மின்கட்டண உயர்வை கண்டித்து பாமக தலைவர் அன்புமணி தலைமையில் சென்னையில் இன்று (ஜூலை 19) போராட்டம் நடைபெற்று வருகிறது.
தமிழகத்தில் வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்களுக்கான மின் கட்டணம் 4.83 சதவிகிதம் உயர்த்தப்பட்டுள்ளது. அதாவது ஒரு யூனிட்டுக்கு 20 காசுகள் முதல் 55 காசுகள் வரை உயர்த்தப்பட்டிருக்கின்றன.
இந்த கட்டண உயர்வு ஜூலை 1ஆம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது என்று மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
இதன் காரணமாக அடுத்த மாதத்தில் இருந்து பொதுமக்கள் கூடுதலாக மின் கட்டணம் செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
மின்கட்டண உயர்வுக்கு கண்டனம் தெரிவித்து சென்னையில் பாமகவினர் இன்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
எழும்பூர் ராஜரத்தினம் விளையாட்டு அரங்கம் அருகில் நடைபெறும் இந்த போராட்டத்தில், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கலந்து கொண்டார்.
“ஷாக் அடிப்பது மின்சாரமா அல்லது மின் கட்டணமா… மின்வாரிய ஊழல் இழப்பை தமிழக மக்களிடம் வசூலிக்காதீர்கள்… ஸ்டாலின் அண்ணாச்சி திமுக தேர்தல் வாக்குறுதி எண் 221 என்னாச்சி? உள்ளிட்ட வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி தமிழக அரசுக்கு எதிராக கோஷம் எழுப்பினர்.
இந்தப் போராட்டத்தில் பேசிய அன்புமணி ராமதாஸ், “விக்கிரவாண்டி இடைத்தேர்தல் முடிந்த பின்னர் மின் கட்டண உயர்வை அறிவித்திருக்கிறார்கள். திமுக அரசு மூன்று முறை மின்கட்டணத்தை உயர்த்தி இருக்கிறது.
2022 செப்டம்பர் மாதத்தில் 26.7 மின் கட்டண உயர்வை அறிவித்தார்கள். தமிழ்நாட்டின் சரித்திரத்திலேயே இந்த அளவுக்கு யாரும் மின்கட்டணத்தை உயர்த்தியது இல்லை.
2023 ஜூலை மாதத்தில் 2.1 விழுக்காடு கட்டணத்தை உயர்த்தினார்கள்.
2024 ஜூலை மாதத்தில் 4.8 விழுக்காடு கட்டணத்தை உயர்த்தி இருக்கிறார்கள். இந்த மூன்றையும் சேர்த்தால் 33.7 விழுக்காடு அளவுக்கு கட்டணத்தை உயர்த்தி இருக்கிறார்கள்.
இது மக்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட அராஜகமாகும். மின்சார தீவிரவாதத்தை மக்கள் மீது அரசு கட்டவிழ்த்துவிட்டிருக்கிறது.
மின்கட்டண உயர்வு மூலம் தமிழக அரசுக்கு 40 ஆயிரம் கோடி ரூபாய் வருவாய் கிடைக்கிறது. இதெல்லாம் மக்களுடைய பணம்.
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு மின்சார வாரியம் 10,000 கோடி ரூபாய் நஷ்டத்தில் இருக்கிறது என்று அறிவித்தார்கள். ஆனால் இப்போது 40 ஆயிரம் கோடி ரூபாய் வருவாய் வந்தும் இன்றும் மின்சார வாரியம் நஷ்டத்தில்தான் இயங்குகிறது என்று தமிழக அரசு சொல்லிக் கொண்டிருக்கிறது. இது எவ்வளவு பெரிய மோசடி?.
இதற்கெல்லாம் என்ன காரணம்… எல்லாம் லஞ்சம்… ஊழல்… இது திறமை இல்லாத அரசு. இவர்களுக்கு நிர்வாக திறமை கிடையாது.
அரசுத் துறையில் மின்சாரம் தயாரிக்க வேண்டும் என்றால் யூனிட்டுக்கு 3.40 ரூபாய் செலவாகும். ஆனால் தனியாரிடம் 12 ரூபாய் கொடுத்து வாங்குகிறார்கள். எல்லாம் கமிஷனுக்காக செய்து கொண்டிருக்கிறார்கள். மின் கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும்” என்று தமிழ்நாடு அரசுக்கு வலியுறுத்தினார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பிரியா
ஓடிடியில் தூள் கிளப்பும் ‘மகாரஜா’
புதிய கிரிமினல் சட்டங்களில் குழப்பம்: மத்திய அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் நோட்டீஸ்!