பலத்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் தெலங்கானா மாநில ஆளுநரான டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன் இன்று (பிப்ரவரி 3) தெலங்கானா மாநில சட்டப்பேரவை, சட்ட மேலவையின் கூட்டுக் கூட்டத்தில் ஆளுநர் உரை ஆற்றினார். கடந்த மார்ச் 2021 க்குப் பிறகு அவர் ஆற்றும் முதல் ஆளுநர் உரை என்பதால் அரசியல் ரீதியான முக்கியத்துவம் பெற்றது.
முதல்வர் கே.சந்திரசேகர ராவ் அரசுக்கும் ஆளுநர் தமிழிசைக்கும் தொடர் முரண்பாடுகள் நிலவிய நிலையில், அவற்றுக்கு முற்றுப்புள்ளி வைப்பது போல மாநில அரசு தயாரித்துக் கொடுத்த ஆளுநர் உரையை அப்படியே வாசித்தார் ஆளுநர் தமிழிசை.
கடந்த ஜனவரி 9 ஆம் தேதி தமிழ்நாடு சட்டமன்றத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவி, மாநில திமுக அரசு தயாரித்துக் கொடுத்த ஆளுநர் உரைக்கு ஒப்புதல் அளித்துவிட்டு சட்டமன்றத்தில் அதில் இருந்து சில பகுதிகளை நீக்கியும் சேர்த்தும் வாசித்தார். இது பெரும் சர்ச்சையானது, ஆளுநர் ஆர்.என்.ரவி சட்டமன்றத்தில் இருக்கும்போதே எழுந்த முதலமைச்சர் ஸ்டாலின், ‘ஆளுநர் ஏற்கனவே ஒப்புதல் அளித்த எழுத்துபூர்வமான உரையே அவைக்குறிப்பில் ஏறும். ஆளுநர் ரவி வாசித்த உரை அவைக் குறிப்பில் ஏறாது’ என்று தீர்மானத்தைக் கொண்டுவந்து நிறைவேற்றினார்.
இதை தாமதமாக உணர்ந்த ஆளுநர் ஆர்.என்.ரவி சட்டமன்றத்தில் இருந்து வேகவேகமாக வெளியேறினார். இந்திய அளவில் இது அரசியல் சாசன அமர்வு பிரச்சினையாக வெடித்தது. தமிழக சட்ட அமைச்சர் சார்பில் குடியரசுத் தலைவர் முர்முவை சந்தித்து ஆளுநர் ரவி பற்றி முறையிட்டனர்.
இந்த சர்ச்சை பின்னணியிலும், ஏற்கனவே தெலங்கானா மாநிலத்தில் முதல்வர் கே.சி.ஆருக்கும் ஆளுநர் தமிழிசைக்கும் நிலவி வரும் முரண்பாடுகள் அடிப்படையிலும் இன்றைய தெலங்கானா ஆளுநர் உரை எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது.
ஆளுநர் உரை என்பதை அரசு திட்டமிடாத நிலையில், பட்ஜெட் உரைக்கு ஒப்புதல் கொடுக்க ஆளுநர் தமிழிசை தாமதித்தார். அதனால், ஜனவரி 30 ஆம் தேதி கேசிஆர் அரசு அம்மாநில உயர் நீதிமன்றத்தை நாடியது. இதில் தலையிட மறுத்துவிட்ட நீதிமன்றம்… ஆளுநரோடு பேசி இப்பிரச்சினையை தீர்த்துக் கொள்ளும்படி அறிவுறுத்தியது.
பட்ஜெட்டுக்கு ஆளுநரின் ஒப்புதல் அவசியம் என்பதால்… ஆளுநர் உரையையும் தயாரித்து சட்டமன்றத்துக்கு வந்து உரையாற்றுமாறு ஆளுநர் தமிழிசையை அழைத்தது தெலங்கானா மாநில அரசு.

இந்த அரசியல் சூழலில் இன்று (பிப்ரவரி 3) பகல் 12 மணிக்கு தெலங்கானா சட்டமன்ற வளாகத்துக்கு வருகை தந்தார் ஆளுநர் தமிழிசை. அவருக்கு முதல்வர் கே.சந்திரசேகர ராவ், சபாநாயகர் ஆகியோர் வரவேற்பு கொடுத்து சபைக்குள் அழைத்துச் சென்றார்கள்.
ஆளுநர் உரையாற்றிய தமிழிசை, தெலுங்கானாவின் புகழ்பெற்ற மக்கள் கவிஞர் கலோஜி நாராயண ராவின், “புட்டுகா நீடி சாவு நீடி பாத்துகந்த தேசானிடி” (பிறப்பும் இறப்பும் ஒருவருடையது. ஆனால் வாழ்க்கை நாட்டுக்காகவே) என்ற புகழ்பெற்ற மேற்கோளுடன் தனது உரையைத் தொடங்கினார்.
“முதல்வர் கே.சந்திரசேகர் ராவ், திறமையான நிர்வாகம் மற்றும் மாநில மக்களின் அர்ப்பணிப்புடன் கூடிய முயற்சியால் தெலுங்கானா மாநிலம் நாட்டிற்கு முன்மாதிரியாக திகழ்கிறது” என்று குறிப்பிட்டதோடு, புதிதாக உருவாக்கப்பட்ட மாநிலமான தெலுங்கானா கடந்த எட்டு ஆண்டுகளில் அனைத்து வகையான வளர்ச்சியை அடைய மாநில அரசு எடுத்த பல்வேறு நலத்திட்டங்கள் மற்றும் புதுமையான நடவடிக்கைகளை பட்டியலிட்டார்.

தெலுங்கானா மின்வெட்டில் தத்தளித்து இருளில் தத்தளித்த காலம் ஒன்று இருந்ததாகவும், ஆனால் இப்போது 24 மணி நேரமும் மின்சாரம் வழங்கியதன் மூலம் இப்பிரச்னையை மாநில அரசால் களைய முடிந்தது என்றும் கேசிஆரின் சாதனையைக் குறிப்பிட்டார்.
“முதல்வரின் முயற்சியால், தெலுங்கானா, ‘இந்தியாவின் தானியக் களஞ்சியம்’ என்ற பெயரைப் பெற்றுள்ளது. மாநில அரசின் முன்முயற்சிகளால், கடந்த எட்டு ஆண்டுகளில் மாநிலத்தில் சாகுபடி செய்யப்படும் பயிர் பரப்பு மற்றும் உணவு தானிய உற்பத்தி கிட்டத்தட்ட இரு மடங்காக அதிகரித்துள்ளது. முக்கிய திட்டங்களான மிஷன் காகத்தியா, மிஷன் பகீரதா, விவசாயி பந்து, விவசாயி பீமா, தலித் பந்து, ஆசரா ஓய்வூதியம், கல்யாண லட்சுமி மற்றும் ஷாதி முபாரக் ஆகிய திட்டங்களை தெலங்கானா அரசு செயல்படுத்தி வருகிறது” என்றும் ஆளுநர் உரையில் குறிப்பிட்டார் தமிழிசை.
கடந்த இரு ஆண்டுகளாக தெலங்கானா மாநில அரசுக்கும் ஆளுநருக்கும் இடையே நிலவிய முரண்பாடுகளுக்கு இன்று சுமுகமாக முற்றுப்புள்ளி வைக்கப்பட்டிருக்கிறது என்கிறார்கள் அம்மாநில அரசியல் நோக்கர்கள்.
–ஆரா
குறைந்தது தங்கம், வெள்ளி விலை!
ஓபிஎஸ் அணி வேட்பாளர் வேட்புமனு தாக்கல்!
தமிழ்நாடு கொடுத்த அதிர்ச்சி வைத்தியம்?????