மின்கட்டணம்: கே.பாலகிருஷ்ணனுக்கு செந்தில் பாலாஜி பதில்!

அரசியல்

கேரளாவைக் காட்டிலும் தமிழகத்தில் மின்கட்டணம் குறைவு தான் என்று கே.பாலகிருஷ்ணன் குற்றச்சாட்டுக்கு அமைச்சர் செந்தில்பாலாஜி பதில் அளித்திருக்கிறார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், நேற்று(செப்டம்பர் 13) கள்ளக்குறிச்சியில் செய்தியாளர்களை சந்தித்த போது மின்கட்டண உயர்வு குறித்து பேசியிருந்தார்.

அதில் மத்திய அரசு ஏற்கனவே சமையல் எரிவாயு சிலிண்டர், பெட்ரோல், டீசல், அத்தியாவசியப் பொருட்களின் விலையை உயர்த்தியுள்ள நிலையில் தமிழக அரசும் மின்கட்டணத்தை உயர்த்தியுள்ளது.

இதனால் பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகி உள்ளனர். எனவே அரசு அதனை திரும்பப் பெறவேண்டும்” என்று வலியுறுத்தி இருந்தார்.

இந்நிலையில் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, கே.பாலகிருஷ்ணனின் குற்றச்சாட்டுக்கு பதில் அளித்திருக்கிறார்.

அதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆளும் கேரளாவை விட தமிழகத்தில் மின்கட்டணம் குறைவு தான் என்று கூறியுள்ளார்.

மேலும் அவர், “தமிழகத்தை பொறுத்தவரை 100 யூனிட் வரை மின்கட்டணம் இலவசம். கேரளாவில் 100 யூனிட் வரை பயன்படுத்துபவர்கள் ரூ. 385 கட்டணம் செலுத்தவேண்டும்.

தமிழகத்தில் 200 யூனிட் வரை ரூ. 225 கட்டணமும், கேரளாவில் ரூ. 725 கட்டணமும், 300 யூனிட் வரை தமிழகத்தில் ரூ.675 கட்டணமும் கேரளாவில் ரூ. 1365 கட்டணமும் வசூலிக்கப்படுகிறது.

இப்படி மற்ற மாநிலங்களை ஒப்பிட்டு பார்த்தால் தமிழகத்தில் மின்கட்டணம் என்பது குறைவு. அதற்கு காரணம் கடந்த ஆண்டும் தமிழக அரசு ரூ. 9000 கோடியை மானியமாக கொடுத்தது.

கட்டண உயர்வுக்கு பிறகு ரூ. 4000 கோடியை கூடுதல் மானியமாக கொடுத்து மின்சாரவாரியத்தை காப்பாற்றியுள்ளதால் கட்டணம் என்பது தமிழகத்தில் இன்னும் குறைவாகத்தான் இருக்கிறது.

தமிழகத்தில் மின் உற்பத்திக்கும் விநியோகத்திற்குமான இடைவெளி மிக அதிகமாக இருக்கிறது. 2006 ஆம் ஆண்டில் இருந்து  2011 ஆம் ஆண்டு வரை 49 சதவீதம் மின்சாரத் தேவை அதிகரித்தது.

அதற்கான தொழிற்சாலைகள், மின் இணைப்புகள் வந்ததால் தேவையை பூர்த்தி செய்ய முடிந்தது.

அதுவே கடந்த 5 ஆண்டில் 29 சதவீதம் மட்டுமே அதிகரித்துள்ளது. ஆனால் அடுத்த 5 ஆண்டுகளை கணக்கிட்டு பார்த்தால் 50 சதவீதத்திற்கு மேலாக மின்தேவை ஏற்படும். அதற்கான மின் உற்பத்தி திட்டங்களும் விரைவுப்படுத்தப்பட்டுள்ளது.

5 வருடத்தில் 6220 மெகாவாட் திறன் கொண்ட கூடுதல் நிறுவுதிறன் பணிகள் முடிக்கப்பட்டு இணைக்கப்படுவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று பேசினார்.

கலை.ரா

மாணவனை எலி பேஸ்ட் கொடுத்தே கொன்றேன் : பெண் பரபரப்பு வாக்குமூலம்!

+1
0
+1
1
+1
0
+1
0
+1
0
+1
1
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *