இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள ஈரோடு கிழக்குத் தொகுதியில் காங்கிரசுக்கு ஆதரவாக அமைச்சர்கள், முத்துச்சாமி, கே.என்.நேரு உள்ளிட்டோர் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கியுள்ளனர்.
காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் திருமகன் ஈவெரா மறைவால் காலியான ஈரோடு கிழக்குத் தொகுதிக்கு பிப்ரவரி 27 ஆம் தேதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.
அந்தத் தொகுதியில் திமுக கூட்டணி கட்சியான காங்கிரஸ் போட்டியிடுகிறது. இதையொட்டி ஈரோட்டில் இடைத்தேர்தல் பிரச்சாரத்தை திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி இன்று(ஜனவரி 21) காலை தொடங்கியது.
பெரியார் நகரில் அமைச்சர் சு.முத்துசாமியுடன் இணைந்து அமைச்சர் கே.என் நேரு வீடு வீடாகச் சென்று கை சின்னத்திற்கு வாக்கு சேகரிக்கத் தொடங்கினார்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் கே.என்.நேரு, ஏற்கனவே இந்த தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற காங்கிரசுக்கு இந்த தொகுதி ஒதுக்கி தரப்பட்டிருக்கிறது.
அமைச்சர் முத்துசாமி தலைமையில் தேர்தல் பணியாற்ற வந்துள்ளோம். கழகத் தோழர்களுக்கு உதவியாக பொது மக்களுக்கு உதவியாக தேர்தல் பணிகளை செய்ய இருக்கின்றோம்.
நிச்சயமாக இந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் வெற்றி பெறுவார். அதற்கு முழுமையாக அமைச்சர் முத்துசாமி தலைமையில் பணியாற்றுவோம்.
தேர்தலில் மக்கள் கோரிக்கைகளை தேர்தல் முடிந்ததும் செய்து தருவோம். ஏற்கனவே மக்களுக்கான தேவைகளை செய்து கொண்டிருக்கின்றோம்.
இந்த ஆட்சியின் சாதனைகளை சொல்லி வாக்கு சேகரிப்போம். இந்தியாவிலேயே மிகக் குறைந்த அளவு தான் வரி விகிதம் உயர்த்தப்பட்டிருக்கின்றது.
வளர்ச்சி பணிகளுக்கு ஏற்ப வரி வசூலிப்பது அவசியம். எதிர்க்கட்சிகள் தேவையில்லாத குற்றச்சாட்டுகளை சொல்லி வருகிறார்கள்.
நாங்கள் மக்களுக்கு செய்த பணிகளையும் சாதனைகளையும் சொல்லி வாக்கு சேகரித்து வருகின்றோம் என்று பேசினார்.
கலை.ரா
8 ஆண்டுகளில் 10 முறை தோல்வி: அஜித் குறித்து அல்போன்ஸ் புத்திரன்