“பாஜக ஆட்சிக்கு வந்தால் உச்சநீதிமன்றத்தால் ரத்து செய்யப்பட்ட தேர்தல் பத்திர திட்டத்தை மீண்டும் கொண்டு வருவோம்” என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
அரசியல் கட்சிகளுக்கு வழங்கப்படும் பண நன்கொடைகளுக்கு மாற்றாக, அதில் வெளிப்படைத்தன்மையை கொண்டு வருவதற்கு தேர்தல் பத்திரங்கள் திட்டம் கடந்த 2018 ஆம் ஆண்டு அன்று மத்திய அரசால் அறிமுகப்படுத்தப்பட்டது.
எனினும் கடந்த பிப்ரவரி மாதம் 5 நீதிபதிகள் கொண்ட உச்சநீதிமன்ற அமர்வு, ’தேர்தல் பத்திர திட்டத்தை அரசியலமைப்பிற்கு விரோதமானது’ என்று கூறி ரத்து செய்து உத்தரவிட்டது.
மத்திய அரசு இன்னும் முடிவு செய்யவில்லை!
இந்த நிலையில், ஹிந்துஸ்தான் டைம்ஸ் நாளிதழுக்கு பேட்டி அளித்த மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தேர்தல் பத்திர திட்டம் மீண்டும் கொண்டுவரப்படும் என்று தெரிவித்துள்ளார்.
அவர், ”உச்சநீதிமன்றத்தால் தூக்கி எறியப்பட்ட தேர்தல் பத்திரங்கள் திட்டம் வெளிப்படைத்தன்மை வாய்ந்தது. அதன் மூலம் கருப்பு பணத்தை ஒழிக்க முடியும். அத்திட்டத்தில் மேம்பாடு அவசியமானது.
பாஜக ஆட்சிக்கு வந்தால், அனைவரும் ஏற்கத்தக்க வகையில் ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டு தேர்தல் பத்திரங்களை மீண்டும் கொண்டு வருவோம்.
எனினும் உச்ச நீதிமன்றத்தின் (எஸ்சி) தீர்ப்பை மறுபரிசீலனை செய்வது குறித்து மத்திய அரசு இன்னும் முடிவு செய்யவில்லை” என்று அவர் தெரிவித்துள்ளார்.
கருப்பு பணம் திரும்பி விடும் என அஞ்சுகிறேன்!
முன்னதாக தேர்தல் பத்திர திட்டம் குறித்து பேசிய உள்துறை அமைச்சர் அமித் ஷா, ”கருப்பு பணத்தின் ஆதிக்கத்தை முடிவுக்கு கொண்டு வருவதற்காக தேர்தல் பத்திரம் திட்டம் கொண்டு வரப்பட்டது. தற்போது இந்த திட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது. அதனால் மீண்டும் கருப்பு பணம் திரும்பி விடும் என அஞ்சுகிறேன்.
தேர்தல் பத்திரம் திட்டத்தை ரத்து செய்ததைவிட அதை மேம்படுத்தி இருக்கலாம். ஆனால், அதில் இப்போது ஏதும் செய்ய முடியாது. உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. நான் உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு மதிப்பு அளிக்கிறேன்’ என்று அமித் ஷா கூறியுள்ளார்.
கிறிஸ்டோபர் ஜெமா
சீண்டிய ராகுல் காந்தி… பினராயி விஜயன் பதிலடி : இந்தியா கூட்டணியில் சலசலப்பு!