தேர்தல் பத்திர நிதி : திமுக யார் யாரிடம் எவ்வளவு பெற்றது? – பட்டியல் இதோ!

Published On:

| By Kavi

உச்ச நீதிமன்ற உத்தரவுபடி, தேர்தல் பத்திரங்கள் தொடர்பான புதிய தரவுகளை இன்று (மார்ச் 17) தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.

இதில், திமுக, அதிமுக என அரசியல் கட்சிகள் எவ்வளவு நிதி பெற்றுள்ளன, யார் யாரிடம் எந்தெந்த தேதிகளில் பெற்றுள்ளன என்ற விவரங்கள் இடம்பெற்றுள்ளன.

முன்னதாக 2023ஆம் ஆண்டு தேர்தல் நிதி பத்திர வழக்கு விசாரணை நடந்து கொண்டிருந்த போது, தேர்தல் பத்திரம் மூலம் பெறப்பட்ட நன்கொடை விவரங்களை சேகரிக்கவில்லை என்று தேர்தல் ஆணையம் உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்தது.

இதற்கு அதிருப்தி தெரிவித்த உச்ச நீதிமன்றம் தேர்தல் ஆணையத்தின் செயல் ஏற்கத்தகக்து அல்ல என்று தெரிவித்திருந்தது.

இதையடுத்து 15-11-2023ஆம் தேதிக்குள் இந்தியாவில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தல் பத்திரங்கள் மூலம் பெறப்பட்ட நன்கொடை விவரங்களை அனுப்பி வைக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது.

அதன்படி திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு, 2023 நவம்பர் 14ஆம் தேதி அனைத்து விவரங்களையும் தொகுத்து இந்திய தேர்தல் ஆணையத்துக்கு தரவுகளை அனுப்பியுள்ளார்.

இந்த தரவுகளை  இன்று(மார்ச் 17) தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.

தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள, இந்த புதிய தேர்தல் நிதி பத்திரங்கள் விவரப்படி, கோவையைச் சேர்ந்த லாட்டரி அதிபர் மார்ட்டினுக்கு சொந்தமான ஃபியூச்சர் கேமிங் நிறுவனம் 509 கோடி ரூபாயை ஆளும் கட்சியான திமுகவுக்கு கொடுத்துள்ளது.

இந்த நிறுவனம், தேர்தல் பத்திர நிதி கொடுத்ததில் ரூ.1,368 கோடியுடன் முதலிடத்தில் இருக்கிறது.

தேர்தல் பத்திரம் மூலம் திமுக பெற்ற நன்கொடையான 656.5 கோடி ரூபாயில் 509 கோடி ரூபாய் ஃபியூச்சர் கேமிங் நிறுவனத்திடமிருந்து பெற்றிருப்பது தெரியவருகிறது.

திமுக நன்கொடை பெற்ற பட்டியல்…

 

15.4.2019 முதல் 31.3.2020 வரை,
இந்தியா சிமெண்ட்ஸ் – ரூ.10 கோடி
லட்சுமி மெஷின் ஒர்க்ஸ் (எம்.எல்.டபுல்யூ)-ரூ.1.50 கோடி
ராம்கோ சிமெண்ட்ஸ் – ரூ.5 கோடி
மேகா இன்ப்ராஸ்ட்ரக்சர்ஸ் – ரூ.20 கோடி
அப்பல்லோ நிர்வாகம் ரூ.1 கோடி,
திரிவேணி குழுமம் – ரூ.5 கோடி,
பிர்லா நிறுவனம் – ரூ.1 கோடி
ஐஆர்பி இன்ப்ராஸ்ட்ரக்சர்ஸ்- ரூ.2 கோடி என 45.50 கோடி ரூபாய் கார்பரேட் நிறுவனங்களிடம் இருந்து நிதி பெற்றுள்ளது திமுக.

23.10.2020 முதல் 29.10.2020 வரை,
ஃபியூச்சர் கேமிங் நிறுவனம் – ரூ.60 கோடி,
மேகா இன்ப்ராஸ்ட்ரக்சர்ஸ் – ரூ.20 கோடி என ரூ.100 கோடி பெற்றுள்ளது.

5.4.2021 முதல் 11.1.2022 வரை,
ஃபியூச்சர் கேமிங் நிறுவனம் – ரூ.249 கோடி,
மேகா இன்ப்ராஸ்ட்ரக்சர்ஸ் – ரூ.40 கோடி
சன் நெட்வொர்க் -ரூ.10 கோடி
இந்தியா சிமெண்ட்ஸ்- ரூ. 4 கோடி
திரிவேணி குழுமம் – ரூ.3 கோடி என ரூ.306 கோடி ரூபாய் பெற்றுள்ளது.

11.4.2022 முதல் 12.10.2022 வரை,
ஃபியூச்சர் கேமிங் நிறுவனம் – ரூ.160 கோடி,
மேகா இன்ப்ராஸ்ட்ரக்சர்ஸ் – ரூ.25 கோடி என ரூ.185 கோடி நிதி பெற்றுள்ளது.

10.4.2023 அன்று ஃபியூச்சர் கேமிங் நிறுவனத்திமிடமிருந்து – ரூ.40 கோடி திமுக பெற்றுள்ளது.

ஏற்கனவே 2019 ஏப்ரல் முதல் 2024 பிப்ரவரி 15 வரையில் அரசியல் கட்சிகள் எவ்வளவு நிதி பெற்றுள்ளன என்ற விவரங்களை தேர்தல் ஆணையம் வெளியிட்டது.

அதில் எந்தெந்த நிறுவனம் எந்தெந்த கட்சிக்கு எவ்வளவு கொடுத்தார்கள் என்ற விவரம் இல்லை.

இந்நிலையில் புதிய பட்டியலில் திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் யார் யாரிடம் இருந்து நிதி பெற்றுள்ளோம் என்பதை தெரிவித்துள்ளன. இந்த பட்டியலிலும் பாஜக யாரிடமிருந்து நிதி பெற்றோம் என்ற விவரத்தை தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

பிரியா

எலெக்‌ஷன் ஃபிளாஷ்: ஸ்டாலினுக்கு சாதகமான அதிகாரிகள்… அதிமுக தயாரிக்கும் பட்டியல்!

தேர்தல் பத்திர நிதி : திமுக யார் யாரிடம் எவ்வளவு பெற்றது? – பட்டியல் இதோ!

 

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel