டிஜிட்டல் திண்ணை: தேர்தல் ரிசல்ட்… உதயநிதிக்கு நன்றி சொன்ன பாஜக! மீண்டும் பாஜக கூட்டணி? எடப்பாடி ரியாக்‌ஷன்!

அரசியல் ஐந்து மாநில தேர்தல்

நான்கு மாநில சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் பற்றிய விவரங்கள் வைஃபை ஆன் செய்தவுடன் இன்பாக்ஸில் வந்து விழுந்தன. அவற்றை பார்த்த படியே வாட்ஸ் அப் தனது மெசேஜை டைப் செய்ய தொடங்கியது.

”ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், தெலங்கானா ஆகிய நான்கு மாநில சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று டிசம்பர் 3ஆம் தேதி காலை தொடங்கியது. பகல் வாக்கிலேயே தேர்தல் முடிவுகள் தெளிவாக தெரியத் தொடங்கிவிட்டன.

மத்திய பிரதேசத்தில் ஆளுங்கட்சியாக இருக்கும் பாஜக மீண்டும் ஆட்சியை தக்க வைத்துக் கொண்டுள்ளது. அதே நேரம் ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகிய இரு மாநிலங்களில் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் பாஜகவிடம் பறிகொடுத்துள்ளது. இவற்றிற்கு ஆறுதல் வெற்றியாக தென்னிந்திய மாநிலமான தெலுங்கானாவில் காங்கிரஸ் முதல் முறையாக ஆட்சி அமைத்துள்ளது.
இந்த சட்டமன்றத் தேர்தலில் பாஜக பெற்ற வெற்றியும் காங்கிரஸ் பெற்ற தோல்வியும் தமிழ்நாட்டோடு தொடர்புடையதாக இரு தரப்பிலும் விவாதங்கள் தொடங்கிவிட்டன.

ஹிந்தி ஹார்ட் லேண்ட் எனப்படும் மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் மாநிலங்களில் காங்கிரஸ் தோல்வி அடைந்த நிலையில் முன்னாள் கிரிக்கெட் வீரரும் பாஜகவை சேர்ந்தவருமான வெங்கடேஷ் பிரசாத், ’சனாதனத்தை இழிவு படுத்தினால் இப்படித்தான் விளைவுகள் இருக்கும்’ என்று இன்று பகல் 12 மணிக்கே ட்விட் செய்து இந்தியா கூட்டணிக்குள் சலசலப்பை ஏற்படுத்தினார்.

அதைத் தொடர்ந்து பாஜகவினர் கலந்து கொண்ட ஆங்கில மற்றும் ஹிந்தி டிவி சேனல் விவாதங்களில், ‘தமிழ்நாட்டைச் சேர்ந்த திமுக அமைச்சர் உதயநிதி சனாதனத்தை ஒழிப்போம் என்று பேசியதால் வட இந்திய மக்கள் அந்த க் கூட்டணியில் இருக்கும் காங்கிரசுக்கு நல்ல பதில் கொடுத்துள்ளனர். எங்கள் வெற்றிக்கு உதவிய உதயநிதிக்கு நன்றி’ என்று வெளிப்படையாகவே தெரிவித்தனர்.

கடந்த செப்டம்பர் 2 ஆம் தேதி, சென்னையில் நடந்த சனாதன ஒழிப்பு மாநாட்டில், ‘சனாதனம் என்பது டெங்கு, மலேரியாவை போல ஒழிக்க வேண்டிய ஒன்று’ என்று உதயநிதி ஸ்டாலின் பேசினார். இது வட இந்தியாவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. உதயநிதி இந்துக்களை ஒழிக்க வேண்டும் என்று பேசியதாக பாஜகவின் ஐ டி விங் தேசிய அளவில் பிரச்சாரம் செய்தது. அது மட்டுமல்ல அனைத்து மாநில பாஜக தலைவர்கள், பாஜகவின் மத்திய அமைச்சர்கள் என்று பலரும் உதயநிதியை எதிர்த்து ஆர்ப்பாட்டம், போராட்டங்களில் ஈடுபட்டனர்.

உச்சகட்டமாக பிரதமர் மோடியே, ‘திமுக -காங்கிரஸ் அங்கம் வகிக்கும் இந்தியா கூட்டணி இந்துக்களுக்கு எதிரான கூட்டணி, சனாதனத்தை ஒழிக்கத் துடிக்கும் கூட்டணி’ என்று பிரச்சாரம் செய்தார்.

இந்த சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரத்தில் பாஜக இதை முழுமூச்சாக கையில் எடுக்க… திமுகவோ, ‘பிரதமர் எங்கு சென்றாலும் திமுகவை பற்றியே பேசுகிறார்’ என்று சுயபெருமிதப்பட்டு கொண்டது.

