ஜூன் 25ஆம் தேதி அரசியல் சாசனப் படுகொலை தினமாக கடைபிடிக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
1975 ஜூன் 25 அன்று உள்நாட்டு நெருக்கடிகால அறிவிப்பை முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி வெளியிட்டார். எமெர்ஜென்சி அறிவிக்கப்பட்டு 50 ஆண்டுகாலம் ஆகிவிட்டது.
நடந்து முடிந்த நாடாளுமன்ற கூட்டத்தொடரில், சபாநாயகர் ஓம் பிர்லா, இந்திரா காந்தியையும் எமெர்ஜென்சியையும் விமர்சித்திருந்தார். இதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்து அமளியில் ஈடுபட்டன.
குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவும் தனது உரையில், எமெர்ஜென்சி அரசியல் சாசனத்தின் மீதான நெருக்கடி என தெரிவித்தார்.
இந்நிலையில், எமெர்ஜென்சி பிரகடனப்படுத்தப்பட்ட ஜூன் 25ஆம் தேதி, இனி ‘அரசியலமைப்பு படுகொலை தினம்’ ஆக அனுசரிக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
இதுகுறித்த அரசாணையை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள உள்துறை அமைச்சர் அமித்ஷா, “ஜூன் 25, 1975 அன்று அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி, தனது சர்வாதிகார மனநிலையைக் காட்டி நாட்டில் எமெர்ஜென்சியை அறிவித்து, இந்திய ஜனநாயகத்தின் ஆன்மாவை நெரித்தார்.
காரணம் இல்லாமல் லட்சக்கணக்கான மக்கள் சிறையில் அடைக்கப்பட்டனர். ஊடகங்களின் குரல் நசுக்கப்பட்டது.
எனவே, இந்திய அரசு ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 25ஆம் தேதியை ‘அரசியலமைப்பு படுகொலை தினமாக’ கடைபிடிக்க முடிவு செய்துள்ளது.
இந்த நாள் 1975 அவசரநிலையின் மனிதாபிமானமற்ற வலியை சகித்துகொண்ட அனைவரின் பங்களிப்பை நினைவுகூரும்” என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அவர், இந்த தினம் அனுசரிக்கப்படுவது என்பது ஒவ்வொரு இந்தியரிடமும் தனிமனித சுதந்திரத்தையும், ஜனநாயகத்தையும் பாதுகாக்கவும் உதவும்.
அதேசமயம் காங்கிரஸ் போன்ற சர்வாதிகார சக்திகள், இதுபோன்ற கொடூரங்களை மீண்டும் செய்வதைத் தடுக்கும்” என்றும் கூறியுள்ளார்.
மக்களவை தேர்தல் பிரச்சாரத்தின் போது எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்டோர் பாஜக அரசியலமைப்பை அழிக்க முயற்சி செய்வதாக குற்றம்சாட்டினர்.
இந்நிலையில் எமெர்ஜென்சி அறிவிக்கப்பட்ட நாளை அரசியலமைப்பு படுகொலை தினமாக பாஜக அரசு அறிவித்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
பிரியா
எமெர்ஜென்சி : ஜூன் 25 அரசியல் சாசனப் படுகொலை தினம் – மத்திய அரசு அறிவிப்பு!
விழிஞ்சம் துறைமுகத்திற்கு வந்த விருந்தாளி !