நான் எமர்ஜென்சி கதவு அருகே அமர்ந்திருக்கிறேன். ஆனால் கதவைத் திறக்க மாட்டேன் என்று கூறி வீடியோ வெளியிட்டு பாஜகவை விமர்சித்துள்ளார் திமுக எம்பி தயாநிதி மாறன்.
பெங்களூரு பாஜக தெற்கு தொகுதி எம்.பி. தேஜஸ்வி சூர்யா மற்றும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இருவரும் கடந்த டிசம்பர் 10ம் தேதி சென்னையிலிருந்து திருச்சிக்கு இண்டிகோ விமானம் மூலம் சென்றனர்.
அப்போது, தேஜஸ்வி சூர்யா வலது பக்கம் உள்ள விமானத்தின் எமர்ஜென்சி கதவைத் திறந்ததாகக் குற்றச்சாட்டு எழுந்தது.
இதனால் திருச்சிக்கு இரண்டு மணி நேரம் விமானம் தாமதமாகச் சென்றது. இந்த தாமதத்துக்குத் தேஜஸ்வி சூர்யா பயணிகளிடம் மன்னிப்பு கேட்டார். விமான குழுவினரிடமும் மன்னிப்பு கடிதம் கொடுத்தார்.
இது தேசிய அளவில் சர்ச்சையான நிலையில், விமான போக்குவரத்துத் துறை ஆணையரகம் ஒரு மாதத்திற்குப் பிறகு கடந்த ஜனவரி 17ஆம் தேதி விசாரணைக்கு உத்தரவிட்டது.
இது குறித்து விமான போக்குவரத்துத் துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா கூறுகையில், “தவறுதலாக நடந்த செயலுக்காகத் தேஜஸ்வி சூர்யா மன்னிப்பு கேட்டு விட்டார்” என்று தெரிவித்தார்.
இதன் மூலம் எமர்ஜென்சி கதவைத் திறந்தது தேஜஸ்வி சூர்யா என்பது உறுதியானது.
இந்த சூழலில் தேஜஸ்வி சூர்யாவுடன் பயணித்த அண்ணாமலை நேற்று முன்தினம் கூறுகையில்,
“எமர்ஜென்சி கதவிலிருந்த இடைவெளியைப் பார்த்ததும் விமானப் பணியாளர்களை அழைத்து தேஜஸ்வி சூர்யா கூறினார். ஏர்விண்ட்-ஐ அட்ஜஸ்ட் செய்யும் போது தவறுதலாகக் கதவு திறக்கப்பட்டதாகத் தெரிவித்தார்.
இந்நிலையில் எமர்ஜென்சி கதவு திறப்பு விவகாரம் தொடர்பாகத் தயாநிதி மாறன் எம்.பி. வீடியோ வெளியிட்டு அண்ணாமலையையும் தேஜஸ்வி சூர்யாவையும் விமர்சித்துள்ளார்.
அந்த வீடியோவில் பேசும் தயாநிதி மாறன், “வணக்கம். வாழ்க தமிழ்நாடு. இன்று கோவைக்கு இண்டிகோ விமானம் மூலம் பயணம் செய்கிறேன். எமர்ஜென்சி கதவுக்கு அருகே எனக்கு இருக்கை கிடைத்தது.
எனினும் நான் எமர்ஜென்சி கதவைத் திறக்கப் போவதில்லை. திறந்தால் நான் மன்னிப்பு கடிதம் எழுத வேண்டும். அதுமட்டுமின்றி கதவைத் திறப்பதால் பயணிகளுக்கு ஆபத்து ஏற்படும்.
சுய அறிவு உள்ளவர்கள் இந்த காரியத்தைச் செய்ய மாட்டார்கள். அதோடு பயண நேரம் இரண்டு மணி நேரம் மிச்சமாகும்” என்று கூறியுள்ளார்.
பிரியா