ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் இரட்டை இலை சின்னத்தை தங்களுக்கு வழங்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி தொடுத்த வழக்கில்…பிப்ரவரி 3 ஆம் தேதி உச்ச நீதிமன்றத்தில் நடந்த விசாரணை அதிமுகவுக்குள் பரபரப்பை ஏற்படுத்தியிருகிறது.
மீண்டும் பொதுக்குழுவை கூட்டி வேட்பாளரை தேர்வு செய்ய வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கூறியதாக தகவல்கள் வெளிவந்தன. இந்நிலையில் அதிமுகவின் வழக்கறிஞர் பிரிவு இணைச் செயலாளரும், சட்ட ஆலோசனைக் குழு உறுப்பினருமான இன்பதுரை உச்ச நீதிமன்ற விசாரணைக்குப் பிறகு எடப்பாடி பழனிசாமியைத் தொடர்புகொண்டு பேசியுள்ளார்.
அப்போது பல விஷயங்களை அவர் எடப்பாடியிடம் தெளிவுபடுத்தியுள்ளார்.
“அதிமுகவின் ஜுலை 11 பொதுக்குழு தீர்மானங்களை ஏற்று அங்கீகரிக்க இந்திய தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக் கோரி நாம் தாக்கல் செய்த இடையீட்டு மனு மீது விசாரணை நடத்திய உச்சநீதிமன்ற நீதிபதிகள் தினேஷ் மகேஸ்வரி, ரிஷிகேஷ் ராய் அடங்கிய அமர்வு வழங்கிய உத்தரவில் நமக்கு சாதகமான அம்சங்கள்தான் உள்ளன.
இரட்டை இலை முடக்கம் இல்லை. வேட்பாளர் படிவத்தில் ஓபிஎஸ் கையெழுத்திட அனுமதி இல்லை. வேட்பாளர் படிவத்தில் கழக அவைத்தலைவர் தமிழ் மகன் உசேன் கையெழுத்திட வேண்டும். பொதுக்குழுவை கூட்ட நீதிமன்றம் சொன்னதாக தகவல்கள் வருகின்றன.
ஆனால், பொதுக்குழு கூட்ட தேர்தலுக்குள் நேரமில்லை என்பதால் அவைத்தலைவர் தமிழ் மகன் உசேன் அதிமுக வேட்பாளரின் பெயரை குறிப்பிட்டு ஒரு சுற்றறிக்கை மூலம் பொதுக்குழு உறுப்பினர்களின் ஆதரவு வாக்குகளை அதில் பெற்று பெருவாரியான பொதுக்குழு உறுப்பினர்களின் ஆதரவை பெற்ற விபரங்கள் அடங்கிய சுற்றறிக்கையை தேர்தல் ஆணையத்துக்கு தெரிவிக்கவேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.
ஓபிஎஸ் மற்றும் அவருடன் நீக்கப்பட்ட மூவர், பொதுக்குழு உறுப்பினர்கள் என்ற வகையில் வாக்களிக்க வசதியாக அந்த சுற்றறிக்கையை அந்த நால்வருக்கும் அனுப்பி அவர்கள் ஆதரவாகவோ எதிர்ப்பாகவோ அளிக்கும் வாக்கு விபரங்களையும் நாம் அந்த அறிக்கையுடன் சேர்க்க வேண்டும். அதை அப்படியே அவைத்தலைவர் மூலமாக தேர்தல் ஆணையத்துக்கு அனுப்ப வேண்டும்.
நம் பொதுக்குழுவில் தேர்ந்தெடுக்கப்பட்ட அவைத் தலைவர் தமிழ் மகன் உசேனை உச்ச நீதிமன்றம் அங்கீகரித்துள்ளது. இதுவே நமக்கு முதல் வெற்றி. மேலும் பெருவாரியான பொதுக்குழு உறுப்பினர்கள் நம் வசமே இருப்பதால் இது எளிது” என்று எடப்பாடியிடம் விளக்கியிருக்கிறார் இன்பதுரை.
இதையடுத்து சென்னையில் இருந்து அவசரமாக நேற்று மாலை ஈரோட்டுக்குச் சென்றார் எடப்பாடி பழனிசாமி. அங்கே வில்லரசம்பட்டியில் இரவு, அனைத்து மாவட்டச் செயலாளர்கள், முன்னாள் அமைச்சர்களுடன் தீவிர ஆலோசனை நடத்தினார்.
உச்ச நீதிமன்றம் சொன்னபடி அவைத் தலைவர் தமிழ் மகன் உசேன் பெயரில் தென்னரசுவை அதிமுக வேட்பாளராக கடிதம் தயாரித்து, அதை மாவட்டச் செயலாளர்கள் மூலம் அவரவர் மாவட்டத்தில் உள்ள பொதுக்குழு உறுப்பினர்களின் கையெழுத்தைப் பெற வேண்டும். இதே கடிதத்தை ஓ.பன்னீர் செல்வம், வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன் உள்ளிட்டோருக்கும் அனுப்பி வைப்போம்.
பெருவாரியான பொதுக்குழு உறுப்பினர்கள் நமக்கே இருப்பதால் நிச்சயம் இரட்டை இலை சின்னம் நமக்கே கிடைக்கும். இதை இன்னும் இரண்டு நாட்களில் செய்ய வேண்டும் என்று அந்த ஆலோசனைக் கூட்டத்தில் எடப்பாடி பேசியுள்ளதாக தகவல்கள் கிடைக்கின்றன.
அதேநேரம், ‘இவ்வாறு சுற்றறிக்கை தயாரித்து அதில் பொதுக்குழு உறுப்பினர்கள் கையெழுத்து பெற்றால் அதை போலியென்று பன்னீர் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் சொன்னால் என்ன செய்வது? ‘ என்றும் சிலர் கேள்வி எழுப்பியிருக்கிறார்கள்.
எடப்பாடியின் ஈரோடு அவசர ஆலோசனைக்கு இடையே பன்னீர் செல்வமோ தனது வேட்பாளர் செந்தில் முருகனுக்கு பணி செய்ய மேலும் சில பொறுப்பாளர்களை நியமித்துள்ளார். மேலும் பன்னீர் வேட்பாளரின் பனிமனையில் மோடி படமும், பாஜக கொடிகளும் வைக்கப்பட்டன.
இதனால் ஈரோடு இடைத் தேர்தலில் அதிமுக வேட்பாளர், இரட்டை இலை ஆகியவை பற்றிய குழப்பங்கள் நீடிக்கின்றன.
–வேந்தன்
கர்நாடகா பாஜகவில் நாங்கள் தலையிடலாமா? சி.டி. ரவிக்கு எடப்பாடி தரப்பு கேள்வி!
கோலாகலமாக நடைபெற்ற ஸ்ரீரங்கம் கோயில் தேரோட்டம்!