிசோதியா குற்றவாளியா என்றும் கேட்டார்.
இப்படியெல்லாம் பல ஐயங்களை ஏற்படுத்தினாலும் மனிஷ் சிசோதியாவுக்கு பிணை வழங்கப்படவில்லை. ஆறு மாதங்களுக்குள் வழக்கை நடத்தி முடிப்பதாகவும், அதற்கு மேல் தாமதமானால் மனிஷ் சிசோதியா மீண்டும் பிணை கோரலாம் என்றும் அமலாக்கத்துறை உறுதியளித்தது. அதன்பின் ஆறு மாதங்கள் கடந்துவிட்டன. எந்த வழக்கும் நடக்கவில்லை; குற்றச்சாட்டும் நிரூபிக்கப்படவில்லை.
அரவிந்த் கேஜ்ரிவாலுக்கு சம்மன்
ஓராண்டாக பிணை வழங்கப்படாமல் சிறையில் உள்ள முன்னாள் துணை முதல்வர் மனிஷ் சிசோதியாவுக்கு எதிராக சாட்சியங்களைச் சமர்ப்பித்து வழக்கில் தண்டனை வாங்கித் தரவில்லை அமலாக்கத்துறை. ஆனால், அதே வழக்கில் முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவாலை விசாரிக்க வேண்டும் என்று சம்மன் அனுப்பியது.
அரவிந்த் கேஜ்ரிவால் வழக்கு ஏற்கனவே நிலுவையில் இருப்பதால்தான் விசாரணைக்கு வர முடியாது என்று கூறி விட்டார். அவர் முதலில் குற்றப்பத்திரிகையில் சேர்க்கப்படவில்லை. மனிஷ் சிசோதியா ஆதாரங்களைக் கலைத்துவிடுவார் என்று கூறித்தான் பிணையின்றி ஓராண்டாக சிறையில் உள்ளார். கையூட்டாகப் பெற்ற பணம் கட்சி தேர்தலில் செலவழித்தது என்றால் அர்விந்த் கேஜ்ரிவால் அந்த ஆதாரங்களை அழிக்க மாட்டாரா, கலைக்க மாட்டாரா? அப்படியானால் ஒட்டுமொத்தமாக கட்சிக்காரர்கள் அனைவரையும் ஆதாரங்கள் கிடைக்கும் வரை சிறையில் அடைத்து விடுவார்களா?
அப்ரூவர் சரத் ரெட்டி அம்பலமான கதை
அரபிந்தோ ஃபார்மா என்ற நிறுவனத்தின் இயக்குநரான சரத் ரெட்டி என்பவர் 2022ஆம் ஆண்டு இதே மதுபான முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்டார். 2023 ஜூலை மாதம் அப்ரூவராக மாறினார். அவர் ஒட்டுமொத்த ஊழல்/முறைகேட்டை விளக்குவார் என்பதால் அவருக்கு மன்னிப்பு வழங்க வேண்டும் என்று முறையிட்டது அமலாக்கத்துறை. அதன்படியே அவர் விடுவிக்கப்பட்டார். அவர் ஆம் ஆத்மி கட்சிக்குக் கொடுத்த நூறு கோடி ரூபாய் கோவா தேர்தலில் பயன்படுத்தப்பட்டது என்பதுதான் வழக்கு.
கடந்த வாரம் தேர்தல் பத்திரங்கள் குறித்த முழு விவரங்களும் வெளியானபோதுதான் ஒரு திடுக்கிடும் தகவல் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. அது என்னவென்றால் அவர் கைதான உடன் ஐந்து கோடி ரூபாய்க்கான தேர்தல் பத்திரங்களை வாங்கி அவர் பாஜக-வுக்கு அளித்துள்ளார் என்பதுதான் அது. அது மட்டுமன்றி, அவர் மொத்தத்தில் 55 கோடி ரூபாய் பாஜக-வுக்கு நன்கொடையாக தேர்தல் பத்திரங்கள் மூலம் கொடுத்துள்ளார் என்பதும் தெரியவந்துள்ளது.
ஆம் ஆத்மி கட்சிக்கு அவர் நூறு கோடி ரூபாய் கொடுத்தார் என்றே வைத்துக்கொண்டாலும், அது கோவா தேர்தலில் பயன்படுத்தப்பட்டது என்றே வைத்துக்கொண்டாலும், அது ஊழல் என்றால், கைது செய்யப்பட்ட ஒரு நபர் பாஜக கட்சிக்குத் தேர்தல் பத்திரம் மூலம் நன்கொடை தருவது மட்டும் ஊழல் இல்லையா என்று கேட்கிறார்கள் ஆம் ஆத்மி கட்சியினர். அமைச்சர் ஆடிஷி பாஜக தலைவர் நட்டா கைது செய்யப்பட வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார்.
