சென்னையில் தடையை மீறி பேரணி செல்ல முயன்றதாக, புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி உள்ளிட்ட 686 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
அருந்ததியர்களுக்கு 3% உள் இடஒதுக்கீடு வழங்கியது செல்லும் என்ற உச்சநீதிமன்ற தீர்ப்பைக் கண்டித்து சென்னை எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியம் முதல் ஆளுநர் மாளிகை நோக்கி புதிய தமிழகம் கட்சியினர் நேற்று (நவம்பர் 7) பேரணி செல்ல முயன்றனர்.
இந்தப் பேரணிக்கு காவல்துறை அனுமதி மறுத்ததால், காவல்துறையினருடன் கிருஷ்ணசாமி வாக்குவாதத்தில் ஈடுபட்டார். தொடர்ந்து கொட்டும் மழையில் கிருஷ்ணசாமி சாலையில் படுத்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
இதனையடுத்து கிருஷ்ணசாமி உள்ளிட்ட அக்கட்சி நிர்வாகிகளை போலீசார் கைது செய்தனர். பின்னர் அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.
இந்தநிலையில், அரசு ஊழியர்களை பணி செய்ய விடாமல் தடுத்தல், சட்டவிரோதமாக கூடுதல் உள்ளிட்ட ஐந்து பிரிவுகளின் கீழ் கிருஷ்ணசாமி உள்ளிட்ட 686 பேர் மீது எழும்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இந்தநிலையில், இன்று மதியம் 12.30 மணியளவில் கிண்டி ஆளுநர் மாளிகையில் ஆளுநர் ஆர்.என்.ரவியை கிருஷ்ணசாமி சந்திக்கிறார். இந்த சந்திப்பு அரசியல் வட்டாரத்தில் முக்கிய பேசுபொருளாகியுள்ளது.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…