ஒருபக்கம் ரஷ்யாவுடன் கடுமையாக மோத உக்ரைனுக்கு உதவிகளை திரட்டும் அமெரிக்கா, மறுபக்கம் கிழக்கு உக்ரைனை முழுமையாகக் கைப்பற்றும் முனைப்பில் ரஷ்யா, இவை அனைத்துக்கும் தீர்வு காணும் வகையில் ஐநாவின் சமாதான முயற்சி என ஒரே நேரத்தில் பல திசைகளில் பயணிக்கிறது ரஷ்யா – உக்ரைன் இடையிலான போர்.
இந்த சூழ்நிலையில் ரஷ்யா – உக்ரைன் போர் எப்போது முடிவுக்கு வரும் என்பதே உலக நாடுகளின் எதிர்பார்ப்பாக உள்ளது.
கடந்த 10 மாதங்களாக நடைபெற்றுவரும் ரஷ்யா-உக்ரைன் போர் குறித்து பல்வேறு அதிர்ச்சி தரும் செய்திகள் வெளியாகி வரும் நிலையில், ஐநா சபையின் மனித உரிமைகளுக்கான ஆணையத்தின் அறிக்கை ஒன்று கடந்த வாரம் வெளியாகியிருக்கிறது.
அதில், உக்ரைன் மீது ரஷ்யா தொடுத்திருக்கும் போரால் உக்ரைன் நாட்டைச் சேர்ந்த அப்பாவிப் பொதுமக்கள் 6,884 பேர் உயிரிழந்ததாகவும், 10,947 பேர் காயமடைந்ததாகவும் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
‘போரில் கொல்லப்பட்ட 6,884 பேரில் 2,719 பேர் ஆண்கள், 1,832 பேர் பெண்கள், 391 பேர் குழந்தைகள். மீதமுள்ள 1,942 பேரின் பாலினம் தெரியவில்லை’ என்கிறது அந்த அறிக்கை.
உக்ரைனின் டொனட்ஸ்க், லுஹான்ஸ்க் ஆகிய இரு பிராந்தியங்களில்தான் அதிகமானோர் போரால் உயிரிழந்திருக்கிறார்கள். அங்கு, 4,052 பேர் கொல்லப்பட்டதாகவும், 5,643 பேர் காயமடைந்ததாகவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
போரின் தீவிரம் அதிகமிருக்கும் பகுதிகளில் உயிரிழப்புகளும் பாதிப்புகளும் இன்னும் அதிகமிருக்கலாம் என்றும், அது பற்றிய முழுமையான விவரங்கள் கிடைக்கவில்லை என்றும் செய்தி நிறுவனங்கள் தெரிவிக்கின்றன.
கடந்த பிப்ரவரி மாதம் போர் தொடங்கியதிலிருந்து இன்றுவரை உக்ரைன் ராணுவ வீரர்கள் 10,000 – 13,000 பேர் உயிரிழந்ததாக உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கியின் ஆலோசகர் மைகைலோ தெரிவித்திருக்கிறார்.
ஆனால், ‘ரஷ்யா – உக்ரைன் என இரு தரப்பிலும் இரண்டு லட்சம் ராணுவ வீரர்கள் உயிரிழந்திருக்கிறார்கள்’ என்று அமெரிக்கா சொல்கிறது.
அமெரிக்காவின் மூத்த ராணுவ அதிகாரி மார்க் மில்லே, “உக்ரைன் ராணுவ வீரர்கள் ஒரு லட்சம் பேரும், ரஷ்ய ராணுவ வீரர்கள் ஒரு லட்சம் பேரும் போரில் உயிரிழந்திருக்கிறார்கள்” என்று தெரிவித்திருக்கிறார்.
அதே நேரத்தில், உக்ரைன், ரஷ்யா ஆகிய இரு நாடுகளும் தங்கள் தரப்பில் உயிரிழந்த ராணுவ வீரர்களின் எண்ணிக்கை குறித்து அதிகாரபூர்வமான புள்ளிவிவரங்களை வெளியிடவில்லை.
இந்தச் சூழலில், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுடன், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி சமீபத்தில் தொலைபேசி வாயிலாக உரையாடியிருக்கிறார். அப்போது, “உக்ரைனில் நடந்துவரும் மோதலை, பேச்சுவார்த்தை மூலம் மட்டுமே முடிவுக்குக் கொண்டுவர முடியும்’’ என்று புதினிடம் மோடி தெரிவித்திருக்கிறார்.
இதற்கு, “இந்த விவகாரத்தில், இந்தியாவின் கவலைகள் குறித்து எனக்குத் தெரியும். போரை விரைவில் முடிவுக்குக் கொண்டுவர ரஷ்யா அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ளும்” என்று புதின் பதிலளித்திருந்தார்.
தற்போது, “ரஷ்ய அதிபர் உண்மையிலேயே உக்ரைன் – ரஷ்யா போரை முடிவுக்குக் கொண்டுவர விரும்பினால், அதற்கான வழியைத் தேடுவதில் அவருக்கு ஆர்வம் இருந்தால், புதினுடன் பேசுவதற்கு நான் தயார்” என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடனும் அறிவித்திருக்கிறார்.
ரஷ்யாவும், இதற்கு மேல் உக்ரைனுடனான போரை நீட்டிக்க விரும்பவில்லை எனத் தெரிகிறது. அதனால்தான், “போரை முடிவுக்குக் கொண்டுவருவதுதான் எங்கள் இலக்கு” என்று ரஷ்ய அதிபர் புதின் கூறியிருக்கிறார்.
கடந்த வாரம் செய்தியாளர்களிடம் பேசிய புதின், “ரஷ்யாவின் கவலைகளை அமெரிக்கா புறந்தள்ளுகிறது. ரஷ்யாவை பலவீனப்படுத்துவதற்காக, உக்ரைனைப் போர்க்களமாகப் பயன்படுத்துகிறது” என்றும் அமெரிக்கா மீது குற்றம் சாட்டியிருக்கிறார்.
இந்த நிலையில் உக்ரைன் – ரஷ்யா போர் காரணமாக கச்சா எண்ணெய், எரிவாயு, சமையல் எண்ணெய்கள், உணவுப் பொருட்கள் எனப் பல்வேறு பொருட்களின் விலை உயர்ந்துள்ளதால் பல உலக நாடுகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இந்தச் சூழலில் ஐநாவின் முயற்சியால் இந்தப் போர் எப்போது முடிவுக்கு வரும் என்பதே உலக நாடுகளின் எதிர்பார்ப்பாக உள்ளது.
-ராஜ்
போராடிய இலங்கை : கடைசி ஓவரில் த்ரில் வெற்றி பெற்றது இந்தியா!