தேர்தல் பத்திரங்கள் குறித்த விவரங்களை இப்போது வெளியிட இயலாது என்றும், அவற்றை வெளியிடுவதற்கு ஜூன் 30 ஆம் தேதி வரை கால அவகாசம் வேண்டும் என்றும் கேட்டு ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது.
கடந்த பிப்ரவரி 15, 2024 அன்று தேர்தல் பத்திரங்களை சட்ட விரோதம் என்று அறிவித்து ரத்து செய்தது உச்சநீதிமன்றம். குறிப்பாக மார்ச் 6, 2024 ஆம் தேதிக்குள் தேர்தல் பத்திரங்கள் குறித்த அனைத்து விவரங்களையும், ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா தேர்தல் ஆணையத்திடம் அளிக்க வேண்டும் என்று அத்தீர்ப்பு உத்திரவிட்டிருந்தது. தேர்தல் பத்திரங்களை வாங்கியவரின் பெயர் மற்றும் விவரங்கள், எவ்வளவு மதிப்புள்ள தேர்தல் பத்திரத்தை வாங்கினார், தேர்தல் பத்திரங்களை பெற்றுக்கொண்ட அரசியல் கட்சிகளின் விவரங்கள், பத்திரங்கள் வாங்கப்பட்ட தேதி மற்றும் பணமாக மாற்றப்பட்ட தேதி என பல விவரங்களை வெளியிட வேண்டும் என அந்த உத்தரவில் விளக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் இந்த உத்தரவு வெளியான 17 நாட்கள் கழித்து, நேற்று (மார்ச் 4, 2023) ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா, மேலும் 4 மாத காலம் அவகாசம் கேட்டு உச்சநீதிமன்றத்தை அணுகியுள்ளது. நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாகவே தேர்தல் பத்திரங்கள் மூலம் யார் யார் கட்சிகளுக்கு பணம் கொடுத்தார்கள் என்பது வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஜூன் 30 வரை அவகாசம் கேட்கப்பட்டிருப்பது பல கேள்விகளை உருவாக்கியுள்ளது.
16,518 கோடி ரூபாய் யார் கொடுத்தது?
தேர்தல் பத்திரங்கள் என்ற நடைமுறை 2017 ஆம் ஆண்டு பாஜக அரசினால் கொண்டுவரப்பட்ட பிறகு 16,518 கோடி ரூபாய்க்கு தேர்தல் பத்திரங்கள் ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியாவினால் விற்கப்பட்டுள்ளன. இன்னும் எளிமையாக சொல்வதானால், இந்தியாவின் தேர்தல் கட்சிகள் அடையாளம் தெரியாத நபர்கள் அல்லது நிறுவனங்களிடமிருந்து 16,518 கோடி ரூபாயை நன்கொடையாகப் பெற்றிருக்கின்றன.
தேர்தல் பத்திரங்கள் மூலம் நிதி பெற்றதில் இந்தியாவிலேயே முதல் இடத்தில் இருப்பது நாட்டின் ஆளுங்கட்சியான பாஜகதான். தேர்தல் பத்திரங்கள் மூலம் 2017-18 நிதி ஆண்டு துவங்கி 2022-23 நிதி ஆண்டு வரையில் மொத்தம் 11,450 கோடிக்கு தேர்தல் பத்திரங்கள் விநியோகிக்கப்பட்டிருக்கின்றன. அதில் பாஜகவிற்கு மட்டும் 6566 கோடி ரூபாய் மதிப்பிலான தேர்தல் பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளன. இந்தியாவில் உள்ள அனைத்து கட்சிகள் தேர்தல் பத்திரங்கள் மூலம் பெற்ற மொத்த பணத்தை விட பாஜக என்ற ஒரே கட்சி பெற்ற பணம் என்பது அதிகம். மொத்த பணத்தில் 57% சதவீத பணத்தை பாஜக பெற்றுள்ளது. நாட்டின் பிரதான எதிர்கட்சியான காங்கிரசைக் காட்டிலும் 6 மடங்கு அதிக பணத்தினை பாஜக பெற்றுள்ளது. பாஜக மறைமுகமாக நிதி பெறுவதற்காகத் தான் தேர்தல் பத்திரங்கள் என்ற நடைமுறையையே கொண்டு வந்ததாக எதிர்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.

கால அவகாசம் கேட்பதற்கு எஸ்.பி.ஐ என்ன காரணம் சொல்கிறது?
