முழுத் தொகையும் செலுத்தியாச்சு- இனி மின்சாரம் வாங்கலாம்! -அமைச்சர் செந்தில்பாலாஜி
’மின்சாரத்துக்கான நிலுவைத் தொகை முழுமையாக வழங்கப்பட்டுள்ளது. இதையடுத்து, மின்சந்தை மூலம் மின்சாரம் பெறுவது சரி செய்யப்படும்’ என தமிழக மின் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.
மத்திய மின்துறை அமைச்சகத்தின்கீழ் செயல்படும் மின்சார உற்பத்தி நிறுவனங்கள் மூலம் மாநிலங்களில் உள்ள மின் வினியோக நிறுவனங்களுக்கு மின்சாரம் வழங்கப்படுகிறது.
Gencos எனப்படும் இந்த உற்பத்தி நிறுவனங்களுக்கான நிலுவைத் தொகையைப் பல மாநிலங்கள் நீண்டகாலமாகத் திருப்பி செலுத்தாமல் இருப்பதாகத் தகவல் வெளியானது.
அதன்படி, தமிழ்நாடு உள்பட 13 மாநிலங்கள் 5 ஆயிரம் கோடி ரூபாய் பாக்கி வைத்து உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. அதில் தமிழ்நாடு 926 கோடி ரூபாய் நிலுவை வைத்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து தமிழ்நாடு உள்பட13 மாநிலங்கள் மின்சாரம் வாங்க, விற்க மத்திய அரசு தடை விதித்திருந்தது. இது, தமிழக மக்களிடம் அதிர்ச்சியைக் கிளப்பியிருந்தது.
இதுதொடர்பாக தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் நேற்று (ஆகஸ்ட் 19) பதிலளித்திருந்த தமிழக மின் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, “ஒன்றிய அரசின் எரிசக்தித்துறை நிர்ணயித்த மாதாந்திர நிலுவைத் தொகை ரூ.361 கோடி 4.8.2022 அன்றே வழங்கப்பட்டுவிட்டது.
ஒன்றிய அரசின் ’PRAAPTI PORTAL’ இணையதளத்தில், மின் உற்பத்தியாளர்கள் தங்களுக்கான நிலுவைத் தொகையை வெளியிட முடியும்.
ஆனால் TANGEDCO பதில் அளிக்கும் வழிவகை அதில் இல்லை. நிறுவனங்கள் குறிப்பிடும் நிலுவைத்தொகை வழங்கப்பட்டுவிட்டது. ஆனால் அதனை நிறுவனங்கள் பெற்றுக் கொண்டதாக குறிப்பிடவில்லை.
சில காற்றாலை மற்றும் சூரிய ஒளி நிறுவனங்களுக்கு மட்டுமே குறைவான தொகை நிலுவையில் உள்ளது. அதுவும் ஓரிரு நாட்களில் வழங்கப்பட்டுவிடும்” என அதில் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் இன்று (ஆகஸ்ட் 20) இரவு தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார்.
அதில், ’நிலுவைத் தொகை முழுமையாக வழங்கப்பட்டுள்ளது. இதையடுத்து, மின்சந்தை மூலம் மின்சாரம் பெறுவது சரி செய்யப்படும்’ என அதில் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், “ஒன்றிய அரசு ‘PRAAPTI PORTAL’லில் 21/08/2022 வரை நிலுவைத்தொகையாக குறிப்பிட்டிருந்த தொகை இன்று (20/08/2022) சம்பந்தப்பட்ட மின் வழங்கும் நிறுவனங்களுக்கு முழுமையாக பட்டுவாடா செய்யப்பட்டு விட்டது.
சூரிய ஒளி மின் வழங்கும் நிறுவனங்களுக்கு ரூ. 65,23,83,453யும், காற்றாலை மின் வழங்கும் நிறுவனங்களுக்கு ரூ. 8,75,43,384ம் வழங்கப்பட்டுள்ளது.
தொகை வழங்கப்பட்ட விபரங்கள், PFC Consulting Ltd நிறுவனத்திற்கு மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவர்களை தொடர்பு கொண்ட போது, தொகை செலுத்திய விபரங்களை இன்று இரவுக்குள் (ஆகஸ்ட் 20) POSOCO நிறுவனத்திற்கு தெரிவிக்கப்படும் என்றும், நாளை (ஆகஸ்ட் 20) காலை முதல் மின்சந்தை மூலம் மின்சாரம் பெறுவது சரி செய்யப்படும் என்றும் உறுதியளித்தனர்” என்று தெரிவித்துள்ளார்.
எனவே தமிழகம் மின்சாரம் வாங்கவோ விற்கவோ தடை இருக்காது என தெரிகிறது.
ஜெ.பிரகாஷ்
மின்சாரத்துக்கு மத்திய அரசு தடை: செந்தில் பாலாஜி பதில்!