நாடாளுமன்ற தேர்தலில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் திமுக தலைமையிலான இந்தியா கூட்டணி 40 இடங்களில் வெற்றி பெற்றதை தொடர்ந்து, முதலமைச்சரின் கூடுதல் தலைமை செயலாளர் முருகானந்தம் உள்ளிட்ட ஐஏஎஸ் அதிகாரிகள் முதல்வர் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.
நாடாளுமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை நேற்று (ஜூன் 4) நடைபெற்றது. இதில் தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகள் மற்றும் புதுச்சேரியில் 1 தொகுதி என 40 இடங்களிலும் திமுக தலைமையிலான இந்தியா கூட்டணி கட்சிகள் வெற்றி பெற்றன.
இந்தியா கூட்டணி வெற்றி பெற்றதை தொடர்ந்து தமிழகம் முழுவதும் திமுக தொண்டர்கள் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் உற்சாகமாக கொண்டாடினர்.
தொடர்ந்து நேற்று மாலை சென்னை அறிவாலயத்திற்கு சென்ற முதல்வர் ஸ்டாலினுக்கு திமுக தொண்டர்கள் மற்றும் மாவட்ட செயலாளர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
அப்போது பேசிய ஸ்டாலின், “கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் 39 தொகுதிகளில் வெற்றி பெற்றோம். இந்த தேர்தலில் 40 தொகுதிகளில் வெற்றி பெற்றிருக்கிறோம். அகில இந்திய அளவில் இந்தியா கூட்டணியை ஜனநாயக சக்திகள் அனைவரும் சேர்ந்து உருவாக்கினோம்” என்றார்.
இந்தநிலையில், 40 தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெற்றி பெற்றதை ஒட்டி முதல்வர் ஸ்டாலினை அவரது முகாம் அலுவலகத்தில், முதலமைச்சரின் கூடுதல் தலைமைச் செயலாளர் முருகானந்தம், நிதித்துறை முதன்மைச் செயலாளர் உதயச்சந்திரன், முதலமைச்சரின் செயலாளர்கள் உமாநாத், சண்முகம், அனுஜார்ஜ், காவல்துறை தலைவர் செந்தில் வேலன் ஆகியோர் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
ராகுலின் சகோதரியாக இருப்பதில் பெருமை… : பிரியங்கா எமொஷனல்!
மகாராஷ்டிரா: தேவேந்திர பட்னாவிஸ் ராஜினாமா!