வைஃபை ஆன் செய்ததும் இந்திய தேர்தல் ஆணையம் நேற்று பிப்ரவரி 17 ஆம் தேதி மகாராஷ்டிராவின் மாநிலக் கட்சியான சிவசேனா கட்சி யாருக்கு என்ற வழக்கில் கொடுத்துள்ள தீர்ப்பின் 78 பக்க நகல் இன்பாக்ஸில் வந்து விழுந்தது.
அதைப் படித்துவிட்டு வாட்ஸ் அப் தனது மெசேஜை டைப் செய்யத் தொடங்கியது.
“சிவசேனா யாருக்கு என்று தேர்தல் ஆணையம் கொடுத்த தீர்ப்பு தமிழ்நாட்டில் அதிமுக யாருக்கு என்ற கேள்விக்கான பதில் முன்னோட்டமாக இருக்கிறது என்கிறார்கள் அதிமுகவினர். அதைப் பார்க்கும் முன் சிவசேனா விவகாரம் பற்றி ஒரு சின்ன பிளாஷ்பேக்கை பார்த்துவிடலாம்.
இந்தியாவிலேயே பாஜகவோடு அதிக ஆண்டுகள் தொடர்ந்து கூட்டணிக் கட்சியாக இருந்து வந்தது சிவசேனா. 2019 சட்டமன்றத் தேர்தலில் சிவசேனா பாஜக கூட்டணி தொடர்ந்த நிலையில்… தேர்தல் முடிவுகளுக்குப் பின் யார் முதலமைச்சர் என்பதில் சிவசேனாவுக்கும் பாஜகவுக்கும் பிரச்சினை ஏற்பட்டது.
இதையடுத்து திடீரென சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் ஆகிய கட்சிகளோடு இணைந்து மஹா விகாஸ் அகாதி என்ற புதிய கூட்டணியை அமைத்தார். இதன்படி உத்தவ் தாக்கரே முதலமைச்சர் ஆனார்.
இந்த ஆட்சி இரு வருடங்களே நீடித்தது. 2022 ஆம் ஆண்டு சிவசேனாவில் இருந்து மூன்றில் இரு பகுதி எம்.எல்.ஏ.க்கள் ஏக் நாத் ஷிண்டே தலைமையில் பாஜகவோடு சேர்ந்து கூட்டணி அமைத்தனர். சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்த முதல்வர் உத்தவ் தாக்கரே 2022 ஜூன் மாதம் 29 ஆம் தேதி தனது பதவியை ராஜினாமா செய்தார். மறுநாள் ஜுன் 30 ஆம் தேதி ஏக் நாத் ஷிண்டே முதல்வராகவும், பாஜகவின் தேவேந்திர பட்னாவிஸ் துணை முதல்வராகவும் பதவியேற்றனர்.
இதன் பின் யார் உண்மையான சிவசேனா என்ற மோதல் உத்தவ் தாக்கரேவுக்கும் ஏக் நாத் ஷிண்டேவுக்கும் தொடங்கியது. இதில்தான் இப்போது தேர்தல் ஆணையம் நேற்று (பிப்ரவரி 17) தீர்ப்பு வழங்கியிருக்கிறது.
ஏக்நாத் ஷிண்டே தேர்தல் ஆணையத்திடம் நாங்கள்தான் உண்மையான சிவசேனா என்று கூறி வழக்குத் தொடுத்தார். அதன்படியே உத்தவ் தாக்கரேவை எதிர் மனு தாரராக சேர்த்து விசாரணை நடத்திய தேர்தல் ஆணையம் இந்தத் தீர்ப்பை கொடுத்துள்ளது.
தேர்தல் ஆணையம் இதில் மூன்று கட்டங்களாக சோதித்துள்ளது என்று தனது 78 பக்க ஆணையிலே குறிப்பிட்டிருக்கிறது. அதாவது கட்சியின் கொள்கை, சித்தாந்தப்படி யார் இருக்கிறார்கள்? உத்தவ்வா, ஷிண்டேயா? என்பது முதல் சோதனை. இரண்டாவது சோதனை கட்சியின் சட்ட திட்ட விதிகள் யாருக்கு சாதகமாக இருக்கின்றன? மூன்றாவது கட்சியின் மெஜாரிட்டி சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் யாரிடம் இருக்கிறார்கள்?
இந்த மூன்று சோதனைகளின் அடிப்படையில்தான் தேர்தல் ஆணையம் இந்தத் தீர்ப்பை வழங்கியிருக்கிறது.
முதல் சோதனை- சித்தாந்தம் கொள்கை- இரு தரப்பும் இதில் நாங்கள்தான் சிவசேனாவின் கொள்கையோடு இருக்கிறோம் என்று வாதங்களை வைத்தனர். இந்த சோதனைக்கு தேர்தல் ஆணையமே விடை காண முடியவில்லை என்று சொல்லிவிட்டது.
இரண்டாவது சோதனை கட்சி சட்ட விதிகளின்படி யார் நடந்திருக்கிறார்கள் என்பது.
’2018 ஆம் ஆண்டில் உத்தவ் தாக்கரே சிவசேனா கட்சி விதிகளில் செய்த திருத்தங்கள் ஜனநாயகத்திற்கு எதிரானது’ என்று ஏக்நாத் ஷிண்டே தரப்பு கூறியது. அதாவது 2018 ஆம் ஆண்டு உத்தவ் தாக்கரே சிவசேனாவின் சட்ட விதிகளில் திருத்தம் கொண்டுவந்தார், அதன் படி அனைத்து அதிகாரங்களும் அவர் ஒருவருக்கே குவிக்கப்பட்டன. இதை தேர்தல் ஆணையம் ஜனநாயகப் பற்றாக்குறையாக இருக்கிறது என்று தனது தீர்ப்பில் குறிப்பிடுகிறது.
மூன்றாவது பெரும்பான்மைக்கான சோதனை.
வழக்கின் சூழ்நிலையில், பெரும்பான்மை சோதனையை நம்ப வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதாக ஆணையம் கூறியது. ஒரு அரசியல் கட்சியை அங்கீகரிப்பதன் அடிப்படையானது, சட்டப் பேரவை அல்லது மக்களவைக்கான தேர்தலில் பதிவான வாக்குகள் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களின் எண்ணிக்கை ஆகியவற்றின் அடிப்படையில்தான் என்பதை இந்தியத் தேர்தல் ஆணையம் குறிப்பிடுகிறது.
அந்த வகையில் சிவசேனாவின் 55 எம்.எல்.ஏ.க்களில் 40 எம்.எல்.ஏ.க்கள் ஏக் நாத் ஷிண்டேவிடம் இருக்கின்றனர். மக்களவை எம்பிக்கள் 17 பேரில் 13 பேர் ஷிண்டேவிடம் இருக்கிறார்கள். ஆனால் கட்சி அமைப்பு ரீதியாக இரு பிரிவினராலும் கூறப்படும் எண்ணிக்கையில் யாருக்கு பெரும்பான்மை என்ற கூற்று திருப்திகரமாக இல்லை.
ஆனால் சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்களில் ஏக் நாத் ஷிண்டேவுக்கே பெரும்பான்மை இருப்பதால் சிவசேனா என்ற கட்சியின் பெயரையும், “வில் அம்பு” என்ற கட்சியின் சின்னத்தையும் ஏக்நாத் ஷிண்டே கோஷ்டியே தக்க வைத்துக் கொள்ள ஆணையம் உத்தரவிட்டது.
தேர்தல் ஆணையத்தின் இந்தத் தீர்ப்பு அதிமுகவுக்கு பொருந்துமா என்ற கேள்விகள் எழுகின்றன.
ஆனால் இந்தத் தீர்ப்பில் பன்னீருக்கும் சில விஷயங்கள் சாதகமாக இருக்கின்றன. எடப்பாடிக்கும் சில விஷயங்கள் சாதகமாக இருக்கின்றன. அதாவது எம்பிக்கள், எம்.எல்.ஏ.க்கள் பெரும்பான்மையில் எடப்பாடியிடமே கட்சியைக் கொடுப்பதற்கு தெளிவான முன்னோட்டமாக இந்த தீர்ப்பு இருக்கிறது.
ஆனால் சட்ட திட்ட விதிகளில் உத்தவ் தாக்கரே செய்த திருத்தங்களை தேர்தல் ஆணையம் எதிர்த்துள்ளது. அதுபோல் இங்கே எடப்பாடி பழனிசாமி கட்சியின் சட்ட திட்ட விதிகளில் செய்த திருத்தங்களை தேர்தல் ஆணையம் எதிர்க்கும் என்று எதிர்பார்க்கிறது பன்னீர் தரப்பு.
ஆனால் இந்த மூன்று சோதனைகளைத் தாண்டி பாஜகவின் சோதனையில் யார் வெற்றிபெறுகிறார்களோ அவர்களுக்குதான் அதிமுக என்கிறார்கள் அதிமுகவினரே. சமீபத்தில் ஈரோடு கிழக்கு இடைத் தேர்தலில் இரட்டை இலை சின்னத்தை உச்ச நீதிமன்றத்தின் வித்தியாசமான வழிகாட்டலின்படி கொடுத்தது தேர்தல் ஆணையம்.
எனவே எடப்பாடி தரப்பினர் சிவசேனா வழக்கில் தேர்தல் ஆணையம் எடுத்துள்ள முடிவால் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். இதே பெரும்பான்மை அடிப்படையில் எடப்பாடிக்கே இரட்டை இலை என்கிறார்கள்” என்ற மெசேஜுக்கு செண்ட் கொடுத்து ஆஃப் லைன் போனது வாட்ஸ் அப்.
“34 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை”-ஈரோடு தேர்தல் அதிகாரி பேட்டி!
கர்நாடக வனத்துறை துப்பாக்கிச் சூடு : பிரேத பரிசோதனைக்கு உறவினர்கள் நிபந்தனை!