தமிழகத்தில் சொத்து வரி மற்றும் மின்சார கட்டணம் உயர்வுக்கு யார் காரணம் என திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பதிலளித்துள்ளார்.
தமிழகத்தில் மின்கட்டண உயர்வை கண்டித்து அதிமுக சார்பில் இன்று (செப்டம்பர் 16) தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. செங்கல்பட்டில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டு பேசினார்.
அப்போது அவர், “15 மாத கால சர்வாதிகார ஆட்சியில் தமிழக மக்களுக்கு ஒரு துளி நன்மையும் கூட ஏற்படவில்லை. வரி உயர்வை மக்கள் தலையில் சுமத்தியதுதான் திராவிட மாடல். சொத்து வரி உயர்வுதான் வாக்களித்த தமிழ்நாட்டு மக்களுக்கு கொடுத்த முதல் போனஸ்.
திராவிட மாடல் என கூறி மக்களை ஏமாற்றி வருகிறார்கள். ரூ.1000 வீட்டு வரி செலுத்தியவர்கள் இன்று ரூ. 2 ஆயிரம் செலுத்த வேண்டிய அளவுக்கு தள்ளப்பட்டு உள்ளனர். கூரை வீட்டுக்குக்கூட வரி போட்டு மக்களை துன்புறுத்தும் அரசுதான் தி.மு.க. அரசு. தமிழகத்தில் 52 சதவீதம் அளவுக்கு மின் கட்டணத்தை உயர்த்தி மக்களை பாடாய்படுத்துகிறது தி.மு.க. அரசு. 500 யூனிட் பயன்படுத்துவோர் 55 சதவீதம் கூடுதலாக மின்சார கட்டணத்தை செலுத்தும் நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளனர்” எனத் தெரிவித்திருந்தார்.
இதற்கு திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பதிலளித்துள்ளார். இதுகுறித்து இன்று (செப்டம்பர் 16) சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “திமுகவின் 15 மாத கால ஆட்சியைப் பார்த்து தாங்கிக்கொள்ள முடியாத எடப்பாடி பழனிசாமி, தொண்டர்களைத் தக்கவைத்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக பொறுப்பற்ற முறையில், ஆதாரமற்ற வகையில், பல குற்றச்சாட்டுகளைப் பேசியிருக்கிறார்.
சொத்து வரிக்கு யார் காரணம் என்பதை எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அவரது கட்சி உறுப்பினர்கள் சட்டமன்றத்தில் இருக்கும்போதே, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினும், அமைச்சர் கே.என்.நேருவும் எப்படிப்பட்ட வரிவிதிப்பு செய்யப்பட்டிருக்கிறது? இதனால் யார்யார் பாதிக்கப்படுவார்கள் என்கிற புள்ளிவிவரத்தைத் தெள்ளத்தெளிவாகவே எடுத்துரைத்தார்கள். அங்கெல்லாம் அதற்குத் தகுந்தபடி பதில் சொல்ல முடியாமல், இங்கே ஆர்ப்பாட்டம் என்ற பெயரில் பொய் மூட்டைகளை வாரி அவிழ்த்துவிட்டிருக்கிறார்.
சொத்து வரியை உயர்த்தாவிட்டால் மானியங்கள் நிறுத்தப்படும் என ஒன்றிய அரசு கூறியதை எல்லாம் மூடிமறைக்கிறார். ஆனால், ஜெயலலிதா மற்றும் எடப்பாடி பழனிசாமி ஆட்சிக்காலத்தில் கடுமையாக வரியை உயர்த்தினார்கள். இதுகுறித்து நானே சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து அதற்குப் பிறகுதான் சென்னை மாநகராட்சியின் வரி விதிப்பு நிறுத்திவைக்கப்பட்டது.
சொத்து வரி உயர்வை எதிர்த்து எந்த ஒரு குடியிருப்போர் சங்கமாவது நீதிமன்றத்துக்குப் போனார்களா? இதற்கு எடப்பாடி பதில் சொல்லட்டும். சென்னையில் ஏராளமான பொதுநல சங்கங்கள் உள்ளன. அந்தச் சங்கத்தின் அடிப்படையில் யாராவது நீதிமன்றத்துக்கு சென்றார்களா என்றால் யாரும் செல்லவில்லை.
காரணம், அவர்களையும் கலந்தாலோசித்து அவர்களின் கருத்துக்களைக் கேட்டுத்தான் சொத்து வரி நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது என்பதுதான் உண்மை. அதுபோல் ஜெயலலிதா, எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் எப்படியெல்லாம் மின் கட்டணம் உயர்த்தினார்கள்? அதை மக்கள் மறந்துவிடுவார்களா? பில்லிங் அமோண்ட்டை அதிகளவில் உயர்த்தி மக்களை சாகடித்தார்கள்.
மின்சார வாரியத்தில் நடைபெற்ற ஊழலால், தங்கமணி போன்றவர்கள் அடித்த கொள்ளையால் கடந்த அதிமுக ஆட்சியில் மின்சார துறை லட்சம் கோடி ரூபாய்க்கு கடனாகியிருந்தது. இதனால் மத்திய அரசு இதற்கு மேல் கடன் தர முடியாது; மானியம் தர முடியாது என்று நிர்ப்பந்தித்த காரணத்தால் வேறு வழியின்றி தமிழக அரசு மின் கட்டணத்தை உயர்த்தும் நிலைக்கு ஆளாகியது” என்றார் ஆர்.எஸ்.பாரதி.
ஜெ.பிரகாஷ்
தமிழகத்தில் மட்டும் 4 முதல்வர்கள்: எடப்பாடி ஆவேசம்!