ட்விட்டர் நிறுவனத்தை வாங்கியுள்ள எலான் மஸ்க், அடுத்தகட்ட நடவடிக்கையாக அந்நிறுவனத்தின் முக்கிய தலைகளை அதிரடியாக நீக்கியுள்ளார்.
அக்டோபர் 27-ம் தேதி இந்திய நேரப்படி நள்ளிரவு 12:15 மணிக்கு உலகப் பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க் பதிவிட்ட ட்விட்டர் வீடியோ ஒன்று சர்வதேச செய்தி நிறுவனங்களின் கவனத்தை ஈர்த்தது.
அமெரிக்காவின் சான்ஃபிரான்ஸிஸ்கோ நகரில் அமைந்துள்ள ட்விட்டர் தலைமையகத்துக்குள் குளியலறையில் பயன்படுத்தும் பளிங்கு சின்க்குடன் மஸ்க் உள்ளே நுழையும் அந்த வீடியோ பலரையும் குழப்பத்தில் ஆழ்த்தியது.
வர்த்தகத்தைப் பொறுத்தவரை KITCHEN SINKING என்கிற வார்த்தை, ஒரு நிறுவனத்தில் அதிரடி நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக பயன்படுத்தப்படும் பதமாகும். ஆனால், எலான் மஸ்க் நேரடியாக SINK-கையே கொண்டுவந்தது ட்விட்டரில் ஏற்படப்போகும் அதிரடி மாற்றங்களை குறிப்பால் உணர்த்தத்தான் என்பது அடுத்த சில மணி நேரங்களில் தெளிவானது.

ஆம், ஏப்ரல் 25ஆம் தேதி மேற்கொள்ளப்பட்ட ட்விட்டரை வாங்கும் ஒப்பந்தத்தை ஒருவழியாக நிறைவேற்றியுள்ளார் எலான் மஸ்க். 44 பில்லியன் டாலர்களை வாரிக் கொடுத்து அவர் ட்விட்டரின் முதலாளியாகியுள்ளார்.
அது மட்டுமல்ல, ட்விட்டர் கைவசம் வந்த சில மணி நேரங்களிலேயே அந்நிறுவனத்தில் தலைமைச் செயல் அதிகாரி பராக் அகர்வால், தலைமை நிதி அதிகாரி நெட் சேகல் உள்ளிட்ட முக்கிய தலைகளை பணி நீக்கம் செய்து எலான் மஸ்க் அதிரடி காட்டியுள்ளதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.
ஏப்ரல் மாதமே ட்விட்டருக்கும் எலான் மஸ்க்குக்கும் இடையிலான வர்த்தக ஒப்பந்தம் முடிவு செய்யப்பட்டாலும் ட்விட்டரில் உள்ள ஸ்பாம் கணக்குகள் 5 சதவீதத்துக்கும் மேல் உள்ளதாகக் கூறி அந்த நிறுவனத்தை வாங்கும் முடிவில் இருந்து எலான் மஸ்க் பின்வாங்கினார். ட்விட்டர் நிறுவனம் தனது பணியாளர்களை நீக்கியதும் இதற்கு ஒரு காரணம் என மஸ்க் விளக்கமளித்தார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த ட்விட்டர் நிறுவனம், ஒப்பந்தப்படி எலான் மஸ்க் ட்விட்டரை வாங்க வேண்டும் என்றும், இல்லை என்றால் பிரேக்கப் கட்டணமாக 1 பில்லியன் டாலர் நிவாரணம் அளிக்க வேண்டும் எனவும் கேட்டு ஜூலை மாதம் நீதிமன்றத்தை நாடியது.
’இந்த வழக்கு அக்டோபர் மாதத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும்’ என ஜூலை 19ஆம் தேதி டெலாவர் மாகாண நீதிமன்றம் அறிவித்தது.
இந்நிலையில் அக்டோபர் 4ஆம் தேதி அன்று ட்விட்டர் நிறுவனத்தை வாங்கிக் கொள்ள எலான் மஸ்க் மீண்டும் சம்மதம் தெரிவித்தார். இதனை அடுத்து அக்டோபர் 28ஆம் தேதிக்குள் ஒப்பந்தப்படி அவர் ட்விட்டர் நிறுவனத்தை வாங்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த நிலையில்தான் கெடு முடிவதற்கு சில மணி நேரங்கள் முன்பாக ட்விட்டர் நிறுவனத்தை வாங்கியுள்ளார் எலான் மஸ்க். மேலும், அப்போது ட்விட்டர் தலைமையகத்தில் இருந்த தலைமைச் செயல் அதிகாரி பராக் அகர்வால், தலைமை நிதி அதிகாரி நெட் சேகல் ஆகியோரை பணி நீக்கம் செய்து அலுவலகத்தை விட்டு வெளியேற்றியதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.
ட்விட்டரை எலான் மஸ்க் வாங்கியதன் மூலம் இருவருக்கும் இடையிலான வர்த்தகப் போர் ஒருவழியாக முடிவுக்கு வந்துள்ளது.
அப்துல் ராஃபிக்
குஷ்பு பதிவு: மன்னிப்பு கேட்ட கனிமொழி!
ரிஷி சுனக்குடன் தொலைபேசியில் பேசிய மோடி!