வைஃபை ஆன் செய்ததும், கோபி அதிமுக கூட்டத்தில் இன்று (பிப்ரவரி 12) முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் பேசிய வீடியோ காட்சிகள் இன்பாக்ஸில் வந்து விழுந்தன. edappadi vs sengottaiyan what happen
அவற்றை பார்த்து முடித்துவிட்டு வாட்ஸ் அப் தனது மெசேஜ் டைப் செய்ய தொடங்கியது.
“கடந்த இரண்டு, மூன்று நாட்களாக தமிழ்நாட்டு அரசியலின் பரபரப்பு வளையத்தில் இருக்கிறார் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன். Edappadi Vs Sengottaiyan What happen
நீண்ட கால அதிருப்தி! edappadi vs sengottaiyan what happen
பிப்ரவரி 9 ஆம் தேதி கோவையில் அவிநாசி அத்திக்கடவு திட்டத்தை நிறைவேற்றியதற்காக எடப்பாடி பழனிச்சாமிக்கு கோவையில் விவசாயிகள் அமைப்பு நடத்திய பாராட்டு கூட்டத்தில் செங்கோட்டையன் கலந்து கொள்ளவில்லை.

அதற்கு காரணம் அந்த விழா அழைப்பிதழில் எம்ஜிஆர், ஜெயலலிதா படம் இல்லை என்று பிப்ரவரி 10ஆம் தேதி செங்கோட்டையன் கொடுத்த பேட்டி அடுத்த பரபரப்பை பற்ற வைத்தது. அதற்கு அடுத்ததாக நேற்று பிப்ரவரி 11ஆம் தேதி செங்கோட்டையன் வீட்டுக்கு போலீஸ் காவல் அளிக்கப்பட்டது மேலும் அரசியல் ரீதியான பரபரப்பை கூட்டியது.
செங்கோட்டையன் அதிமுகவுக்குள் கடுமையான அதிருப்தியில் இருக்கிறார் என்பது நீண்ட நாட்களாகவே அக்கட்சி வட்டாரத்தில் பேசப்பட்டது தான்.
ஆனாலும் அந்த அதிருப்தியை வெளிப்படையாக மீடியாக்கள் முன்பு பிப்ரவரி 11ஆம் தேதி போட்டு உடைத்தார் செங்கோட்டையன். எடப்பாடியை முன்னிலைப்படுத்தும் நிகழ்ச்சியை வேலுமணி திட்டமிட்டு ஏற்பாடு செய்து அதில் தன்னை சிறுமைப்படுத்துகிறார்கள் என்ற உணர்வோடு தான் அந்த நிகழ்ச்சியை புறக்கணித்தார் செங்கோட்டையன்.
நீதிமன்றத் தீர்ப்பை எதிர்பார்த்த செங்கோட்டையன்

அதிமுகவின் உட்கட்சிப் பிரச்சனையில் தேர்தல் ஆணையம் தலையிடலாம் என பிப்ரவரி 12ஆம் தேதி சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்த நிலையில்… இந்த வழக்கின் போக்கு இப்படித்தான் இருக்கும் என்று கணித்து இதை சரியான சந்தர்ப்பமாக பயன்படுத்தி எடப்பாடிக்கு எதிரான தனது குமுறலை வெளிப்படுத்திவிட்டார் செங்கோட்டையன் என்றும் கூறுகிறார்கள். இதற்குப் பின்னால் பாஜகவும் இருக்கிறது, அதிமுகவை உள்ளடக்கிய பழைய தேசிய ஜனநாயக கூட்டணியை உருவாக்க செங்கோட்டையன் மூலம் பாஜக முயல்கிறது என்றும் தகவல்கள் வந்தன.
பழைய பாசத்தில் பேசிய திமுக நண்பர்கள்

அதே நேரம், கொங்கு பகுதியில் முக்கிய அரசியல்வாதியும் அதிமுகவின் மோஸ்ட் சீனியருமான செங்கோட்டையன் இப்படிப்பட்ட விரக்தி மனநிலையில் இருப்பதை அறிந்து… அதிமுகவில் அவரோடு நீண்டகாலம் பயணம் செய்த அமைச்சர்கள் முத்துசாமி, சேகர் பாபு ஆகியோரும் செங்கோட்டையனை தொடர்பு கொண்டிருக்கிறார்கள். ’உங்களுடைய சீனியாரிட்டிக்கு ஏற்ற மரியாதையை திமுக தர தயாராக இருக்கிறது’ என அவர்கள் பழைய பாசத்தில் செங்கோட்டையனுக்கு வலை வீசி இருக்கிறார்கள். ஆனால் அவர்களுக்கு செங்கோட்டையன் எந்தவிதமான உறுதியையும் உத்தரவாதத்தையும் அளிக்கவில்லை என்றும் ஈரோடு அரசியல் வட்டாரத்தில் கூறுகிறார்கள்.
இதற்கிடையே நேற்று கோவை பேரூர் முருகன் கோவிலுக்கு சென்று வந்த செங்கோட்டையன் தனக்கு நெருக்கமானவர்களிடம் சில முக்கியமான விஷயங்களை பகிர்ந்து கொண்டிருக்கிறார்.
‘எம்ஜிஆர், ஜெயலலிதா காலத்தில் இருந்து அரசியலில் இருக்கிறவன் நான். ஆனால் இன்றைக்கு மாநில அளவில் விடுங்கள், ஈரோடு மாவட்ட அதிமுகவில் கூட என்னைக் கேட்காமல் ஏதேதோ நடக்கிறது. என்னை சீனியர் சீனியர் என்று சொல்கிறார்கள். ஆனால் இந்த சீனியர் சொல்வது எதுவும் நடப்பதே இல்லை. Edappadi Vs Sengottaiyan What happen
விஜய்க்கு வெயிட் இல்லை – செங்கோட்டையன்