- எஸ்.பி.ஐ-ன் பல்வேறு கிளைகளில் வாங்கப்பட்ட தேர்தல் பத்திரங்கள் குறித்த விவரங்களை மையப்படுத்தி ஒரே இடத்தில் சேமித்து வைக்கவில்லை. அதாவது சென்ட்ரல் டேட்டா பேஸ் என்ற ஒன்று இத்திட்டத்தில் இல்லை. இதனால் இத்தகவல்களை தொகுப்பதற்கு நிறைய ஆட்கள் தேவைப்படுகின்றனர், பல சிக்கல்கள் இருக்கின்றன என்று அம்மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
- தேர்தல் பத்திரங்கள் வாங்கப்பட்ட வங்கிக் கிளைகளில், பத்திரத்தை வாங்கியவரின் பெயர் மற்றும் KYC விவரங்கள் ஒரு சீல் வைக்கப்பட்ட கவர் மூலம் மும்பையில் உள்ள முதன்மை கிளைக்கு அனுப்பி வைக்கப்படும். டிஜிட்டல் தரவுகளாக எதுவும் சேமிக்கப்படாது. இதுவே இத்திட்டத்தின் நடைமுறையாக இருந்தது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- தேர்தல் பத்திரங்களைப் பெறுகின்ற கட்சிகள் நாட்டில் அங்கீகரிக்கப்பட்ட 29 எஸ்.பி.ஐ கிளைகளில் ஏதேனும் ஒரு கிளையில் ஒரு வங்கிக் கணக்கினை வைத்திருக்க வேண்டும். அந்த கிளையில் உள்ள கணக்கில் தான் தேர்தல் பத்திரங்கள் டெபாசிட் செய்யப்படும். தேர்தல் பத்திரத்தை பணமாக மாற்றிய பிறகு, அந்த வங்கிக் கிளையிலிருந்து ஒரிஜினல் பத்திரமும், பணம் அளிக்கப்பட்ட pay-in slip-ம் சீல் செய்யப்பட்ட கவரில் வைக்கப்பட்டு மும்பையில் உள்ள முதன்மை கிளைக்கு அனுப்பி வைக்கப்படும்.
- தேர்தல் பத்திரங்களின் எண்ணிக்கை போன்ற சில விவரங்கள் மட்டுமே டிஜிட்டல் முறையில் சேமிக்கப்பட்டுள்ளது. ஆனால் பத்திரங்களை வாங்கியவர்களின் பெயர்கள், அவர்களின் KYC விவரங்கள் போன்றவை டிஜிட்டல் முறையில் சேமிக்கப்படவில்லை. அவை அப்படியே Physical form இல் தான் ஆவணப்படுத்தப்பட்டுள்ளது. நன்கொடை வழங்குபவர்களின் ரகசியங்கள் பாதுகாக்கப்படும் என்ற இத்திட்டத்தின் நோக்கத்தை நிறைவு செய்யும் நோக்கத்தோடுதான் எல்லா விவரங்களும் டிஜிட்டல் முறையில் சேமிக்கப்படவில்லை என்று அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரண்டு முக்கியமான கேள்விகள்
எஸ்.பி.ஐ-யின் இந்த மனுவை ஒட்டி பல கேள்விகள் எழுந்துள்ளன. குறிப்பாக தேர்தல் பத்திரங்களுக்கான வழக்கில் முக்கியப் பங்காற்றிய ADR(Association for Democratic Reforms) நிறுவனத்தின் நிறுவனர் ஜக்தீப் சொக்கர் தி வயர் இணையதளத்தில் எழுதிய கட்டுரையில் இரண்டு முக்கியமான கேள்விகளை எழுப்புகிறார்.
- முதலில் இன்றைய காலக்கட்டத்தில் நாட்டின் மிகப்பெரிய வங்கியாகவும், யூபிஐ பேமெண்ட்களில் உலகத்தின் முதன்மையானதாகவும் விளங்கக் கூடிய வங்கி, இப்படிப்பட்ட மிக முக்கியமான தகவல்களை Physical form-இல் தான் வைத்திருந்தோம், டிஜிட்டலாக வைத்திருக்கவில்லை என்று சொல்வதை நம்புவதற்கு ஆச்சரியமாக இருக்கிறது.
- இரண்டாவது பத்திரங்களை அனுப்பி வைப்பதாக சொல்லும் செயல்முறைகளும் பல ஆச்சரியங்களை உருவாக்குகிறது. உதாரணத்திற்கு ஒரு நன்கொடையாளர் டெல்லி கிளையில் 10 கோடி ரூபாய் மதிப்பிற்கான பத்திரத்தை வாங்குகிறார் என்று வைத்துக் கொள்வோம். அவர் அதனை பீகாரில் இயங்குகிற ஒரு கட்சிக்கு அளிக்கிறார். அந்த கட்சி தேர்தல் பத்திரத்திற்கான தனது வங்கிக் கணக்கினை கொல்கத்தாவில் வைத்திருக்கிறது.
இப்போது எஸ்.பி.ஐ-ன் டெல்லி கிளையானது நன்கொடையாளரின் பெயர் உள்ளிட்ட KYC விவரங்களை சீல் செய்யப்பட்ட கவரில் வைத்து மும்பையில் உள்ள முதன்மை கிளைக்கு அனுப்பி வைக்கும். இது டிஜிட்டல் முறையில் டெல்லி கிளையில் சேமிக்கப்பட்டிருக்காது.
