தேர்தல் ஆணையம் அனுப்பிய கடிதத்தை, அதிமுக திருப்பி அனுப்பியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதிமுகவில் ஏற்பட்டிருக்கும் ஒற்றைத் தலைமையால் அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி இருவரும் தனித்தனி அணிகளாய்ச் செயல்பட்டு வருகின்றனர்.
இதனால் அவர்கள் இருவருக்கும் தனித்தனியாகத்தான் அழைப்புகள் விடுக்கப்பட்டு வருகின்றன. ஆனால், சமீபகாலமாக இந்த நிகழ்வில் மாற்றம் ஏற்பட்டு வருகிறது.
அதாவது, கடந்த டிசம்பர் 5ஆம் தேதி, ஜி20 மாநாடு தொடர்பான ஆலோசனைக் கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் டெல்லியில் நடைபெற்றது. இதற்கு அதிமுக சார்பில் எடப்பாடி பழனிசாமிக்கு மட்டுமே அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
அதுவும், ’அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர்’ எனக் குறிப்பிட்டு மத்திய அரசு எழுதியிருந்த கடிதத்தை, அவர் பெரிய அங்கீகாரமாகக் கருதினார்.
மேலும், எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்திருந்த அதிமுக வரவு செலவு கணக்குகளையும் இந்திய தேர்தல் ஆணையம் ஏற்றுக்கொண்டு, அதை தன்னுடைய இணையதள பக்கங்களிலும் வெளியிட்டிருந்தது.
இதனால் அதிருப்தியடைந்த பன்னீர்செல்வம், இதுகுறித்து ஒரு நீண்ட கடிதத்தை எழுதி மத்திய அரசுக்கு அனுப்பியிருந்தார். ஆனால், அதற்கு எந்தப் பதிலும் இதுவரை கிடைத்ததாகத் தெரியவில்லை.
இந்த நிலையில், மாநிலம் விட்டு மாநிலம் புலம்பெயா்ந்து வாழ்வோா் வாக்களிப்பதற்காக ரிமோட் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தை இந்திய தோ்தல் ஆணையம் அறிமுகம் செய்ய உள்ளது. இந்த இயந்திரத்தின் செயல்பாடு குறித்து அரசியல் கட்சிகளுக்கு ஜனவரி 16இல் டெல்லியில் விளக்கிக் காட்டப்பட உள்ளது.
இதற்காக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுக்கு அழைப்பு அனுப்பப்பட்டு வருகிறது. அந்த வகையில், தமிழக தலைமைத் தோ்தல் அதிகாரி சத்ய பிரத சாகு, அதிமுகவுக்கு இரண்டு கடிதங்களை அனுப்பியிருந்தார்.
ஒருங்கிணைப்பாளா் என ஓ.பன்னீா்செல்வத்தையும், இணை ஒருங்கிணைப்பாளா் என எடப்பாடி பழனிசாமியையும் குறிப்பிட்டு அழைப்பிதழ் அனுப்பி இருந்தார்.
இந்த நிலையில், தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி அனுப்பிய கடிதத்தை அதிமுக தலைமை அலுவலக நிர்வாகிகள் பெற்றுக்கொள்ள மறுத்து திருப்பி அனுப்பிவிட்டனர்.
தேர்தல் ஆணையம் குறிப்பிட்ட பதவிகளில் யாரும் இல்லை என அவர்கள் இத்தகைய நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர். கடிதத்தை, திருப்பி அனுப்பிய நிகழ்வு அதிமுகவில் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஜெ.பிரகாஷ்
2023: நியூசிலாந்தில் புத்தாண்டு பிறந்தது!
வரி ஏய்ப்பு செய்யும் நிறுவனங்கள்: உயர்நீதிமன்றம் அதிரடி!