அக்னிவீர் திட்டத்தை அரசியலாக்க வேண்டாம் என தேர்தல் ஆணையம் அறிவுறுத்தி இருந்த நிலையில், இதுத்தொடர்பாக முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கேள்வி எழுப்பி உள்ளார்.
நாடு முழுவதும் 5 கட்ட நாடாளுமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு நிறைவடைந்துள்ளது. மீதமுள்ள 2 கட்டங்களுக்கான தேர்தல் பிரச்சாரங்கள் பரபரப்பாக நடைபெற்று வருகிறது.
தேர்தல் பிரச்சாரங்களின்போது அரசியல் தலைவர்கள் சிலர் சர்ச்சையை ஏற்படுத்தும் விதமாக பேசி வருவதாக புகார் எழுந்தது. சாதி, மதம் தொடர்பாக வெறுப்பை தூண்டும் கருத்துகளை பாஜக, காங்கிரஸ் கட்சி தலைவர்கள் பேசுவதாகவும் புகார் எழுந்தது.
இதனைத் தொடர்ந்து, பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் நேற்று (மே 22) அறிவுரை ஒன்றை வழங்கியது.
தேர்தல் ஆணையம் அறிவுரை:
“சாதி, மதம், சமூகம் மற்றும் மொழி அடிப்படையில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடுவதை தவிர்க்கவேண்டும்.
எந்தவொரு கட்சியும் அல்லது வேட்பாளரும் பரஸ்பர வெறுப்பை உண்டாக்கும் அல்லது பதற்றத்தை ஏற்படுத்தக்கூடிய வகையில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடக்கூடாது. பிரச்சாரத்தின்போது எச்சரிக்கையுடன் இருக்கவேண்டும்.
ராணுவத்தில் அரசியலை கலக்கும் வகையில் அக்னிவீர் திட்டம் குறித்தும், இந்திய அரசியலமைப்பு சாசனம் ஒழிக்கப்படலாம் அல்லது விற்கப்படலாம் என தரம் தாழ்ந்து பேசுவதைவும் நிறுத்த வேண்டும்.
இதுபோன்ற தவறான எண்ணங்களை உருவாக்கக்கூடிய வகையில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடக்கூடாது. அரசியல் சாசனத்தை விமர்சிக்கக்கூடாது. ராணுவ வீரர்கள் தொடர்பான பிரச்சனைகளை அரசியலாக்க வேண்டாம்.
தேர்தல் பிரச்சாரத்தில் அரசியல் கட்சிகள் நிதானத்தை கடைபிடிக்க வேண்டும். நாட்டின் தேர்தல் பாரம்பரியத்தை பாதிக்கக்கூடிய வகையில் பிரச்சாரம் மேற்கொள்வதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது” எனத் தெரிவித்திருந்தது.
ப.சிதம்பரம் பதில்:
அக்னிவீர் திட்டத்தை அரசியலாக்க வேண்டாம் என தேர்தல் ஆணையம் கூறியிருப்பது தொடர்பாக, முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கேள்வி எழுப்பி உள்ளார்.
இதுத்தொடர்பாக தனது எக்ஸ் வலைதளப் பக்கத்தில் ப.சிதம்பரம் பதிவு ஒன்றை இன்று (மே 23) வெளியிட்டுள்ளார்.
அதில், “அக்னிவீர் திட்டத்தை அரசியலாக்கக்கூடாது என்று காங்கிரஸ் கட்சிக்கு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியிருப்பது மிகவும் தவறானது.
அரசியலாக்குவது என்றால் என்ன? விமர்சிப்பதை தேர்தல் ஆணையம் அரசியலாக்குவது என்று கூறுகிறதா?
அக்னிவீர் என்பது ஒரு திட்டம், மத்திய அரசின் கொள்கையால் உருவாக்கப்பட்ட திட்டம், இந்த திட்டம் மற்றும் கொள்கை குறித்து விமர்சிக்கவும், எங்களுக்கு வாக்களித்து ஆட்சி அதிகாரத்தை வழங்கினால், அக்னிவீர் திட்டத்தை ஒழிப்போம் என்று பிரச்சாரம் செய்வதும் ஒரு எதிர்க்கட்சியாக எங்களது உரிமை.
ஒன்றாக இணைந்து நாட்டிற்காக போராட வேண்டிய வீரர்களை 2 பிரிவாக பிரிக்கிறது அக்னிவீர் திட்டம். இது மிகவும் தவறானது.
அக்னிவீர் திட்டத்தில் சேர்க்கப்படும் இளைஞர்கள், 4 ஆண்டுகள் பணியாற்றிவிட்டு, வெளியே தூக்கி எறியப்படுவார்கள். அவர்களுக்கு எந்த வேலையும், ஓய்வூதியமும் வழங்கப்படாது. இது மிகவும் மோசமான திட்டமாகும்.
நமது ராணுவமே, இந்த அக்னிவீர் திட்டத்தை எதிர்க்கிறது. ஆனாலும், மத்திய அரசு இந்திய ராணுவத்தின் மீது இந்த திட்டத்தை திணிக்கிறது. இதுவும் மிக தவறான செயல். எனவே, அக்னிவீர் திட்டம் நிச்சயம் அகற்றப்பட வேண்டியது அவசியம்.
இதுபோன்ற தவறான வழிகாட்டுதல் காங்கிரஸ் கட்சிக்கு அளித்திருப்பது தேர்தல் ஆணையத்தின் மிக மோசமான நடவடிக்கை ஆகும். ஒரு குடிமகனாக, தேர்தல் ஆணையம் மிக மோசமாக நடந்து கொண்டிருப்பதை சுட்டிக்காட்டுவது எனது உரிமை” என ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
இந்து
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
விஷாலின் ரத்னம், ராமராஜனின் ரீ என்ட்ரி… இந்த வாரம் தியேட்டர் மற்றும் ஓடிடி ரிலீஸ் லிஸ்ட்..!
மோடி கடவுள் பணியையே செய்யட்டும்! – ஆர்.எஸ்.பாரதி பேட்டி!