ஒரு தொகுதியில் போட்டியிடும் மதிமுகவிற்காக பம்பரம் சின்னத்தை பொதுச்சின்னமாக அறிவித்தால் அது தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்தி விடும் என்று இந்திய தேர்தல் ஆணையம் இன்று (மார்ச் 27) விளக்கமளித்துள்ளது.
நாடாளுமன்ற தேர்தலில் திருச்சி தொகுதியில் மதிமுக சார்பில் துரை வைகோ போட்டியிடுகிறார். இந்தநிலையில், மதிமுகவிற்கு பம்பரம் சின்னம் ஒதுக்கக்கோரி அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ, சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.
இந்த வழக்கு நேற்று (மார்ச் 26) விசாரணைக்கு வந்தபோது, இன்று காலை 9 மணிக்குள் மதிமுகவிற்கு சின்னம் ஒதுக்குவது தொடர்பாக முடிவெடுக்க தேர்தல் ஆணையத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்தநிலையில், மதிமுகவிற்கு பம்பரம் சின்னம் ஒதுக்க முடியாது என்று இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக மதிமுக வழக்கறிஞர்களுக்கு தேர்தல் ஆணையம் அனுப்பியுள்ள மின்னஞ்சலில், “மதிமுக ஒரே ஒரு தொகுதியில் மட்டும் போட்டியிடுவதால், பம்பரம் சின்னத்தை பொதுச்சின்னமாக மாற்ற முடியாது. பொதுச்சின்னமாக அறிவித்தால் அது தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்தி விடும். எனவே மதிமுகவிற்கு பம்பரம் சின்னம் ஒதுக்க முடியாது” என்ற விளக்கத்தை அளித்துள்ளது. இந்த வழக்கு இன்று மதியம் 2.15 மணிக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வர உள்ளது.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பம்பரம் சின்னம் ஒதுக்க மறுப்பு: துரை வைகோ ரியாக்ஷன்!
மதிமுகவுக்கு பம்பரம் சின்னம் ஒதுக்க தேர்தல் ஆணையம் மறுப்பு!