மக்களவைத் தேர்தலில் போட்டியிட மதிமுகவுக்கு தேர்தல் ஆணையம் தீப்பெட்டி சின்னம் ஒதுக்கியுள்ளது.
2024 மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் மதிமுக திருச்சி தொகுதியில் போட்டியிடுகிறது. வைகோவின் மகனும் அக்கட்சியின் முதன்மை செயலாளருமான துரை வைகோ திமுக கூட்டணியில் போட்டியிடுகிறார்.
இந்த தேர்தலில் தங்களுக்கு பம்பரம் சின்னம் ஒதுக்க வேண்டும் என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.
இந்த வழக்கில், “ பம்பரம் சின்னம் பொதுச்சின்னம் பட்டியலிலும் இல்லை, அங்கீகரிக்கப்பட்ட சின்னம் பட்டியலிலும் இல்லை. எனவே மதிமுகவுக்கு சின்னம் வழங்குவது குறித்து சம்பந்தப்பட்ட தேர்தல் அலுவலரே முடிவெடுப்பார்” என்று தேர்தல் ஆணையம் உயர் நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தது.
தேர்தல் ஆணையம் பம்பரம் சின்னம் ஒதுக்கவில்லை என்றால் தீப்பெட்டி சின்னம் கேட்க துரை வைகோ முடிவு செய்திருந்தார். இதுகுறித்து மின்னம்பலத்தில் பம்பரம் இல்லையென்றால் தீப்பெட்டி… துரை வைகோ திட்டம்! என்ற தலைப்பில் செய்தி வெளியிட்டிருந்தோம்.
இந்நிலையில் வேட்புமனுவை திரும்ப பெற கால அவகாசம் முடிவடைந்திருக்கும் நிலையில், இன்று சுயேச்சை வேட்பாளர்கள் போட்டியிடுவதற்கான சின்னம் குறித்த அறிவிப்பை தேர்தல் ஆணையம் வெளியிட்டு வருகிறது.
அந்தவகையில் திருச்சி தொகுதியில் போட்டியிட தீப்பெட்டி சின்னத்தை துரை வைகோவுக்கு ஒதுக்கி திருச்சி மாவட்ட தலைமை தேர்தல் ஆணையர் பிரதீப் குமார் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
தொடர்ந்து, மதிமுகவுக்கு ஒதுக்கப்பட்டுள்ள தீப்பெட்டி சின்னத்தை திருச்சியில் அமைச்சர் ரகுபதி அறிமுகம் செய்து வைத்து பரப்புரை மேற்கொண்டார்.
பிரியா
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
தமிழ்நாடு ரயில்வே ஊழியர்களுக்கு தபால் ஓட்டு: வைகோ வலியுறுத்தல்!
சித்தார்த் அடுத்த படத்தின் இயக்குநர் இவரா..?