கர்நாடகா தேர்தல்: ஓபிஎஸ் தரப்பு வேட்பாளருக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்!

Published On:

| By Selvam

கர்நாடகா சட்டமன்ற தேர்தலில் அதிமுக சார்பில் வேட்புமனு தாக்கல் செய்த ஓ.பன்னீர் செல்வம் தரப்பு வேட்பாளர் குமாருக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

கர்நாடகா சட்டமன்ற தேர்தலில் எடப்பாடி பழனிசாமி புலிகேசி நகர் தொகுதியிலும் ஓ.பன்னீர் செல்வம், புலிகேசி நகர், கோலார் தங்கவயல், காந்திநகர் என மூன்று தொகுதிகளிலும் வேட்பாளர்களை அறிவித்திருந்தனர்.

இதில் புலிகேசி நகர் தொகுதியில் எடப்பாடி பழனிசாமி தரப்பு வேட்பாளர் அன்பரசன் வேட்புமனு ஏற்கப்பட்டது. ஓ.பன்னீர் செல்வம் தரப்பு வேட்பாளர் நெடுஞ்செழியன் வேட்புமனு நிராகரிக்கப்பட்டது.

கோலார் தங்கவயல் தொகுதியில் ஓ.பன்னீர் செல்வம் தரப்பு வேட்பாளர் அனந்தராஜ் வேட்புமனு சுயேட்சையாக போட்டியிட ஏற்கப்பட்டது.

காந்திநகர் தொகுதியில் ஓ.பன்னீர் செல்வம் தரப்பு வேட்பாளர் குமார் வேட்புமனு அதிமுக சார்பில் போட்டிட ஏற்கப்பட்டது.

எடப்பாடி பழனிசாமியை தேர்தல் ஆணையம் பொதுச்செயலாளராக அங்கீகரித்தும் கர்நாடகா தேர்தலில் இரட்டை இலை சின்னத்தை ஒதுக்க வேண்டும் என்று உத்தரவிட்ட நிலையில் ஓ.பன்னீர் செல்வம் தரப்பு வேட்பாளருக்கு அதிமுக சார்பில் போட்டியிட வேட்புமனு ஏற்கப்பட்டது எடப்பாடி பழனிசாமி தரப்பில் சலசலப்பை ஏற்படுத்தியது.

இதனை தொடர்ந்து இந்திய தலைமை தேர்தல் ஆணையருக்கும் கர்நாடகா தலைமை தேர்தல் ஆணையருக்கும் எடப்பாடி பழனிசாமி மின்னஞ்சலில் புகார் மனு அனுப்பியிருந்தார்.

இன்று காலை கர்நாடகா அதிமுக செயலாளர் எஸ்.டி.குமார் கர்நாடகா தலைமை தேர்தல் ஆணையரை சந்தித்து காந்தி நகர் தொகுதியில் குமார் என்பவரது வேட்புமனு அதிமுக சார்பில் ஏற்கப்பட்டுள்ளது. அவர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி வழங்கிய புகார் மனுவை அளித்தார்.

இதுதொடர்பாக ஓபிஎஸ் தரப்பு வேட்பாளர் குமாருக்கு விளக்கம் கேட்டு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

செல்வம்

விக்ரம் வேதா சீரியலுக்கு சிக்கலா?

மைதானத்தில் ஜெர்சியை மாற்றிய பாண்டியா பிரதர்ஸ்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel