ஏக்நாத் ஷிண்டே தரப்புக்கு சிவசேனா கட்சியின் பெயர் மற்றும் வில்-அம்பு சின்னத்தை வழங்கி இந்திய தேர்தல் ஆணையம் இன்று (பிப்ரவரி 17) உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2019ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் வெற்றிபெற்று சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கட்சிகள் இணைந்த மகாவிகாஸ் கூட்டணி மஹாராஷ்டிராவில் ஆட்சி அமைத்தது.
இந்நிலையில் சிவசேனா கட்சியின் மூத்த அமைச்சர் ஏக்நாத் ஷிண்டே தனது ஆதரவு எம்.எல்.ஏ.க்களுடன் பிரிந்து, பின்னர் பா.ஜனதாவுடன் இணைந்து கடந்த ஆண்டு மாநிலத்தில் ஆட்சியை கைப்பற்றினார்.
இதனையடுத்து ஏக்நாத் ஷிண்டே முதல்-மந்திரியாகவும், பா.ஜனதாவை சேர்ந்த தேவேந்திர பட்னாவிஸ் துணை முதல்-மந்திரியாகவும் பதவி ஏற்றனர்.
கட்சி இருதரப்பாக பிரிந்ததும் சிவசேனாவின் பெயரையும் கட்சி சின்னத்தையும் தேர்தல் ஆணையம் முடக்கியது.
அப்போது கட்சியின் பெரும்பான்மை பலத்தை சுட்டிக்காட்டி, சிவசேனாவின் வில், அம்பு சின்னத்தை தனது அணிக்கு ஒதுக்கும்படி தேர்தல் ஆணையத்திடம் ஏக்நாத் ஷிண்டே கடிதம் அளித்தார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்த உத்தவ் தாக்கரே, தாங்கள்தான் உண்மையான சிவசேனா என்றும், ஏக்நாத் ஷிண்டே அணியினர் தாங்களாகவே சிவசேனா கட்சியில் இருந்து விலகிச் சென்று விட்டனர் என்றும் தேர்தல் ஆணையத்தில் விளக்கம் அளித்தார்.
இந்நிலையில் இந்த பிரச்சனைக்கு 3 பேர் கொண்ட இந்திய தேர்தல் ஆணையம் இன்று உத்தரவு பிறப்பித்துள்ளது.
அதன்படி ”2019ம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில் சிவசேனா கட்சி பெற்ற மொத்த வாக்குகளில் ஏக்நாத் ஷிண்டேவை ஆதரிக்கும் எம்.எல்.ஏக்கள் சுமார் 76 சதவீத வாக்குகளைப் பெற்றுள்ளனர்.
அதேநேரத்தில் உத்தவ் தாக்கரே ஆதரவு எம்.எல்.ஏக்கள் 23.5 சதவீத வாக்குகள் மட்டுமே பெற்றனர்.
எனவே ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா தான் சட்டப்பூர்வமான சிவசேனா என்று தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.
மேலும் சிவசேனா கட்சியின் பெயர் மற்றும் வில், அம்பு சின்னத்தை ஏக்நாத் ஷிண்டே தரப்புக்கு வழங்கி உத்தரவு பிறப்பித்துள்ளது.
இதனால் அதிருப்தி அடைந்ந்துள்ள உத்தவ் தாக்கரே தரப்பு, தேர்தல் ஆணையத்தின் இந்த முடிவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் முறையிட முடிவு செய்துள்ளது.
கட்சியின் பெயர் மற்றும் சின்னம் வழங்கப்பட்டது குறித்து முதல்வர் ஏக்நாத் ஷிண்டே கூறுகையில், “பாலாசாகேப்பின் எண்ணங்களை மனதில் கொண்டு கடந்த ஆண்டு மகாராஷ்டிராவில் (பாஜகவுடன் சேர்ந்து) நாங்கள் அரசாங்கத்தை அமைத்தோம்.
தேர்தல் ஆணையத்திற்கு நன்றி. ஜனநாயகத்தில் பெரும்பான்மையினரின் எண்ணிக்கையே வெற்றி பெறும். இது பாலாசாகேப் தாக்கரேவின் சித்தாந்தத்தின் வெற்றி. எங்களுடையது தான் உண்மையான சிவசேனா” என்று தெரிவித்துள்ளார்.
கிறிஸ்டோபர் ஜெமா
2வது டெஸ்ட் : 242 ரன்கள் முன்னிலை வகிக்கும் ஆஸ்திரேலியா!
சாதிரீதியாக பிரச்சாரம் செய்கிறாரா எடப்பாடி? அதிமுக முன்னாள் அமைச்சர் விளக்கம்!