புதிய நிர்வாகிகள் குறித்து ஓ.பன்னீர்செல்வம் இன்று (ஜூலை 30) மீண்டும் தேர்தல் ஆணையத்துக்கு கடிதம் எழுதியுள்ளார்.
அதிமுகவில் ஓ.பன்னீர்செல்வம் ஓர் அணியாகவும், எடப்பாடி பழனிசாமி மற்றொரு அணியாகவும் செயல்பட்டு வரும் நிலையில், இருதரப்பும் நிர்வாகிகளை நீக்கியும், புதிய பதவிகளையும் வழங்கி வருகின்றனர். இந்த நிலையில் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் என்ற வகையில் எடப்பாடி பழனிசாமி, கே.பி.முனுசாமி உள்ளிட்ட பல நிர்வாகிகளை நீக்கினார் ஓ.பன்னீர்செல்வம்.
அவர்களுக்குப் பதிலாக தம்முடைய ஆதரவாளர்களான வைத்திலிங்கம், ஜே.சி.டி.பிரபாகர், மனோஜ் பாண்டியன் ஆகியோருக்கு புதிய பதவிகளை வழங்கினார். அதில் வைத்திலிங்கத்துக்கு இணை ஒருங்கிணைப்பாளர் பதவியையும், ஜே.சி.டி.பிரபாகர், மனோஜ் பாண்டியன் ஆகியோருக்கு துணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளையும் வழங்கி நியமனம் செய்தார்.
இதையடுத்து, இவர்களின் பணி நியமனம் தொடர்பாக ஓ.பன்னீர்செல்வம் மீண்டும் தேர்தல் ஆணையத்துக்குக் கடிதம் எழுதியுள்ளார். அதிமுக உட்கட்சி விவகாரம் தொடர்பாக ஓ.பன்னீர்செல்வம் தொடர்ந்து தேர்தல் ஆணையம், வங்கிகள், சட்டமன்ற சபாநாயகர் ஆகியோருக்கு உடனுக்குடன் கடிதம் எழுதி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜெ.பிரகாஷ்