எலெக்ஷன் ஃபிளாஷ் : பாஜக அணியில் பாமக!
மக்களவைத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் நிலையில் தமிழ்நாட்டில் கூட்டணி அமைப்பது தொடர்பாக பாஜக முழுவீச்சில் செயல்பட்டு வருகிறது.
பாஜகவுடன் கூட்டணி வைத்து இந்த தேர்தலைச் சந்திப்பதாக நேற்று (மார்ச் 11) அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அறிவித்தார். சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் தனது கட்சியையே கலைத்துவிட்டு இன்று பாஜகவில் இணைத்து ஆதரவு தெரிவித்துள்ளார்.
இந்தச்சூழலில் இன்று(மார்ச் 12) இரவு 8.30 மணிக்கு டெல்லியிலிருந்து பாஜக தேசிய பொறுப்பாளர்களான வி.கே.சிங், கிஷன் ரெட்டி ஆகியோர் மீண்டும் சென்னை வருகின்றனர்.
மயிலாடுதுறையில் இருக்கும் டிடிவி தினகரனையும் சென்னைக்கு வர சொல்லியிருக்கிறார்கள். அதன்படி அவரும் இரவு சென்னை வருகிறார்.
இன்று இரவு பாஜக தேசிய பொறுப்பாளர்கள் டிடிவி தினகரன் இடையே தொகுதிப் பங்கீடு தொடர்பாகப் பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது.
மறுபக்கம், சமீப நாட்களாகவே பாஜக – பாமகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தி வந்தது.
இதில், பாமக தலைவர் அன்புமணி தரப்பில், 9 மக்களவை தொகுதி + 1 ராஜ்ய சபா சீட் மற்றும் ஒரு அமைச்சர் பதவி கேட்கப்பட்டது.
ஆனால், அமைச்சர் பதவிலாம் இல்லை. 5 மக்களவைத் தொகுதி + 1 ராஜ்யசபா சீட் மட்டும் தருவதாக பாஜக தரப்பில் சொல்லப்பட்டிருக்கிறது.
இதற்கு அன்புமணி தரப்பில், கடந்த தேர்தலிலேயே நாங்கள் அதிமுக கூட்டணியில் 1 ராஜ்யசபா + 5 மக்களவைத் தொகுதியில் நின்றோம் எனக் கூறி கூடுதல் தொகுதிகளை கேட்டிருக்கிறார்கள்.
இதைத்தொடர்ந்து, 7 மக்களவைத் தொகுதி, ஒரு ராஜ்ய சபா சீட்டுக்கு பதில் அகில இந்தியளவில் செயல்படும் வாரியங்களில் முக்கிய பதவி தருவதாக முடிவு செய்து பாஜக தரப்பில் பாமகவினருடன் பேசியிருக்கிறார்கள்.
இந்தச்சூழலில் சென்னை வரும் பாஜக தேசிய பொறுப்பாளர்களான வி.கே.சிங், கிஷன் ரெட்டி ஆகியோரை அன்புமணி ராமதாஸ் இன்று இரவோ அல்லது நாளையோ சந்திக்க வாய்ப்பிருக்கிறது என்கிறார்கள் பாஜக வட்டாரத்தில்.
அடுத்தக்கட்டமாக பாஜக தேமுதிகவுடன் பேச்சுவார்த்தை நடத்த இருப்பதாக தகவல்கள் வருகின்றன.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
தேர்தல் பத்திர விவரங்களை வழங்கிய எஸ்.பி.ஐ : உடனே வெளியிடுமா தேர்தல் ஆணையம்?
Suriya : மீண்டும் ஷூட்டிங் செல்லும் ‘கங்குவா’ படக்குழு?