திமுகவின் கட்சி தேர்தல் நடந்து முடிந்து கடந்த அக்டோபர் 9 ஆம் தேதி பொதுக்குழு கூடி தலைமை நிர்வாகிகளும் தேர்ந்தெடுக்கப்பட்டு விட்டனர்.
ஆனால் அக்கட்சியின் 72 மாவட்ட அமைப்புகளில் தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் மட்டும் இன்னும் தேர்ந்தெடுக்கப்படவில்லை. வாசுதேவநல்லூர் கடையநல்லூர் சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கிய தென்காசி வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளராக செல்லதுரை இருந்தார்.
கடந்த உட்கட்சித் தேர்தலில் மாவட்டச் செயலாளர் பதவிக்கு செல்லத்துரை உட்பட சிலர் வேட்பு மனு தாக்கல் செய்த நிலையில்… அந்த மாவட்டத்திற்கு மட்டும் தேர்தல் நடைபெறவில்லை.
மாவட்ட பொறுப்பாளராக இருக்கும் செல்லத்துரைக்கு பதில் தென்காசி எம். பி ஆன தனுஷ் குமாரை மாவட்ட செயலாளர் பதவிக்கு அமர வைக்க அறிவாலயத்தில் முயற்சிகள் நடப்பதாக செல்லத்துரை ஆதரவாளர்கள் அறிவாலய வளாகத்திலேயே போராட்டம் நடத்தினார்கள்.
இதையடுத்து தென்காசி வடக்கு மாவட்ட நிர்வாகிகள் அறிவிப்பு வெளியிடப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டது. மட்டுமல்ல தென்காசி வடக்கு மாவட்ட உட்கட்சி தேர்தலை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கும் தொடுக்கப்பட்டது.
திமுக நிர்வாகியான முத்துக்குமார் என்பவரின் மனைவி விஜய் அமுதா தென்காசி அமர்வு நீதிமன்றத்தில் உட்கட்சித் தேர்தல் தொடர்பாக வழக்கு பதிவு செய்தார்.வழக்கு தீபாவளி முடிந்து வரும் 28 ஆம் தேதி விசாரணைக்கு வரும் நிலையில்…
தென்காசி வடக்கு மாவட்ட திமுக செயலாளர் பதவிக்கு தற்போதைய சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினரான ராஜா நியமிக்கப்பட இருப்பதாக அறிவாலய வட்டாரத்தில் இருந்து தகவல்கள் கசிகின்றன.
இளைஞரான சங்கரன்கோவில் எம். எல். ஏ. ராஜா பளு தூக்கும் வீரரும் கூட. சமீபத்தில் துருக்கி தலைநகரான இஸ்தான்புல் நகரில் நடைபெற்ற ஆசிய அளவிலான பளு தூக்கும் போட்டியில் ராஜா வந்து கொண்டு வெண்கலப் பதக்கத்தை வென்றார்.
தென்காசி வடக்கு மாவட்டத்திற்கு எம். பி தனுஷ் குமாரை மாவட்ட செயலாளராக கொண்டு வருவதற்கு பலத்த எதிர்ப்பு நிலவும் நிலையில்… ராஜாவை மாவட்ட செயலாளராக ஆக்கலாம் என தலைமை கழகம் முடிவு செய்துள்ளது.
ஆனால் இவர் இப்போது சட்டமன்ற உறுப்பினராக இருக்கும் சங்கரன்கோவில் தொகுதி தென்காசி தெற்கு மாவட்டத்துக்குள் வருகிறது.
எனவே தென்காசி வடக்கு மாவட்டத்தோடு சங்கரன்கோவில் சட்டமன்ற தொகுதியை இணைத்து இவரை மாவட்ட செயலாளராக ஆக்குகிறார்கள்.
அதேநேரம் தென்காசி தெற்கு மாசெவாக இருக்கும் சிவபத்மநாதனின் வெயிட்டை குறைக்காமல் இருப்பதற்காக வடக்கு மாவட்டத்தில் இருந்த கடையநல்லூர் தொகுதியை தென்காசி தெற்கு மாவட்டத்தோடு இணைக்கிறார்கள்.
எனவே இப்போது தென்காசி தெற்கு மாவட்டத்தில் தென்காசி, ஆலங்குளம், கடையநல்லுர் ஆகிய மூன்று தொகுதிகளும், தென்காசி வடக்கு மாவட்டத்தில் சங்கரன்கோவில், வாசுதேவ நல்லூர் ஆகிய இரு தொகுதிகளும் இடம்பெறுகின்றன.
திமுக துணை பொது செயலாளர் கனிமொழி, மாவட்ட பொறுப்பு அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் ஆகியோரிடம் நடத்தப்பட்ட ஆலோசனைக்கு பிறகு தலைமை கழகம் இந்த முடிவுக்கு வந்திருப்பதாக தெரிகிறது” என்கிறார்கள் அறிவாலயத்தில்.
–ஆரா
டிஜிட்டல் திண்ணை: திமுகவில் தீபாவளி பட்டுவாடா!
இம்ரான் கான் 5 ஆண்டு தேர்தலில் நிற்க தடை!