வெளிநாடுகளில் மேற்கொள்ளப்பட்டுள்ள ஒப்பந்தங்கள் மூலம் 5000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று முதல்வர் ஸ்டாலின் கூறினார்.
முதல்வர் ஸ்டாலின் சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் நாடுகளுக்கு 9 நாள் அரசுமுறை பயணம் மேற்கொண்டார்.
மே 23ஆம் தேதி சென்னையில் இருந்து கிளம்பிய அவர் இன்று இரவு 10 மணியளவில் சென்னை திரும்பினார்.
அவரை அமைச்சர்கள் கே.என்.நேரு, சேகர்பாபு உள்ளிட்டோர் நேரில் சென்று வரவேற்றனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் ஸ்டாலின், தமிழ்நாட்டில் செயல்படுத்தப்பட்ட மிகப்பெரிய திட்டங்களான மெட்ரோ ரயில் திட்டம், ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டம் ஆகியவற்றை செயல்படுத்தியதில் ஜப்பானுடைய பங்கு இருக்கிறது.
உற்பத்தி துறையில் உலகிற்கே முன்னோடியாக ஜப்பான் விளங்குகிறது. அதுபோன்று ஆசியாவின் மிகப்பெரிய உற்பத்தி தொழில் மையமாக தமிழ்நாடு உருவெடுக்க வேண்டும் என்பதுதான் திமுக அரசின் குறிக்கோள்.
இதற்காக தொழில் முதலீடுகளை ஈர்க்கும் வகையில், ஏற்கனவே தொழில் துறை அமைச்சராக இருந்த தங்கம் தென்னரசு ஜப்பான் நாட்டுக்கு சென்று ஆரம்ப கட்ட பேச்சு வார்த்தைகள் எல்லாம் நடத்தினார்.
குறைந்தபட்சம் 3 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடுகளை ஈர்த்திட வேண்டும் என்று திட்டமிட்டு செயல்பட்டோம்.
அந்த வகையில் முந்தைய தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, இன்றைய தொழில்துறை அமைச்சர் டிஆர்பி ராஜா, தொழில்துறை அலுவலர்களும் முனைப்போடு செயல்பட்டனர், பல ஜப்பான் நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அதில் முக்கிய திட்டமாக 1,891 கோடி ரூபாய் முதலீட்டில் குளிர்சாதன கருவிகள் உற்பத்தி செய்வதற்கான தொழிற்சாலையை அமைப்பதற்கு மிட்சுபிஷி நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்கனவே சென்னையில் எனக்கு முன்பு கையெழுத்திடப்பட்டது.
தற்போது ஓம்ரான் நிறுவனம் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களுடன் 3,233 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து இடப்பட்டுள்ளது.
இதன் மூலமாக நேரடியாகவும் மறைமுகமாகவும் 5000க்கும் மேற்பட்டோருக்கு வேலை வாய்ப்புகள் கிடைக்கும்.
இது மட்டும் இன்றி சிறுகுறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் மேம்பாட்டிற்கும் தொழிற்கல்வி வளர்ச்சிக்கும், உயர்கல்வி திறன் பயிற்சிக்கும் தேவையான புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இந்த பயணத்தின் போது, ஜப்பான் மற்றும் சிங்கப்பூரைச் சேர்ந்த நிறுவனங்கள் தமிழகத்தில் முதலீடுகளை மேற்கொள்ள மிகவும் முனைப்புடன் இருப்பது தெரியவந்தது.
வரும் 2024 ஜனவரி 10 ,11 ஆம் தேதிகளில் சென்னையில் நடைபெற இருக்கக்கூடிய உலக முதலீட்டாளர் மாநாட்டில் கலந்து கொள்ள வேண்டும் என்று ஜப்பான் சிங்கப்பூர் நிறுவனங்களுக்கு அழைப்பு விடுத்திருக்கிறேன்.
இந்த அழைப்பை ஏற்று பெரும் தொழில் நிறுவன தலைவர்கள் பலரும் தமிழகத்துக்கு வருவதாக உறுதி தந்துள்ளனர்.
இந்த மாநாட்டை சிறப்பாக தமிழக அரசு நடத்த உள்ளது” என்று கூறினார்.
பிரியா
“அமைச்சரை காணவில்லை” : காங்கிரஸுக்கு ஸ்மிருதி இரானி பதில்!