மக்களவைத் தேர்தல் கூட்டணி தொடர்பாக முடிவெடுக்க பிரேமலதாவுக்கு அனைத்து அதிகாரங்களை வழங்கி மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
சென்னை கோயம்பேட்டில் உள்ள தலைமை அலுவலகத்தில் இன்று (பிப்ரவரி 07) தேமுதிக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் மக்களவைத் தேர்தலில் யாருடன் கூட்டணி அமைப்பது உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.
இந்த கூட்டத்தில் 10 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
தேமுதிக தலைவர் மறைந்த விஜயகாந்த் மற்றும் சமீபத்தில் மறைந்த தேமுதிக கட்சியினருக்கு இரண்டு நிமிடம் மவுன அஞ்சலி.
இந்தியாவின் உயரிய விருதான பத்மபூஷன் விருதை விஜயகாந்துக்கு அறிவித்த பிரதமருக்கும்., மத்திய அரசுக்கும் நன்றி. விஜயகாந்த் மறைவுக்கு இரங்கல் தெரிவித்த அரசியல் தலைவர்களுக்கு, அஞ்சலி செலுத்திய அனைவருக்கும் நன்றி.
சாதி, மத, பேதமின்றி எல்லா அரசியல் தலைவர்களோடு இணக்கமாக வாழ்ந்து மறைந்த விஜயகாந்த் மறைவிற்கு சாதி, மத, அரசியலுக்கு அப்பால் அனைத்து தரப்பினரும் ஒன்று சேர்ந்து தமிழகம் முழுவதும் அமைதிப் பேரணி மற்றும் புகழஞ்சலி செலுத்திய அனைவருக்கும் நன்றி.
மீளாத்துயரிலும், துக்கத்திலும் மனம் தளராமல் அவர் விட்டுச் சென்ற கொள்கையை அவர்தம் பாதையில் சென்று வெற்றியடைய அயராமல் உழைத்திடும் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதாவுக்கு என்றென்றும் எதற்கும் அஞ்சாமல் துணை நின்று வெற்றி படைப்போம் என்று மாவட்ட கழக செயலாளர்கள், கழக நிர்வாகிகள் உள்ளிட்ட கழக தொண்டர்கள் அனைவரும் இக்கூட்டத்தில் உறுதி.
தேமுதிக தலைமைக் கழக வளாகத்தில் சந்தன பேழையில் உறங்கிடும் புரட்சிக் கலைஞர் விஜயகாந்த் உறைவிடத்தை கோயிலாக மாற்றி தமிழக மக்களுக்கு அர்ப்பணிக்குமாறு பொதுச்செயலாளரிடம் இந்த கூட்டத்தின் வாயிலாக கேட்டுக்கொள்கிறது.
பசியோடு வரும் அனைத்து மக்களுக்கும் உணவு படைத்து அவர்களின் பசியாற செய்து அந்த மகிழ்ச்சியில் வாழ்ந்து மறைந்த விஜயகாந்த் சன்னதியில் தினந்தோறும் அன்னதானம் மற்றும் உதவிகள் செய்திட வள்ளல் விஜயகாந்த் நினைவு அன்னதான அறக்கட்டளை (VALLAL VIJAYAKANT MEMORIAL ANNATHANA TRUST) உருவாக்கிய அவரது குடும்பத்தினருக்கு நன்றி.
நீண்ட நாட்களாக நீங்கள் அனைவரும் கேட்டுக்கொண்டதற்கு இணங்க, கழகத்தை சேர்ந்த அனைவரின் குடும்பங்களில் நிகழும் பிறந்தநாள் திருமணநாள், சுப நிகழ்ச்சிகள், குடும்பத்தாரின் நினைவு நாள் போன்ற பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு கேப்டன் கோயிலில் அன்னதானமாகவோ, நலத்திட்ட உதவிகளாகவோ தலைமை கழகத்திடம் முன் அனுமதி பெற்று தங்களின் உதவிகளை செய்யலாம் என்று தேமுதிக இக்கூட்டத்தின் வாயிலாக கேட்டுக்கொள்கிறது.
மாவட்டம் தோறும் விஜயகாந்துக்கு சிலை நிறுவிட தலைமை கழகத்திடம் ஆலோசனை செய்து மாவட்ட கழகச் செயலாளர்கள் அந்தந்த மாவட்டங்களில் சிலை அமைக்க முடிவு எடுப்பதாக இந்த கூட்டத்தின் வாயிலாக தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.
வருகின்ற பிப்ரவரி 12 கொடி நாள் அன்று அனைத்து கிராமங்கள், நகரங்கள் உள்ளிட்ட அனைத்து கிளைகளிலும் புரட்சி தீபக் கொடி ஏற்றிடவும், தீவிர கட்சி உறுப்பினர் சேர்க்கை சேர்க்கவும் இந்த கூட்டத்தில் உறுதி ஏற்றுக்கொள்ளப்படுகிறது.
தேர்தல் விதிமுறைகள் அமுலுக்கு வருவதற்கு முன் விஜயகாந்த் புகழை எடுத்துரைக்கும் வகையில் அனைத்து மாவட்டத்திலும் கிராம சபை கூட்டங்கள், தெரு முனை பிரச்சாரங்கள், சிறிய அளவிலான கூட்டங்கள் மூலம் விஜயகாந்தின் புகழ் மக்களுக்கு சென்றடையும் வகையில் கூட்டங்கள் நடத்திட வேண்டும். தமிழகம் முழுவதும் தேமுதிகவின் நான்கு மண்டலங்களில் கேப்டனின் நினைவேந்தல் புகழஞ்சலியை மாபெரும் பொதுக்கூட்டமாக நடத்திட தேமுதிக இக்கூட்டத்தின் வாயிலாக கேட்டுக்கொள்கிறது.
தேமுதிக இதுவரைக்கும் எந்த கட்சியுடனும் கூட்டணி குறித்து மறைமுகமாகவோ, அதிகாரபூர்வமாகவோ பேசவில்லை. ஊடகங்களில் வரும் செய்திகள் யூகமாகவே கருதப்படுகிறது. மாவட்ட செயலாளர்கள், நிர்வாகிகளின் கருத்துக்களை கேட்டு கூட்டணி பேச குழு அமைத்திடவும், கூட்டணி குறித்து இறுதி முடிவெடுக்கும் முழு அதிகாரத்தை பொதுச் செயலாளர் பிரேமலதாவுக்கு வழங்கப்படுகிறது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பிரியா
அடுத்த 6 நாட்களுக்கு எதிர்பார்க்காதீங்க : வானிலை மையம் எச்சரிக்கை!
Thalapathy 69: ‘அதெல்லாம் நம்பாதீங்க’ விஜயை இயக்கப்போவது இவர்தான்!