தமிழகத்தில் அமலுக்கு வந்துள்ள புதிய மின் கட்டண உயர்வு மற்ற மாநிலங்களை விடக் குறைவு தான் என்று மின்சாரத் துறை அமைச்சர் விளக்கம் அளித்துள்ளார்.
தமிழகம் முழுவதும் புதிய மின் கட்டண உயர்வு நேற்று (செப்டம்பர் 10) முதல் அமலுக்கு வந்தது. புதிய மின் கட்டண உயர்விற்கு எதிர்க்கட்சிகளான அதிமுக, பாஜக மற்றும் கூட்டணிக் கட்சிகளான விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்டு உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்.
மேலும், புதிய மின் கட்டண உத்தரவைத் திரும்பப் பெற வேண்டும் என்றும் இந்த கட்டண உயர்வு பொருளாதாரத்தைப் பாதிக்கிறது என்றும் கருத்து தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில் இன்று (செப்டம்பர் 11) அமைச்சர் செந்தில் பாலாஜி கரூரில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர்,
“ஒரு கோடி பேர் வரை தமிழகத்தில் 100 யூனிட் மின்சாரம் பயன்படுத்துகிறார்கள். அவர்களுக்கு எந்தவித மின்கட்டண உயர்வும் இல்லை. 63 லட்சத்து 35 ஆயிரம் பேர் 101 முதல் 200 யூனிட் வரை மின்சாரம் பயன்படுத்துகிறார்கள்.
அவர்களுக்கு ஒரு மாதத்திற்கு 27 ரூபாய் 50 பைசா வரை கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளன. இது ஒரு நாளைக்கு ஒரு ரூபாய்க்கும் குறைந்த கட்டணமாகும்.
35 லட்சத்து 25 ஆயிரம் பேர் 201 முதல் 300 யூனிட் வரை மின்சாரம் பயன்படுத்துகிறார்கள். இவர்களுக்கு ஒரு மாதத்திற்கு 72 ரூபாய் 50 பைசா கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.
18 லட்சத்து 82 ஆயிரம் பேர் 301 முதல் 400 யூனிட் வரை மின்சாரம் பயன்படுத்துகிறார்கள். இவர்களுக்கு ஒரு மாதத்திற்கு 147 ரூபாய் 50 பைசா என்ற அளவில் குறைந்த அளவு கட்டணம் மட்டுமே உயர்த்தப்பட்டுள்ளது.
தமிழகத்தில் அமல்படுத்தப்பட்டுள்ள புதிய மின் கட்டணத்தை மற்ற மாநிலங்களோடு ஒப்பிட்டுப் பார்த்தால் தமிழகத்தில் குறைவான மின் கட்டணமே வசூலிக்கப்படுகிறது. கர்நாடகாவில் 100 யூனிட் வரை மின்சாரம் பயன்படுத்துபவர்களுக்கு ஒரு மாதத்திற்கு 4 ரூபாய் 30 பைசா கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.
குஜராத்தில் 100 யூனிட் வரை மின்சாரம் பயன்படுத்துபவர்களுக்கு 5 ரூபாய் 25 பைசா கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. ஆனால் தமிழகத்தில் அனைவருக்கும் 100 யூனிட் வரை மின்சாரம் இலவசமாக வழங்கப்படுகிறது.
தமிழகத்தில் மின் கட்டணம் குறைவாக இருப்பதால் தான் புதிய தொழிற்சாலைகள் இங்குப் போட்டிப் போட்டு அமைக்கப்படுகிறது. பாதிப்பு ஏற்படாத வகையில் மின்வாரியம் இந்த கட்டண உயர்வை மாற்றியமைத்து நடைமுறைக்கு வந்துள்ளது.
தேர்தல் வாக்குறுதியில் அறிவித்தவாறு நிலைக்கட்டணம் ரத்து செய்யப்பட்டுள்ளது. மின்வாரியத்தை மாற்றியமைப்பதற்காகவே இந்த மின் கட்டணம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. மேலும், மின்னகத்தில் இதுவரை 11 லட்சம் புகார்கள் வந்துள்ளது. அதில் 99 சதவீதம் புகார்களுக்குத் தீர்வு காணப்பட்டுள்ளது.
மின்கட்டணம் எவ்வளவு உயர்த்தப்பட்டிருக்கிறது என்பதைக் கணக்கில் கொண்டு, அரசு எவ்வளவு மானியம் வழங்குகிறது என்பதை கழித்த பின்புதான் மக்களிடமிருந்து கட்டணம் வசூலிக்கப்பட வேண்டும் என்ற முதல்வரின் உத்தரவிற்கேற்ப கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
எனவே தமிழக மக்கள் மின் கட்டண உயர்வு தொடர்பாக அரசுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்” என்றார் அமைச்சர் செந்தில் பாலாஜி.
மோனிஷா
புதிய மின் கட்டண உயர்வு அமலுக்கு வந்தது!