வருகிற 2026 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக வெற்றி பெற வேண்டும் என்றால் கட்சி ஒருங்கிணைக்கப்பட வேண்டும். சசிகலா அம்மையாரால் இனி தேர்தலில் போட்டியிட இயலாது. டிடிவி தினகரனும் அதிமுகவில் இணைந்து தேர்தலை சந்திக்க மாட்டார். மிச்சம் இருப்பது ஓபிஎஸ் தான். அவரை நம்மோடு இணைத்துக் கொள்வதில் என்ன தவறு? கட்சியை பலப்படுத்தி ஒற்றுமைப்படுத்தி… அதன்பிறகு பாஜக, பாமக, தேமுதிக உள்ளிட்ட பழைய தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அதிமுகவும் இடம்பெற்று 2026 தேர்தலை சந்தித்தால் தான் திமுகவுக்கு நாம் ஈடு கொடுக்க முடியும்.
அப்படி செய்யாமல் இதுவரை எந்த பலத்தையும் நிரூபிக்காத விஜயை நம்பிக் கொண்டு நாம் கூட்டணி பேசினால் அது வேறு மாதிரி போய்விடும். நான் எம்ஜிஆரின் எழுச்சியை பார்த்திருக்கிறேன், விஜயகாந்த் அரசியலுக்கு வந்த போது ஏற்பட்ட எழுச்சியை பார்த்திருக்கிறேன். ஆனால் அவர்களைப் போன்ற ஒரு எழுச்சியை இப்போது விஜய் வருகையில் காணமுடியவில்லை, ஊடகங்கள்தான் ஊதிப் பெரிதாக்குகிறார்கள்.
என்னுடைய 50 ஆண்டுகால அரசியல் அனுபவத்தை வைத்து சொல்கிறேன். விஜய்யை நம்பி நாம் கூட்டணிக்கு முயற்சிப்பதை விட, நம்மோடு இருந்த அனைவரையும் ஒற்றுமைப்படுத்தி மீண்டும் தேசிய ஜனநாயக கூட்டணியை வலிமைப்படுத்தினாலே 2026 இல் நாம் ஆட்சி அமைக்க முடியும். ஆனால் இதை எடப்பாடி ஏற்க மறுக்கிறார். ‘அவர் என்ன சொல்வது நான் என்ன கேட்பது’ என்ற மனநிலையில் அவர் இருக்கிறார். Edappadi Vs Sengottaiyan What happen
எடப்பாடி சர்டிபிகேட்டை விட ஜெயலலிதாவின் சர்டிபிகேட் முக்கியம்!

இப்படிப்பட்ட சூழலில் தான் அவிநாசி அத்திக்கடவு பாராட்டு விழா அழைப்பிதழ் மூலமாக என்னுடைய நீண்ட நாள் குமுறலை நான் வெளிக்கொண்டு வந்திருக்கிறேன். இவ்வளவு நடந்தும் எடப்பாடி என்னிடம் ஒரு வார்த்தை பேசவில்லை. அதே நேரம் என் வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டதும் எடப்பாடியோடு இருக்கும் சில அதிமுக நிர்வாகிகள் எனக்கு போன் போட்டு, ’அண்ணே… போலீஸ் பாதுகாப்பு நீங்க கேட்டீங்களா? அவங்களா கொடுத்தாங்களா?’ என்று விசாரிக்கிறார்கள். ஆக என் மீது சந்தேகக் கண்ணோட்டத்தோடு தான் இப்படி விசாரிக்கிறார்கள்’ என தனக்கு நெருக்கமானவர்களிடம் மனம் திறந்து பேசியிருக்கிறார் செங்கோட்டையன்.
இதன் நீட்சியாகத்தான் இன்று பிப்ரவரி 12ஆம் தேதி கோபியில் நடந்த எம்ஜிஆர் பிறந்த தின விழா பொதுக்கூட்டத்தில், எடப்பாடி பழனிச்சாமியின் பெயரை சொல்லாமலேயே உரையாற்றி முடித்திருக்கிறார் செங்கோட்டையன்.
நான் எத்தனையோ தலைவர்களைப் பார்த்தவன். எதற்கும் மயங்காதவன். அதிமுக ஒன்றாக இருக்க வேண்டும் என்று மட்டுமே எண்ணுகிறவன் . என்னை சோதிக்காதீர்கள் அதுதான் நான் விடுக்கும் வேண்டுகோள்’ என்று பேசியிருக்கிறார். மேலும், அந்த மேடையில் தன்னைப் பற்றி ஜெயலலிதா பேசிய ஆடியோவை மைக் முன் பிளே செய்து அதையே தனக்கான சான்றிதழாக சுட்டிக் காட்டினார்.
அதாவது எனக்கு எடப்பாடியின் சர்டிபிகேட் தேவையில்லை, ஜெயலலிதாவின் சர்டிபிகேட்தான் முக்கியம் என்பதைத்தான் இதன் மூலம் சுட்டிக் காட்டியிருக்கிறார் செங்கோட்டையன்” என்ற மெசேஜ்க்கு சென்ட் கொடுத்து ஆப்லைன் போனது வாட்ஸ் அப்.