ஆனால், ’நாங்கள் திமுகவையும் உதயநிதியையும் உச்சரித்தது அவர்களை புகழ்வதற்கு அல்ல. எங்களது வெற்றியை உறுதிப்படுத்திக் கொள்ளத்தான்’ என்று இப்போது சொல்கிறார்கள் பாஜகவினர்.

உதயநிதியின் சனாதன ஒழிப்பு பேச்சு குறித்து காங்கிரஸ் தலைமையில் இருந்து சோனியா காந்தியும் ராகுல் காந்தியும் அப்போதே தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலினிடம் தொடர்பு கொண்டு பேசினார்கள்.

அதன் பிறகு உதயநிதியிடம் இருந்து இது தொடர்பாக ஒரு நீண்ட அறிக்கை வந்தது. அதேநேரம், ’நான் சனாதன ஒழிப்பு நிலைப்பாட்டில் இருந்து என்றைக்கும் மாறமாட்டேன். அதனால் அமைச்சர் பதவி போனாலும் சரி’ என்று செய்தியாளர்களை சந்திக்கும் போது கூறினார் உதயநிதி.

இப்போது உதயநிதி கிளப்பிய சனாதன ஒழிப்பு விவகாரமும் வட இந்தியாவில் காங்கிரஸ் தோற்றதற்கான காரணங்களில் ஒன்று என்று காங்கிரஸ் தரப்பிலும் முணுமுணுக்கிறார்கள்.

இதே போல மூன்று மாநிலங்களில் பாஜக பெற்ற பெரும் வெற்றி தமிழ்நாட்டில் அதிமுக கூட்டணியில் தாக்கத்தை ஏற்படுத்துமா என்பது பற்றிய விவாதமும் நடந்து வருகிறது. கடந்த செப்டம்பர் மாதம் 18ஆம் தேதி முதல் பாஜக கூட்டணியில் இருந்து அதிமுக விலகியது. இனி எப்போதும் பாஜகவுடன் கூட்டணி கிடையாது என்று எடப்பாடி அறிவித்தார்.

5 மாநில சட்டமன்றத் தேர்தல் பணிகளில் பிசியாக இருந்ததால் அப்போது அதிமுக கூட்டணி விவகாரம் பற்றி பாஜக தேசிய தலைமை தீவிரமாக அணுகவில்லை. 5 மாநில தேர்தல் முடிந்து பேசிக் கொள்ளலாம் என்று விட்டுவிட்டது.

இப்போது 3 மாநிலங்களில் வெற்றி பெற்றிருக்கிற நிலையில் மீண்டும் பாஜகவோடு கூட்டணி வைக்க எடப்பாடிக்கு நிர்பந்தம் கொடுப்பது… அதற்கு எடப்பாடி சம்மதிக்காத பட்சத்தில் விசாரணை அமைப்புகளின் வேட்டை அதிமுக பக்கமும் திரும்பும் என்பதுதான் டெல்லியின் திட்டமாக இருந்தது.

அதனால்தான் 5 மாநில தேர்தல் முடியும் வரை அதிமுகவை விமர்சிக்க வேண்டாம் என்று தமிழ்நாடு பாஜகவினருக்கு தேசிய தலைமை உத்தரவிட்டிருந்தது.

இப்போது தேர்தலில் பெரும் வெற்றி பெற்று பிரதமர் மோடியின் இமேஜ் உயர்ந்திருக்கிற நிலையில் அவருக்கு முந்திக் கொண்டு வாழ்த்து தெரிவித்தார் ஓபிஎஸ். ஆனால் எடப்பாடியோ வாழ்த்து எதுவும் தெரிவிக்கவில்லை.

இந்த நிலையில் இன்று தன்னிடம் பேசிய அதிமுக தலைமை நிர்வாகிகளிடம், ‘பாஜகவோட வெற்றி ஓரளவுக்கு நாம் எதிர்பார்த்ததுதான். அதுக்காக மறுபடியும் அவங்களோட கூட்டணி அப்படின்றதெல்லாம் கெடையவே கெடையாது. தனியா நின்னாதான் அதிமுக ஜெயிக்க முடியும் அப்படிங்குற புள்ளி விவரங்கள் அவங்களுக்கே தெரியும். அதனால பாஜக வெற்றி பெற்றதால அவங்க என்னதான் அழுத்தம் கொடுத்தாலும் கூட்டணிக்கு வாய்ப்பே கெடையாது.

நான் ஒரு முடிவெடுத்துட்டா அதில் பின் வாங்க மாட்டேன்’ என்று சொல்லியிருக்கிறார் எடப்பாடி” என்ற மெசெஜுக்கு செண்ட் கொடுத்து ஆஃப் லைன் போனது வாட்ஸ் அப்.

மிக்ஜாம் புயல் : தனியார் நிறுவனங்களுக்கு அறிவுரை!

தெலங்கானா டிஜிபி சஸ்பெண்ட்: காரணம் இதுதான்!

+1
0
+1
2
+1
1
+1
3
+1
3
+1
2
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *