“மின்சார மசோதாவை எதிர்கட்சிகள் எதிர்ப்பது ஏன் என தமிழக பிஜேபி துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி கேள்வியெழுப்பியுள்ளார்.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரின் இறுதி நாளான இன்று (ஆகஸ்ட் 8) லோக்சபாவில் மின்சார சட்ட திருத்த மசோதாவை மின்துறை அமைச்சர் ஆர்.கே.சிங் அறிமுகம் செய்தார். இந்த சட்ட திருத்த மசோதா தாக்கல் செய்வதற்கு திமுக, காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். எதிர்க்கட்சி உறுப்பினர்களின் கடும் கூச்சல், அமளிக்கு மத்தியிலும் மின்சாரத்துறை அமைச்சர் ஆர்.கே. சிங் மசோதாவை லோக்சபாவில் அறிமுகம் செய்தார்.
லோக்சபாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த மசோதா தனியார் மின் விநியோக நிறுவனங்களுக்கு கூடுதல் அதிகாரம் வழங்கி, மாநில அரசுகளின் அதிகாரத்தை பறிக்கும் வகையில் இருப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின. எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பால் மின்சார சட்டத்திருத்த மசோதா நாடாளுமன்ற நிலைக்குழுவுக்கு அனுப்பிவைக்கப்பட்டது. அதேநேரத்தில், இந்த சட்டதிருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாடு மின்வாரிய தொழிற்சங்கங்களின் கூட்டு நடிவடிக்கை குழு சார்பில் இன்று (ஆகஸ்ட் 8) தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதுதொடர்பாக இன்று (ஆகஸ்ட் 8) சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக மின்சார துறை அமைச்சர் செந்தில்பாலாஜி, “மின்சார திருத்த சட்ட மசோதாவிற்கு அதிமுக, பாஜக ஆகிய கட்சிகள் இதுவரை எந்த எதிர்ப்பு குரலையோ, ஆர்ப்பாட்டமோ நடத்தவில்லை. மின்சார திருத்த சட்ட மசோதா நிலைக்குழுவிற்கு பரிந்துரைக்கப்பட்டதற்கு காரணமே திமுகதான். இந்த சட்ட மசோதாவை எதிர்த்து திமுக தொடர்ந்து முழு குரல் எழுப்பும். மாநில அரசிற்கும், மின்சார வாரியத்திற்கும் இந்த மசோதா நிறைவேற்றப்பட்டால் எந்த அதிகாரமும் இருக்காது. மின்சாரத் துறையை முழு தனியார் மயமாக்கும் முயற்சியில் ஒன்றிய பாஜக அரசு ஈடுபட்டுள்ளது” என்றார்.
இதற்கு ட்விட்டரில் பதிலளித்துள்ளார் தமிழக பிஜேபி துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி. அதில், “மின்சார மசோதா குறித்து எதிர்க்கட்சிகள் ‘கம்பி கட்டும் கதை’ களையெல்லாம் சொல்வது வன்மையாக கண்டிக்கத்தக்கது. இந்த மசோதா சட்டமானால் மின்துறையில் மிகப் பெரிய சீர்திருத்தம் அரங்கேறும். மின் துறையில் நிலவும் மின் திருட்டு, ஊழல், லஞ்சம், முறைகேடுகள்,மோசமான நிர்வாகம், தரமற்ற மின்சாரம் ஆகியவை அகற்றப்பட்டு கடும் கடனில் சிக்கி தவிக்கும் மின் பகிர்மான நிறுவனங்கள் லாபமீட்டும் பாதையில் செல்லும்.
மானியங்கள் ரத்தாகும், சலுகைகளுக்கு தடை விதிக்கப்படும் என்பதெல்லாம் கட்டுக்கதை. தனியார் முதலீடுகள் மற்றும் மின் பகிர்மான நிறுவனங்கள் அதிகரிப்பதன் மூலம் ஆரோக்கியமான போட்டி நிலவும்.அதன் மூலம் சீரான சேவை மற்றும் குறைந்த விலையில் மின்சாரம் மக்களுக்கு கிடைக்கும். சூரிய மின் உற்பத்தி உள்ளிட்ட இதர மாற்று எரிசக்தி திட்டங்கள் வலுப்பெறும். லஞ்சம், ஊழல், முறைகேடுகள், மின் திருட்டு இவைகளை தடுக்கும் மின்சார மசோதாவை எதிர்கட்சிகள் எதிர்ப்பது ஏன்?” என அவர் பதிவிட்டுள்ளார்.
ஜெ.பிரகாஷ்
அரசியல் பேசினோம்: ஆளுநருடனான சந்திப்புக்குப் பிறகு ரஜினி
சமையல் எரிவாய்வு மானியத்தை நிறுத்தும் போது என்ன சொன்னார்கள். நீங்கள் முழு தொகையை கொடுத்து விடுங்கள் உங்கள் வங்கிக் கணக்கில் செலுத்துவோம் என்றார்கள்.ஜி.எஸ்.டி வரி வித்த போது மாநிலங்களுக்கு இழப்பீடு கொடுப்போம் என்றார்கள்.பின்னர் இழப்பீட்டிற்கு பதில் கடன் என்றார்கள்.இதோ இலவச மின்சாரத்திற்கு தடை இல்லையாம். இந்த மசோதாவின் அடிப்படை நோக்கமே விவசாயத்திற்கு இலவச மின்சாரத்தை நிறுத்தி விட்டால் வேளாண்துறையில் தனியாரை வெற்றிகரமாக நுழைக்கலாம் என்பதுதான். மின்சாரத்தையும் தனியாருக்குக் கொடுக்கலாம், இலவச மின்சாரமின்றி இன்றைய தேதியில் அதுவும் ஆற்றுப்பாசனம் இல்லாத பம்புசெட் பாசனத்தை மட்டுமே நம்பி வாழும் விவசயிகளால் விவசாயம் செய்யவே முடியாது.அவர்கள் நிலத்தை விட்டு வெளியேறினால் நிலம் அம்பானி,அதானி,வால்மார்டுக்கு போய் விடும்.
தவிறவும் மின் பகிர்மானம் என்பது ஒரு கட்டமைப்பு ஒன்றிய அரசின் எவ்வித உதவிகளுமின்றி தமிழ்நாடு அரசு தன் சொந்த செலவில் உருவாக்கிய அமைப்பு.பெரும்பாலான மின் பகிர்மான அமைப்புகளும், டிரான்ஸ்பார்மர்களும், அலுவலகங்களும் இயங்குவது சொந்தக் கட்டடத்தில் இதை நோகாமல் அபகரிக்க நினைக்கிறார் மோடி. ஏற்கனவே கடலளவு பிரச்சனையில் மக்கள் சிக்கியிருக்கிறார்கள்.மின்சாரமும் தனியாருக்குப் போனால் இப்போது நாம் 70 ரூபாய்க்கு வாங்கும் அரிசியை 200 ரூபாய் கொடுத்து வாங்க வேண்டியிருக்கும்.மின்சாரம் என்பது வெறும் மின்சாரம் மட்டுமே அல்ல இது ஒரு வலைப்பின்னல் சூழ்ச்சி.