தேர்தல் நன்கொடை பத்திரங்கள் விற்பனை இன்று (அக்டோபர் 4) முதல் 10 நாட்கள் நடைபெற உள்ளது. பாரத ஸ்டேட் வங்கியின் 29 அங்கீகரிக்கப்பட்ட கிளைகளில் தேர்தல் நன்கொடை பத்திரங்களை விற்பனை செய்யப்பட உள்ளது.
பத்திரங்கள் ரூ.1,000, ரூ.10,000, ரூ.100,000 மற்றும் ரூ.1 கோடி (ஒரு பத்திரத்தின் வரம்பு ரூ.1,000 முதல் ரூ.1 கோடி வரை) மடங்குகளில் வெளியிடப்படும். இவை எஸ்பிஐயின் 29 அங்கீகரிக்கப்பட்ட கிளைகளில் மட்டும் கிடைக்கும். KYC-இணக்கமான கணக்கைக் கொண்ட ஒரு நன்கொடையாளர் பத்திரங்களை வாங்கலாம், பின்னர் அவற்றை அவர்கள் விரும்பும் கட்சி அல்லது தனிநபருக்கு நன்கொடையாக வழங்கலாம்.
இந்திய குடிமகனாக உள்ள யாரும் தனியாகவோ அல்லது பிற நபர்களுடன் சேர்ந்து கூட்டாகவோ பத்திரங்களை வாங்கி கட்சிகளுக்கு நன்கொடை அளிக்கலாம். சட்டசபை அல்லது நாடாளுமன்றத் தேர்தலில் ஒரு சதவிகிதத்துக்கும் அதிகமான வாக்குகளைப் பெற்ற, பதிவு பெற்ற அரசியல் கட்சிகள் மட்டுமே இந்த பத்திரங்களை பெற முடியும். அங்கீகரிக்கப்பட்ட வங்கிகளில் உள்ள தங்களது கணக்கில் இந்த பத்திரங்களை செலுத்தி பணமாக மாற்றிக்கொள்ள இயலும்.
தேசியக் கட்சிகளுக்கு, 2017-18 நிதியாண்டு மற்றும் 2021-22 நிதியாண்டுக்கு இடைப்பட்ட காலத்தில் தேர்தல் பத்திரங்களில் இருந்து நன்கொடைகள் 743% அதிகரித்துள்ளன. பாஜக அறிவித்த மொத்த நன்கொடைகள் மற்ற அனைத்து தேசிய கட்சிகளும் அறிவித்த மொத்த நன்கொடைகளை விட மூன்று மடங்கு அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.
பிஜேபியின் மொத்த நன்கொடைகளில் 52%க்கும் அதிகமானவை ரூ.5,271.9751 கோடி மதிப்புள்ள தேர்தல் பத்திரங்களிலிருந்து வந்தன, மற்ற அனைத்து தேசிய கட்சிகளும் ரூ.1,783.9331 கோடிகளை குவித்தன.
ராஜ்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…