சரத் ரெட்டி மட்டுமல்லாமல், அமலாக்கத்துறை சோதனைக்கு உள்ளான பலரும், தேர்தல் பத்திரங்கள் மூலம் பாஜக-வுக்கு நன்கொடை கொடுத்துள்ளது அம்பலமாகியுள்ளது. இந்த விவரங்கள் தேர்தல் நேரத்தில் வெளிவந்து விடக் கூடாது என்றுதான் ஸ்டேட் பேங்க் ஆறு மாதங்கள் அவகாசம் கேட்டது. உச்ச நீதிமன்றம் கறாராக மறுத்துவிட்டால் வேறு வழியில்லாமல் தகவல்கள் வெளியாகியுள்ளன.
அமலாக்கத்துறை என்பதை ஆங்கிலத்தில் சுருக்கமாக ED என்று குறிப்பிடுகிறோம். அதன் விரிவு Enforcement Directorate என்பதாகும். அதாவது சட்டத்தை அமல்படுத்தும் துறை. அது இவ்வாறு ஒன்றிய ஆளும்கட்சி பாஜக-வுக்கு தேர்தல் நிதி வசூலிக்க உதவுவது போல இயங்குவதால் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அதனை Extortion Directorate, அதாவது பணம் தண்டால் வாங்கும் துறை என்று அழைத்துள்ளார்.
டி.ஆர்.எஸ் தலைவர் மகள் கவிதாவும் கைதானார்
ஆம் ஆத்மிக்கு நூறு கோடி ரூபாய் பணம் கொடுக்கப்பட்ட வழக்கில் தெலங்கானா ராஷ்டிர சமிதியின் தலைவர் சந்திரசேகர ராவின் மகள் கவிதாவும் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் ஆம் ஆத்மி தலைவர்களுடன் சேர்ந்து சதி செய்து, மதுபான கம்பெனிகளிடமிருந்து பணம் பெற்றுத் தருவதில் இடைத்தரகராகச் செயல்பட்டதாக குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.
இப்படி முக்கியமான எதிர்க்கட்சி தலைவர்களையெல்லாம் கைது செய்ய போதிய ஆதாரம் இருக்கிறதா என்பது முக்கியமான கேள்வி. அப்படி ஆதாரம் இருந்தால் ஒரு வருடமாக சிறையில் இருக்கும் மனிஷ் சிசோதியா மற்றும் அவருடன் கைது செய்யப்பட்டவர்களுக்கு முதலில் தண்டனை வாங்கித் தரலாமே என்றுதான் பார்வையாளர்கள் கேட்கின்றனர்.
அமலாக்கத்துறை ஒரு தொழிலதிபரை கைது செய்து, அவரிடமிருந்து பாஜக கட்சிக்கு தேர்தல் நன்கொடை கிடைத்தவுடன், அவரை அப்ரூவராக அறிவித்து விடுவித்துவிட்டது என்றால், அவர் வாக்குமூலத்தின் அடிப்படையில் மட்டும் எப்படி இத்தனை பேரை தண்டிக்க முடியும் என்ற ஐயம் ஏற்படுகிறது.
எதிர்க்கட்சிகளை முடக்கும் தந்திரமா?
மக்களாட்சியின் உயிர்மூச்சே தேர்தல்கள்தான். தேர்தலில் தங்களுக்கு சவாலாக உள்ள எதிர்க்கட்சியினர் மீது விசாரணை அமைப்புகளை ஏவுவது, அவர்களை கைது செய்வது போன்ற நடவடிக்கைகள் மூலம் அவர்களை தேர்தலில் ஆளும்கட்சிக்கு எதிராக பிரச்சாரம் செய்ய முடியாமல் தடுக்கிறார்களா என்ற கேள்வி தவிர்க்க முடியாதது.
விசாரணைக் கைதிகளாக பிணையின்றி சிறையில் வைக்கப்படும் பலர், பின்னர் குற்றம் நிரூபிக்கப்படாமல் விடுதலையாகும்போது அவர்கள் சிறையில் கழித்த காலத்துக்கு எந்த நஷ்டஈடும் வழங்கப்படுவதில்லை. அவர்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளாக இருந்தால், அவர்கள் தங்கள் அரசியல் கடமையைச் செய்வதிலிருந்து தேவையின்றி தடுக்கப்படுகிறார்கள். மக்களின் வாக்குகளுக்குப் பொருளின்றிப் போகிறது.
மக்களாட்சி என்பது மக்களின் ஆட்சியும், சட்டத்தின் ஆட்சியுமாகும். ஆனால், சட்டத்தின் பெயரால் மக்களின் பிரதிநிதிகளை முடக்குவதற்கு போதிய ஆதாரமும், நியாயமும் வேண்டும். விசாரணை என்ற பெயரில் ஒரு துணை முதல்வரை, மக்கள் பிரதிநிதியை ஓராண்டுக் காலம் சிறையில் வைத்திருக்கிறது அமலாக்கத்துறை. உச்ச நீதிமன்றமே அவர் மீதான குற்றச்சாட்டுகளை நிரூபிக்க முடியுமா என்று ஐயம் தெரிவித்துள்ளது.
அப்படி இருக்கையில் துணை முதல்வரும், அமைச்சர்களும், அதிகாரிகளும் ஏற்கனவே சிறையில் உள்ள நிலையில் முதலமைச்சரையும் கைது செய்ய வேண்டிய தேவை எப்படி ஏற்படுகிறது என்பது பெரும் புதிராக உள்ளது.
அப்படியே அரவிந்த் கேஜ்ரிவால் மீது ஐயம் இருந்தாலும், இரண்டு மாதங்களில் தேர்தல் முடிந்த பிறகு அவரை விசாரிக்க முடியாதா, கைது செய்ய முடியாதா என்பதையும் சிந்திக்க வேண்டும். குற்றம் நடந்ததாகச் சொல்லப்படுவது இரண்டாண்டுகளுக்கு முன்பு. இத்தனை நாள் கைது செய்யாமல் இருந்தவர்கள் மேலும் இரண்டு மாதங்கள் காத்திருந்தால் என்ன பெரிய இழப்பு ஏற்பட்டு விடும்?
ஒருபுறம் பாஜக 400 தொகுதிகளில் வெல்வோம் என்று அறுதியிட்டுக் கூறுகிறது. அது உண்மையானால் ஏன் எதிர்க்கட்சித் தலைவர்களை தேர்தல் நேரத்தில் விசாரணை அமைப்புகள் மூலம் வேட்டையாட வேண்டும்? ஊடகவியலாளர் ராஜ்தீப் சர்தேசாயும் அதைத்தான் கேட்கிறார்.
ஒருவேளை தோற்றுவிடுவோம் என்ற அச்சத்தில்தான் இதையெல்லாம் செய்கிறதோ பாஜக என்ற கேள்வியும் தவிர்க்க முடியாமல் எழுகிறது. மேற்கு வங்கத்தில் அதை வன்மையாக எதிர்த்துப் பேசும் மஹுவா மொய்த்ரா வீட்டில் சி.பி.ஐ மூலம் சோதனையிடுகிறது. தன்னுடன் கூட்டணி உறவை முறித்துக்கொண்ட அ.இ.அ.தி.மு.க முன்னாள் மந்திரி விஜய்பாஸ்கர் வீட்டில் மீண்டும் சோதனையிடுகிறது.
குற்றச்சாட்டுகள் எதுவாக இருந்தாலும், தேர்தல் நேரத்தில் விசாரணை அமைப்புகள் மூலம் எதிர்க்கட்சிகளை முடக்க நினைப்பது மக்களாட்சி படுகொலை என்றே கூற முடியும். இது போன்ற செயல்கள் தொடர்ந்தால் இந்தியக் கூட்டாட்சி குடியரசு பெரும் சீர்குலைவையே சந்திக்கும்.
அரும்பாடுபட்டு உருவாக்கியுள்ள மாபெரும் மக்களாட்சிக் குடியரசினை தனது குறுகிய நலன்களுக்காக பாஜக பாழ்படுத்தி விடக்கூடாது! அரவிந்த் கேஜ்ரிவாலை விடுதலை செய்வதுடன் தேர்தல் நேரத்தில் எதிர்க்கட்சியினர் செயல்பாடுகளை முடக்கும் எல்லா நடவடிக்கைகளையும் கைவிட வேண்டும்!
கட்டுரையாளர் குறிப்பு:
ராஜன் குறை கிருஷ்ணன் – பேராசிரியர், அம்பேத்கர் பல்கலைக்கழகம், புதுதில்லி. இவரைத் தொடர்புகொள்ள: rajankurai@gmail.com
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
GT Vs MI: எங்களுக்கெல்லாம் ‘ஜாலியா’ தான் இருக்கு… ‘மீம்ஸ்’ போட்டு கிண்டலடிக்கும் ரசிகர்கள்!
GT Vs MI: எதிரிக்கு கூட ‘இப்படி’ ஒரு நிலைமை வரக்கூடாது… கொந்தளிக்கும் ரசிகர்கள்!
காங்கிரஸ் வேட்பாளரை புறக்கணிக்கிறாரா வேல்முருகன்? – நிர்வாகிகள் கூட்டத்தில் நடந்தது என்ன?
IPL 2024: இரண்டாக ‘பிரிந்த’ அணிகள்… எந்த ‘குரூப்ல’ யாரு இருக்காங்கன்னு பாருங்க!