கொல்கத்தா கிளையில் அந்த பத்திரத்தை சம்மந்தப்பட்ட கட்சி கொடுக்கும். அப்போது கொல்கத்தா கிளையின் மூலம் 10 கோடி ரூபாய் டெல்லி கிளையிடம் எந்த வெரிஃபிகேசனும் செய்யாமல் கட்சியின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும்.
அதன்பிறகு கொல்கத்தா கிளையிலிருந்து அந்த ஒரிஜினல் பத்திரம் மற்றும் pay-in slip ஆகியவை சீல் செய்யப்பட்ட கவரில் மும்பை முதன்மை கிளைக்கு அனுப்பி வைக்கப்படும். இவை அனைத்தும் 15 நாட்களுக்குள் நடக்கும். ஆனால் டிஜிட்டல் விவரங்கள் எங்குமே இருக்காது.
இப்படிப்பட்ட நடைமுறை கேட்பதற்கே வியப்பாக இல்லையா என்ற கேள்வியை எழுப்புகிறார் ஜக்தீப் சொக்கர். மேலும் பிப்ரவரி 15 அன்றே உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துவிட்ட நிலையில், இத்தனை நாட்கள் அமைதியாக இருந்துவிட்டு விபரங்களை வெளியிட 2 நாட்களே மீதமிருக்கும் நிலையில் எஸ்.பி.ஐ மனு போட்டிருப்பது சந்தேகத்தை எழுப்புவதாகவும் அவர் சொல்கிறார்.
மோடியின் உண்மை முகத்தை மூடி மறைக்கும் முயற்சி
உச்சநீதிமன்றத்தில் எஸ்.பி.ஐ அளித்துள்ள மனு குறித்து கருத்து தெரிவித்துள்ள ராகுல் காந்தி, மோடியின் Donation Business-ஐ மூடி மறைக்கும் முயற்சி நடக்கிறது என்று குற்றம்சாட்டியுள்ளார். மேலும் தேர்தல் பத்திரங்கள் குறித்த உண்மைகளை மக்கள் அறிந்து கொள்வது நாட்டின் மக்களின் உரிமை என்று உச்சநீதிமன்றம் சொன்ன பிறகும், ஏன் தேர்தலுக்கு முன்பாக இந்த விவரங்கள் மக்களுக்கு தெரியக்கூடாது என எஸ்.பி.ஐ நினைக்கிறது என்று கேள்வி எழுப்பியுள்ளார். ஒரே கிளிக்கில் எல்லா விவரங்களை எடுத்துவிட முடியும் எனும்போதும், ஜூன் 30 வரை அவகாசம் கேட்பது மொத்தமும் மறைக்கப்படுவதைக் காட்டுகிறது. தேர்தலுக்கு முன்பாக மோடியின் உண்மை முகம் வெளிவருவதைத் தடுக்கும் கடைசி முயற்சியாக இது நடக்கிறது என்று குற்றம் சாட்டியுள்ளார்.
2 நிமிடம் கூட ஆகாது..இதற்கு 4 மாதம் தேவையா?
தமிழ்நாட்டின் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் இது குறித்து குறிப்பிடும்போது, தேர்தல் பத்திரங்கள் திட்டத்திற்காக 1.5 கோடி ரூபாயை ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா செலவு செய்துள்ளது. ஆனால் அவர்களால் நன்கொடையாளர்களின் பட்டியலையும், நிதி பெற்றவர்களையும் பட்டியலையும் 3 வாரத்தில் கொடுக்க இயலாது என்பது என்ன வகையான பதில்? வன்மையாக கண்டிக்கப்பட வேண்டியது. இந்த தரவுகளை சேகரிக்க 2 நிமிடங்கள் கூட ஆகாது. அதற்கு 4 மாத கால அவகாசம் தேவை என எஸ்.பி.ஐ கேட்டிருப்பது மிகவும் கேவலமானது. இந்த தரவுகளை நாளைக்கே கேட்டாலும் அதனை வழங்கும் திறனை எஸ்.பி.ஐ கொண்டிருக்க வேண்டும். இல்லையென்றால் அவர்கள் வங்கித் தொழிலிலேயே இருக்கக் கூடாது என்று கடுமையான குற்றச்சாட்டினை முன்வைத்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
– விவேகானந்தன்
அடுத்தடுத்து ரெய்டு..30 நிறுவனங்கள் பாஜகவில் கொட்டிய கோடிகள் – பாகம் 1
அடுத்தடுத்து ரெய்டு… தமிழ்நாட்டு நிறுவனங்கள் பாஜகவில் கொட்டிய கோடிகள் – பாகம் 2
உக்ரைன் – பாலஸ்தீனப் போர்கள்..நொறுங்கும் அமெரிக்க ஆதிக்கம்..இந்தியா என்ன செய்ய வேண்டும்? – பகுதி 1
Comments are closed.