விஜயகாந்த் டிவியை வாங்கும் விஜய்!
புதிய கட்சி தொடங்கியுள்ள விஜய் தனது கட்சிக்காக டிவி ஒன்றை ஆரம்பிக்கலாமா என்ற ஆலோசனையை தொடங்கியிருக்கிறார். புதிதாக செயற்கைக் கோள் தொலைக்காட்சி லைசென்ஸ் வாங்குவதை விட ஏற்கனவே இருக்கும் தொலைக்காட்சியை வாங்கலாம் என்று அவருக்கு யோசனை சொல்லப்பட… ஏற்கனவே விஜயகாந்த் ஆரம்பித்த கேப்டன் டிவியை வாங்கலாமா என்ற முதல்கட்ட பேச்சு தொடங்கியிருக்கிறது.
மத்திய அரசுப் பணிக்கு செல்லும் முக்கிய அதிகாரிகள்!
தேசிய அளவில் மீண்டும் பாஜக ஆட்சிதான் வரும் என்று பல்வேறு தரப்பினரும் யூகித்து வரும் நிலையில் தமிழ்நாட்டின் முக்கிய பொறுப்புகளில் இருக்கும் ஐ.ஏ.எஸ், அதிகாரிகள் மாநில அரசுப் பணியில் இருந்து மத்திய அரசுப் பணிக்கு செல்லும் முயற்சியில் இறங்கியுள்ளனர். தமிழ்நாடு மின்சார வாரிய தலைவராக இருக்கும் ராஜேஷ் லக்கானி, சென்னை மாநகராட்சி கமிஷனராக இருக்கும் ஜெ.ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட முக்கிய அதிகாரிகள் மத்திய அரசுக்கு செல்லும் முயற்சியில் இருப்பவர்களில் சிலர்.
அதானிக்கு விற்க மறுப்பு… இந்தியா சிமென்ட்ஸ் மீது ED ரெய்டு பின்னணி!
கடந்த பிப்ரவரி 1 ஆம் தேதி சென்னையில் பிரபல தொழில் நிறுவனமான இந்தியா சிமென்ட்ஸ் தொடர்பான இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. இதன் உரிமையாளர் தான் சென்னை ஐபிஎல் கிரிக்கெட் அணியின் உரிமையாளராக இருக்கிறார்.
இந்தியா சிமென்ட்ஸ் நிறுவனத்தை பிரபல அதானி குழுமத்திடம் விற்பனை செய்யுமாறு அதன் தலைவர் சீனிவாசனுக்கு டெல்லியில் இருந்து அழுத்தம் வந்திருக்கிறது. ஆனால் சீனிவாசன் அதற்கு மறுத்துவிட்டார். ‘என் நிறுவனத்தை விற்கும் முடிவில் இல்லை. அப்படி ஒருவேளை விற்றாலும் பிர்லா போன்ற நிறுவனங்களுக்கு விற்போமே தவிர, அதானிக்கு விற்க மாட்டோம்’ என்று இந்தியா சிமென்ட்ஸ் தரப்பில் உறுதியாக நின்றதையடுத்துதான் இந்த ED ரெய்டு என்கிறார்கள் தொழில் துறை வட்டாரங்களில்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…