தேர்தல் பத்திர விவரங்களை வெளியிடுவது தொடர்பாக தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் பேட்டி அளித்துள்ளார்.
மக்களவைத் தேர்தல் தயார்நிலை குறித்து ஆய்வு செய்யத் தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் தலைமையிலான தேர்தல் ஆணைய அதிகாரிகள் ஜம்மு காஷ்மீரில் 3 நாள் பயணம் மேற்கொண்டனர்.
இந்நிலையில் இன்று (மார்ச் 13) பிற்பகல் தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ்குமார் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது, தேர்தல் பத்திர தரவுகளை எஸ்.பி.ஐ தேர்தல் ஆணையத்திடம் வழங்கியிருக்கும் நிலையில், அந்த தரவுகள் எப்போது வெளியிடப்படும் என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
இதற்குப் பதிலளித்த தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார், “பொதுத் தேர்தலை நடத்தத் தயாராக இருக்கிறோம். தேர்தல் ஆணையம் வெளிப்படைத்தன்மையுடன் செயல்பட்டு வருகிறது.
ஆணையம் எப்படிச் செயல்படுகிறது, எவ்வாறு செயல்படுகிறது என வாக்காளர் தெரிந்துகொள்ள உரிமை இருக்கிறது. தேர்தல் பத்திர விவகாரத்திலும் தேர்தல் ஆணையம் வெளிப்படைத்தன்மையுடன் செயல்படும்.
தேர்தல் பத்திர விவரங்களை எஸ்.பி.ஐ வங்கி நேற்று ஆணையத்திடம் வழங்கியிருக்கிறது. நான் டெல்லி திரும்பிய பிறகு அவர்கள் அளித்த தரவுகளைப் பார்வையிடவுள்ளேன். பிறகு சரியான நேரத்தில் அந்த தரவுகள் வெளியிடப்படும்” என்று பதிலளித்தார்.
2019 முதல் இதுவரை பெறப்பட்ட தேர்தல் பத்திர விவரங்களை எஸ்.பி.ஐ, தேர்தல் ஆணையத்திடம் வழங்குமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால், இதற்குக் கால அவகாசம் வேண்டும் என்று கோரியிருந்தது எஸ்.பி.ஐ.
இதற்கு மறுப்புத் தெரிவித்த உச்ச நீதிமன்றம், மார்ச் 12 மாலைக்குள் தரவுகளைத் தேர்தல் ஆணையத்திடம் கொடுக்கவில்லை என்றால் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க நேரிடும் என்று எச்சரித்தது.
உச்ச நீதிமன்றத்தின் கண்டிப்பான உத்தரவைத் தொடர்ந்து நேற்று மாலை அனைத்து தரவுகளையும் தேர்தல் ஆணையத்திடம் வழங்கியது எஸ்.பி.ஐ.
‘இந்த தரவுகள் எல்லாம் தொகுக்கப்படாமல் இருப்பதால், உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி மார்ச் 15ஆம் தேதி வெளியிடுவது சிரமம்’ என தேர்தல் ஆணைய தகவல்கள் தெரிவித்தன.
இந்தச்சூழலில் உரிய நேரத்தில் தரவுகள் வெளியிடப்படும் என்று தேர்தல் ஆணையர் அறிவித்துள்ளார்.
பிரியா
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
RCB: களமிறங்கிய ‘காந்தாரா’ ஹீரோ… இனி யாராலும் ‘இத’ தடுக்க முடியாது!
செந்தில் பாலாஜியின் கோரிக்கையை ஏற்ற நீதிபதி அல்லி