100 யூனிட் மானியம் தொடருமா? அமைச்சர் அறிவிப்பால் குழப்பம்: மார்க்சிஸ்ட் எதிர்ப்புக் குரல்!

அரசியல்

தமிழக அரசு நேற்று (ஜூலை 18) அறிவித்துள்ள மின் கட்டண உயர்வை திரும்பப் பெற வேண்டுமென்று ஆளும் திமுகவின் கூட்டணிக் கட்சியான மார்க்சிஸ்ட் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.

இது தொடர்பாக மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் இன்று (ஜூலை 19) வெளியிட்டுள்ள அறிக்கையில்,

“தமிழகத்தில் ரூ.55 முதல் ரூ.1130 வரை மின்கட்டணம் உயரும் என்று மாநில மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி அறிவித்துள்ளார். 100 யூனிட் வரை மின்சாரம் பயன்படுத்துவதற்கு இலவச மின்சாரம் தொடரும் என்று அறிவிக்கப்பட்டிருந்தாலும், இந்த மானியத்தை விட்டுத்தர விரும்புபவர்கள் தாமாக முன்வந்து விட்டுத்தரலாம் என்று கூறியிருப்பது தேவையற்றது. இது பொதுமக்கள் மத்தியில் மின்சார கட்டணத்திற்கான மானியம் தொடருமா என்ற அச்சத்தை ஏற்படுத்தும்.

தமிழக அரசு அறிவித்துள்ள உயர்வு நடுத்தர குடும்பத்தினருக்கும், வாடகை வீடுகளில் குடியிருப்போருக்கும் கூடுதல் சுமையை ஏற்படுத்தும். ஒன்றிய அரசின் ஜி.எஸ்.டி. வரி விதிப்பால் அரிசி உள்ளிட்ட அனைத்து அத்தியாவசியப் பொருட்களின் விலைகளும் உயர்ந்துள்ளன. சமையல் எரிவாயு, பெட்ரோல், டீசல் விலை உயர்வால் அனைத்து பகுதி மக்களும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் மாநில அரசின் மின் கட்டண உயர்வு அறிவிப்பும் மக்களுக்கு கூடுதல் சுமையாக அமையும்.

மாதம் ஒருமுறை மின் கணக்கெடுப்பு நடைபெறும் என்ற வாக்குறுதியும் செயல்படுத்தப்படவில்லை. இப்போதும் இரண்டு மாதத்திற்கு ஒருமுறை மின் கணக்கெடுப்பு முறை தொடரும் என்றே அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் உபயோகிக்கும் மின்சார யூனிட் அளவு கூடுதலாகவே வரும். இந்நிலையில், அறிவிக்கப்பட்டுள்ள மின்கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டுமென்றும், மாதமாதம் மின் கணக்கெடுப்பு முறையை மீண்டும் கொண்டு வர வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார் கே.பாலகிருஷ்ணன்.

மின் கட்டண உயர்வுக்கு எதிர்க்கட்சிகளான அதிமுக, அமமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில் திமுக கூட்டணியில் இருக்கும் மார்க்சிஸ்ட் கட்சியே இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது கவனிக்கத் தக்கது.

வேந்தன்

+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *