அதிமுகவில் எடப்பாடி பழனிசாமிக்கும், ஓ.பன்னீர்செல்வத்துக்கும் இடையிலான அதிகார மோதல் தொடர்ந்து வரும் நிலையில். எடப்பாடி பழனிசாமியின் இடைக்காலப் பொதுச் செயலாளர் பதவி நாளை (நவம்பர்11 )யோடு காலாவதியாவதாக பன்னீர் தரப்பினர் கூறுகிறார்கள்.
பல்வேறு பிரச்சினைகளையும், சர்ச்சைகளையும் கடந்து, கடந்த 2022 ஜூலை 11 ஆம் தேதி சென்னை வானகரத்தில் அதிமுகவின் பொதுக்குழு எடப்பாடி பொதுச் செயலாளர் தலைமையில் நடந்தது.
இதில் இடைக்காலப் பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமியை தேர்ந்தெடுத்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அந்தத் தீர்மானத்தில்,
“கழகப் பொதுச் செயலாளர் என்ற ஒற்றைத் தலைமையின் கீழ் செயல்பட வேண்டும் என்ற கழகப் பொதுக்குழு உறுப்பினர்களுடைய பெரும்பான்மை முடிவின்படி, விதி எண். 20அ-வின்படி கழகப் பொதுச் செயலாளர் பொறுப்பு மீண்டும் கொண்டுவரப்பட்டு உள்ளதால், புதிய பொதுச் செயலாளர் தேர்ந்தெடுக்கப்படும் வரை, கழக இடைக்காலப் பொதுச் செயலாளர் ஒருவரை திருத்தப்பட்ட விதி எண். 20அ பிரிவு-7ன்படி பொதுக்குழுவால் தேர்வு செய்யப்பட வேண்டி உள்ளது.
கழகப் பொதுக்குழு உறுப்பினர்களால், கழக தலைமை நிலையச் செயலாளரும், மாண்புமிகு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், தமிழ் நாடு முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமியை, கழக சட்ட திட்ட விதி 20அ பிரிவு 7ன்படி, இப்பொதுக்குழு கழக இடைக்காலப் பொதுச் செயலாளராகத் தேர்வு செய்து, நியமனம் செய்யப்படுகிறார் என்பதை ஏகமனதாக முடிவு செய்யப்பட்டு, தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது” என்று அந்த தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்தத் தீர்மானத்தை முன்னாள் அமைச்சர் உதயகுமார் வாசித்தார். கே.பி.முனுசாமி முன்மொழிவதாகக் குறிப்பிட்டு தீர்மானம் கரவொலிகள் மூலம் நிறைவேற்றப்பட்டது.
மேலும் அதே பொதுக்குழுவில், பொதுச் செயலாளர் பதவிக்கான தேர்தல் நடத்துவது பற்றியும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அந்தத் தீர்மானத்தில்,
“ கழகப் பொதுச் செயலாளர் பொறுப்பிற்கான தேர்தல் விரைந்து நடத்தி முடிக்கப்பட வேண்டியது கட்டாயம் என்பதைக் கருத்தில்கொண்டு, கழகப் பொதுச் செயலாளர் பொறுப்பிற்கான தேர்தலில், இன்றைய தேதிவரை, அதாவது 11.07.2022 வரை, கழக உறுப்பினர்களாகப் பதிவேட்டில் உள்ளவர்கள், வாக்களிக்க உரிமை பெற்றவர்கள் ஆவார்கள். கழக உறுப்பினர்களுக்கு, அவர்களின் உறுப்பினர் உரிமைச் சீட்டு புதுப்பிக்கப்பட்டு, புதிய கழக உறுப்பினர் உரிமைச் சீட்டு வழங்கப்படும்.
மேற்படி, கழகப் பொதுச் செயலாளருக்கான தேர்தல் இன்றைய தேதியில் இருந்து நான்கு மாதங்களுக்குள் நடத்தப்பட வேண்டும் என்று தீர்மானிக்கப்படுகிறது.மேலும், கழகப் பொதுச் செயலாளர் பொறுப்பிற்கான தேர்தலை நடத்துவதற்காக, கழக அமைப்புச் செயலாளரும், திண்டுக்கல் கிழக்கு மாவட்டக் கழகச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான நத்தம் இரா. விசுவநாதன், எம்.எல்.ஏ, அவர்களும், கழக தேர்தல் பிரிவுச் செயலாளரும், திருப்பூர் மாநகர் மாவட்டக் கழகச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான முனைவர் பொள்ளாச்சி வி. ஜெயராமன், எம்.எல்.ஏ, அவர்களும், தேர்தல் நடத்தும் அதிகாரிகளாக இப்பொதுக்குழுவால் நியமிக்கப்படுகிறார்கள் என்றும் தீர்மானிக்கப்படுகிறது” என்ற இந்தத் தீர்மானத்தையும் உதயகுமார் வாசித்தார். இத்தீர்மானத்தை சி.பொன்னையன் முன் மொழிந்தார்.
ஜூலை 11ஆம் தேதி அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் குறிப்பிட்டபடி பொதுச் செயலாளார் தேர்தல் நவம்பர் 11 ஆம் தேதியோடு அதாவது நாளைக்குள் நடத்தப்பட்டிருக்க வேண்டும். ஆனால் இன்னும் பொதுச் செயலாளர் தேர்தலுக்கான எந்தவித ஏற்பாடுகளும் தொடங்கக் கூட இல்லை.
ஜூலை 11 ஆம் தேதி நடந்த பொதுக்குழுவை எதிர்த்து பன்னீர் செல்வம் தரப்பினர் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்ற தனி நீதிபதி ஜெயச்சந்திரன் இந்த பொதுக்குழு செல்லாது என்று தீர்ப்பளித்தார். இதை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி தொடர்ந்த மேல் முறையீட்டு வழக்கில் தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்த அமர்வு, பொதுக்குழு செல்லும் என்று தீர்ப்பளித்தது.
இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்துக்கு சென்றார் ஓ.பன்னீர் செல்வம். இந்த வழக்கு செப்டம்பர் 30 ஆம் தேதி நீதிபதிகள் எம்.ஆர். ஷா, முராரி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது பன்னீர் செல்வம், தரப்பில், “அதிமுக பொதுக்குழு கட்சியின் அடிப்படை விதிகளுக்கு முரணானது. அதன் அடிப்படையில் பொதுச் செயலாளர் தேர்தல் நடத்தவும் தடை விதிக்க வேண்டும்” என்று கோரிக்கை வைக்கப்பட்டது.
அப்போது எடப்பாடி தரப்பு வாதத்தில், “பொதுக்குழு வழக்கு நிலுவையில் இருக்கும் நிலையில் பொதுச் செயலாளர் தேர்தல் நடத்த நாங்கள் முடிவு செய்யவில்லை” என்று பதிலளிக்கப்பட்டது.
இந்த பின்னணியில் ஜூலை 11 ஆம் தேதி நடந்த பொதுக் குழுவில், “கழகப் பொதுச் செயலாளருக்கான தேர்தல் இன்றைய தேதியில் இருந்து நான்கு மாதங்களுக்குள் நடத்தப்பட வேண்டும் என்று தீர்மானிக்கப்படுகிறது” என்றுதான் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. அதுவரைக்கும்தான் இடைக்காலப் பொதுச் செயலாளர் பதவிக்கு மவுசு. எனவே எடப்பாடி வகித்து வரும் இடைக்காலப் பொதுச் செயலாளர் பதவி நாளையோடு காலாவதியாகிறதா?” என்று பன்னீர் தரப்பினர் கேள்வி எழுப்புகிறார்கள்.
ஜூலை 11 பொதுக்குழுவில் எடப்பாடி பழனிசாமி தரப்பினர் தாமாகவே, நான்கு மாதம் என்று காலக்கெடு நிர்ணயித்துக் கொண்டதே இப்போது பன்னீர் தரப்பினர் இப்படி கேள்விகள் எழுப்ப காரணமாகியுள்ளது.
எடப்பாடி தரப்பினரோ, “அதே ஜூலை 11 பொதுக்குழு தீர்மானத்தில் புதிய பொதுச் செயலாளர் தேர்ந்து எடுக்கப்படும் வரை, கழக இடைக்காலப் பொதுச் செயலாளர் ஒருவரை திருத்தப்பட்ட விதி எண் 20அ பிரிவு –7–ன்படி பொதுக்குழுவால் தேர்வு செய்யப்பட வேண்டி உள்ளது என்று தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே பொதுச் செயலாளர் தேர்தல் நடந்து முடிந்து புதிய பொதுச் செயலாளர் தேர்ந்தெடுக்கப்படும் வரை எடப்பாடி பழனிசாமி இடைக்காலப் பொதுச் செயலாளர் பதவியில் நீடிப்பதில் எந்த சிக்கலும் இல்லை. மேலும் பொதுச் செயலாளர் தேர்தல் தற்போது நடத்தப்படாததற்கு பன்னீர் செல்வம் தொடுத்த வழக்கே காரணம். வேறு யாரும் காரணம் இல்லை” என்கிறார்கள்.
–வேந்தன்
“நாங்க வந்துட்டோம்… நீங்க எப்படி?”: அக்தர்
“தொலைபேசி உரையாடல்கள் ஒட்டுக்கேட்கப்பட்டது” – தமிழிசை குற்றச்சாட்டு