தமிழ் மொழியில் கல்வி… சிபிஎஸ்இ புதிய அறிவிப்பு !

Published On:

| By Jegadeesh

education in tamil language cbse new notification

சிபிஎஸ்இ பள்ளிகளில் 12 ஆம் வகுப்பு வரை தமிழ் உள்ளிட்ட 22 மொழிகளில் பயிற்றுவிக்க சிபிஎஸ்இ அனுமதி அளித்துள்ளது.

இந்தியா முழுவதும் உள்ள சிபிஎஸ்இ பள்ளிகளில் ஆங்கிலம் மற்றும் இந்தி மொழிகள் பயிற்று மொழியாக இருக்கிறது.

தமிழ்நாட்டில் தமிழ் மொழியை கட்டாயப் பாடமாக்க வேண்டும் என்ற கொள்கையின்படி, கடந்த கல்வியாண்டில் தமிழ்நாட்டில் உள்ள சிபிஎஸ்இ பள்ளிகளில் 8 ஆம் வகுப்பு வரை தமிழ் கட்டாயப் பாடமாக நடைமுறைக்கு வந்தது.

இந்நிலையில், அனைத்து சிபிஎஸ்இ பள்ளிகளிலும் ஆங்கிலம், இந்திக்கு அடுத்து தமிழ் உள்ளிட்ட 22 மொழிகளில் பயிற்றுவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக அனைத்து பள்ளிகளுக்கும் சிபிஎஸ்இ இயக்குநர் ஜோசப் இமானுவேல் நேற்று (ஜூலை 21) சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார்.

அதில், “புதிய தேசியக் கல்விக் கொள்கையின் பரிந்துரைகளை உயர்கல்வித் துறை செயல்படுத்தத் தொடங்கியுள்ள நிலையில் பன்மொழிக் கற்பித்தலுக்கு பள்ளிகள் முக்கியத்துவம் அளிக்க வேண்டும்.

அதன்படி, மழலையர் பள்ளி முதல் 12 ஆம் வகுப்பு வரை இந்திய மொழிகளை பயிற்று மொழியாக பயன்படுத்த வேண்டும்.
இளம் மாணவர்களுக்கான பன்மொழி அறிவின் முக்கியத்துவத்தையும் அறிவாற்றல் நன்மைகளையும் புதிய கல்விக்கொள்கை வலியுறுத்துகிறது.

பன்மொழிக் கல்வியை நடைமுறைப்படுத்துவதும், தாய்மொழியைப் பயிற்றுவிப்பதும், பன்மொழி அமைப்புகளில் கற்பிக்கும் திறன் வாய்ந்த ஆசிரியர்களை சேர்த்தல், உயர்தர பன்மொழிப் பாடப்புத்தகங்களை உருவாக்குதல் உள்ளிட்டவை அவசியம்.

தமிழ் உட்பட 22 மொழிகளில் பாடப்புத்தகங்களை தயாரிக்கும் பணிகள் NCERT மூலம் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.

அடுத்த கல்வியாண்டு முதல் மாணவர்களுக்கு இந்திய மொழிகளில் பாடப் புத்தகங்கள் விநியோகிக்கப்படும்”என்று கூறப்பட்டுள்ளது.

சிபிஎஸ்இ -யின் இந்த முடிவை தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை பாரட்டியுள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று (ஜூலை 22) வெளியிட்டுள்ள பதிவில், “ வெளிநாட்டு மொழிகளுக்குப் பதிலாக நமது தாய்மொழிக் கல்வியை ஊக்குவித்து, குழந்தைகளுக்கான கல்வியை முழுமையாக்கியதற்காக, மத்திய கல்வி அமைச்சகம் மற்றும் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் அவர்கள் எடுத்துள்ள நடவடிக்கைகளுக்கு, தமிழாக பாஜக சார்பாக பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

தாய்மொழிக் கல்வி, உண்மையான படைப்பாற்றலை உருவாக்கும் என்பதை நாங்கள் உறுதியாக நம்புகிறோம். இதேபோன்ற உத்தரவை, தமிழகப் பள்ளிகளுக்கும் வழங்குமாறு இந்த வாய்ப்பினைப் பயன்படுத்தி தமிழக அரசை வலியுறுத்திக் கொள்கிறோம்” என்று தெரிவித்துள்ளார்.

மு.வா.ஜெகதீஸ் குமார்

மணிப்பூர் விவகாரம் : அதிமுக இரட்டை வேடமா?

70 ஆயிரம் பேருக்கு பணி ஆணை வழங்கிய மோடி

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel