எடப்பாடி துரோகி- பன்னீர் நண்பர்-மதிக்கும் தேசியக் கட்சியுடன் கூட்டணி: டிடிவி தினகரன் பேட்டி!

Published On:

| By Kavi

பன்னீருடன் இணைய வாய்ப்பு இருக்கிறது. ஆனால் நிச்சயமாக எடப்பாடி பழனிசாமியுடன் இல்லை என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். 

அதிமுக இரண்டாக பிரிந்து சட்டப்போராட்டம் நடந்து வருகிறது. பொதுக்குழு வழக்கு இன்று (ஆகஸ்ட் 10) சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது. ஒன்றரை கோடி தொண்டர்கள் தங்கள் பக்கம் இருப்பதாக மாறி மாறி ஓபிஎஸ் ஈபிஎஸ் இருவரும் கூறி வருகின்றனர்.

ஆலோசனை, பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்வது என எடப்பாடி பழனிசாமி பிஸியாக இருக்கிறார்.  அதுபோன்று ஓ.பன்னீர் செல்வமும் தனது ஆதரவாளர்களுடனும், வழக்கறிஞர்களுடனும் சட்ட ஆலோசனை நடத்தி வருகிறார். 

இதுவொருபுறமிருக்க மறுபக்கம்  தொண்டர்களை சந்தித்து வருகிறார் சசிகலா. விரைவில் அதிமுகவை கைப்பற்றி எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆட்சியை மக்களுக்கு கொடுப்பேன் என்று கூறி வருகிறார். 

இந்நிலையில், அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரனை பன்னீர் ஆதரவு மாவட்ட செயலாளர் சையதுகான் கடந்த ஜூலை 31ஆம் தேதி தேனிக்கும் மதுரைக்கும் இடையே உசிலம்பட்டியில் சந்தித்தது அரசியல் வட்டாரத்தில் பல்வேறு கேள்விகளுக்கு வழிவகுத்தது. 

இந்தசூழலில், “ஓ.பன்னீர் செல்வத்துடன் கைக்கோர்க்க வாய்ப்புகள் உள்ளது, ஆனால் எடப்பாடி பழனிசாமியுடன் அதற்கான வாய்ப்புகள் இல்லை” என்று டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். 

டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழுக்கு டிடிவி தினகரன் பேட்டி அளித்துள்ளார். 

அ.தி.மு.க.வை கைப்பற்றுவதில் கடும் போட்டி நிலவி வருகிறது. குறிப்பாக  ஓபிஎஸ், ஈபிஎஸ், சசிகலா இடையே போட்டி நிலவி வரும் நிலையில், அந்த போட்டியில் நீங்களும் இருக்கிறீர்களா? 

நான் அதிமுகவுக்குள் நடக்கும் போரிலோ சண்டையிலோ இல்லை. 4 ஆண்டுகளுக்கு முன்பு அமமுகவை தொடங்கினோம். வரும் 15ஆம் தேதி அமமுக பொதுக்குழு நடைபெறுகிறது. ஆனால் மக்களுடைய உத்தரவின்படி அதிமுகவை மீட்டெடுப்போம்.

2021 தேர்தலில் அமமுகவையும் அதிமுகவையும் ஒன்றாகக் கொண்டுவர பாஜக முயற்சித்தது உண்மையா?

அதிமுகவின் 10 ஆண்டுகால ஆட்சிக்குப் பிறகு நடந்த சட்டமன்றத் தேர்தலில் திமுகவை எதிர்த்துப் போராட நாம் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்று டெல்லியைச் சேர்ந்த சில நலம் விரும்பிகள் விரும்பினர். மீண்டும் திமுக ஆட்சிக்கு வரக் கூடாது என்பதற்காக நான் இதை ஒப்புக்கொண்டேன்.

ஆனால்  முதல்வர் வேட்பாளரை (எடப்பாடி பழனிசாமி) மாற்றினால் நான் போட்டியிடுவேன் என்றேன். பழனிசாமி மீது எனக்கு எந்த தனிப்பட்ட கோபமும் இல்லை, அவர் மீது நிறைய ஊழல் குற்றச்சாட்டுகள் இருப்பதால் அவர் முதல்வர் வேட்பாளராக இருந்தால் நாங்கள் வெற்றி பெற மாட்டோம் என்பது என் எண்ணம்.

அதே சமயத்தில் என்னை வேட்பாளராக்க வேண்டும் என்று நான் சொல்லவில்லை. 100 இடங்கள் மட்டுமே கிடைக்கும் என்று கூறினேன். அமமுகவுடனான கூட்டணிக்கு பழனிசாமி உடன்படவில்லை.   

2017ல் எடப்பாடி பழனிசாமியை முதல்வர் இருக்கையில் ஏற்றினார் சசிகலா.  இப்போது நீங்கள் இருவரும் அவரை ஏன் கடுமையாக எதிர்க்கிறீர்கள்?

கட்சியினருக்கும், அமைச்சர்களுக்கும் அறிவுரை வழங்க நான்கைந்து மூத்த  அமைச்சர்களை ஜெயலலிதா பயன்படுத்துவார். அந்த சீனியர்கள் மூலமாகத்தான் மற்ற அமைச்சர்களுக்கும், நிர்வாகிகளுக்கும் ஜெயலலிதாவின் கட்டளைகள், அறிவுரைகள் அனுப்பப்படும்.

அந்த வரிசையில் சீனியாரிட்டியில் பன்னீர்செல்வத்துக்கு அடுத்த இடத்தில் இருந்தவர் பழனிசாமி. வைத்திலிங்கம், நத்தம் ஆர் விஸ்வநாதன் அல்லது ஜெயக்குமார் ஆகியோரை நாங்கள் தேர்ந்தெடுத்திருக்கலாம். அப்போது, சொத்துக்குவிப்பு வழக்கில்  தண்டனை விதித்து  உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கிய முதல் நாள் நாங்கள் விவாதித்து கொண்டிருந்தோம். ஏதாவது தவறு நடந்தால் அடுத்த நபர் பழனிசாமிதான், அவர்தான் மூத்த அமைச்சராகவும் இருக்கிறார் என்று ஆலோசித்தோம். ஆனால் தற்போது எங்களுக்கும் கட்சிக்காரர்களுக்கும் அவர் துரோகம் செய்துவிட்டார். 

பழனிசாமியின் கொடூர முகம்!

அதிமுகவின் நன்மைக்காக ஓபிஎஸும், ஈபிஎஸும் உங்களுடன் வருவார்கள் என்று எதிர்பார்க்கிறீர்களா?

பழனிசாமி நம்பகமான மனிதரல்ல. சசிகலா அவரை முதல்வர் ஆக்கினார். சிறையில் இருந்தபோது அவரது கணவர் நடராஜன் உடல்நிலை சரியில்லாத நிலையில் அவரை சந்திக்க 15 நாள் பரோல் வழங்க கர்நாடக அரசு தயாராக இருந்தது. ஆனால் பழனிசாமி அரசு சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் என்பதால் 5 நாளுக்கு மேல் அவகாசம் வழங்கக் கூடாது என்று மறுத்துவிட்டது.

அதோடு அரசியல்வாதிகள் மற்றும் ஊடகத்தினரை சந்திக்கக் கூடாது என்று நிபந்தனை விதிக்கப்பட்டது. அப்போதுதான் பழனிசாமி எவ்வளவு கொடூரமானவர் என்பதை உணர்ந்தேன். பதவிக்காக யாரையும் அரசியல் ரீதியாக அழிக்கக் கூடியவர் அவர். 2017 இல் சசிகலாவுக்கு எதிராக செயல்பட்டு பன்னீர்செல்வம் தவறு செய்தார். இப்போது அதை உணர்கிறார் .எதிர்காலத்தில் பன்னீர் செல்வத்துடன் செல்வதற்கான வாய்ப்புகள் இருக்கிறது. ஆனால் நிச்சயமாக பழனிசாமியுடன் இணைய வாய்ப்புகள் இல்லை. 

2001 இலேயே நான் முதல்வராகியிருக்க முடியும்!

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு பிப்ரவரி 2017ல் சசிகலா எடப்பாடி பழனிசாமியை தமிழக முதல்வர் ஆக்கியபோது,  ஒரு பெரிய வாய்ப்பை நீங்கள் தவறவிட்டதாக நினைக்கிறீர்களா?

இல்லை… என்னுடைய இயல்பு அப்படிப்பட்டதில்லை. செப்டம்பர் 21, 2001 அன்று எனது தலைவர் (ஜெயலலிதா) முதல்வராகத் தொடர முடியாத சூழல் ஏற்பட்டபோது… (டான்சி வழக்கில் அவர் தண்டிக்கப்பட்ட பிறகு), என்னால் எளிதாக முதல்வராகியிருக்க முடியும். ஆனால் எனது முன்னாள் சகாவான பன்னீர் செல்வத்தை நாங்கள் பரிந்துரைத்தோம். நான் ஒரு போராளி என்பதில் தெளிவாக இருக்கிறேன். நான் தனித்துப் போராடி மக்கள் ஆதரவுடன் ஆட்சிக்கு வர விரும்புகிறேன்.

பன்னீர் செல்வத்தை பதவி விலக தூண்டியது எது?

பழனிசாமியையும் சேர்த்து முன்னாள் அமைச்சர்கள், மூத்த நிர்வாகிகள் அனைவரும்  சசிகலா கட்சியின் தலைமையை ஏற்கவும், முதல்வராகவும் வர வேண்டும் என்று விரும்பினார்கள். ஜெயலலிதா மறைவுக்கு பிறகு 2016 டிசம்பர் 10 முதல் அழுத்தம் கொடுத்தனர்.  ஆனால் அதற்கு ஒரு போதும் சசிகலா ஒத்துக்கொள்ளவில்லை.

ஆனால் அந்த நேரத்தில் அமைச்சர்கள் தங்களது கோப்புகளையும் ட்ரான்ஸ்பர் பட்டியல்களையும் போயஸ் கார்டனில் இருந்த சசிகலாவிடம் எடுத்துவரத் தொடங்கினர்.  இறுதியாக அவர் ஒப்புக்கொண்டார். இதையடுத்து பிப்ரவரி 5ஆம் தேதி போயஸ் கார்டனில் சந்தித்த போது ஏன் எனது திறமையை சந்தேகிக்கிறீர்கள் என்று பன்னீர் செல்வம் கேட்டார்.

45 நிமிடம் பேசியதற்கு பிறகு பதவி விலக ஒப்புக்கொண்டார். எங்களின் தனிப்பட்ட நட்பின் காரணமாகவே பன்னீர்செல்வம் முதல்வர் பதவியில் இருந்து விலகினார். 

இது நடந்து பல மாதங்கள் கழித்து குருமூர்த்தி அளித்த பேட்டியில் பன்னீர் செல்வத்தை தர்ணாவில் அமரும்படி தான் கூறியதாக கூறினார். பிரதமர் மோடி சொன்னதால் தான் எடப்பாடி பழனிசாமியுடன் இணைந்ததாக பன்னீரும் கூறினார். 

இப்போது பன்னீர் உங்களை எதிர்க்கவில்லை என தோன்றுகிறது. அவர்  உங்களை நோக்கி வருவாரா?

அவர் வருவார்  என்று சொல்வது ஊடகங்கள் சொல்லும் தகவல். அவர் என்னை தொடர்பு கொள்ளவில்லை. எனக்குத் தெரிந்தவரை சசிகலாவையும் தொடர்புகொள்ளவில்லை. 

எனவே, ஈபிஎஸ்ஸை விட ஓபிஎஸ் உங்களுக்கு சிறந்த நண்பரா?

ஓபிஎஸ் எனது நண்பர். நாங்கள் 10 வருடங்களாக அரசியலில் இணைந்து பணியாற்றினோம். ஈபிஎஸ் எனக்கு தெரியும் அவ்வளவுதான். 

பின்னோக்கிப் பார்த்தால்,  சசிகலா உங்களைத் தேர்ந்தெடுத்திருந்தால்  தற்போது நடக்கும் நிகழ்வுகளை தவிர்த்திருக்க முடியும் என்று நீங்கள் நம்புகிறீர்களா?

பன்னீர்செல்வம் ஒரு வாரம் அமைதியாக இருந்திருந்தால் (அ.தி.மு.க.வில் இருந்து விலகி, சசிகலா மற்றும் அவரது குடும்பத்தினருக்கு எதிராக தர்மயுத்தம் நடத்துவதற்குப் பதிலாக), இப்போது  நடக்கும் நகைச்சுவை காட்சிகளுக்கு தேவை இருந்திருக்காது.

இதுவரை சசிகலா ஏன் உங்களுடன் இணையவில்லை?

இந்த கேள்வியை அவரிடம் தான் கேட்க வேண்டும். எங்கள் கட்சியில் தலைவர் பதவி காத்திருக்கிறது என்று அவரிடம் சொல்லியிருக்கிறோம். ஆனால் நீதிமன்றத்தில் போராடி வெற்றி பெற்று அதிமுக பொதுச் செயலாளராக வர வேண்டும் என்று நினைக்கிறார். 

அதிமுகவை மீண்டும் கைப்பற்றினால் தலைவர் யார்? நீங்களா அல்லது சசிகலாவா?

சசிகலா பொதுச் செயலாளராக வருவார். தேர்தலில் நாங்கள் பெறும் வெற்றியை அடுத்து அம்மாவின் உண்மையான கட்சி எங்களிடம்தான் இருக்கிறது என்பதை உணர்ந்து, அனைவரும் எங்களிடம் வருவார்கள் என்பதில் நான் தெளிவாக இருக்கிறேன்.

திமுக காங்கிரஸ் கூட்டணி உடையும்!

அப்படியென்றால் திமுகவின் பிரதான எதிர்க்கட்சி யார்?

ஊடகங்கள்தான் பாஜகவை எதிர்க்கட்சியாக சித்திரிக்கின்றன. அம்மாவின் தொண்டர்கள்தான் இப்போது உண்மையான எதிர்க்கட்சி.  

வரும் மக்களவை தேர்தலில் , பொது எதிரியான திமுகவை தோற்கடிக்க தேசிய ஜனநாயகக் கூட்டணியை ஒரு விருப்பமாக பார்க்கிறீர்களா?

பொறுத்திருந்து பார்ப்போம், காங்கிரஸுடன் திமுக கூட்டணியை முறித்துக் கொள்ளும்  என்று வலுவாக நான் நம்புகிறேன். உதாரணமாக கடந்த இரண்டு மாதங்களாக உள்ளூர் காங்கிரஸ் தலைவர்களின் அறிக்கைகளைப் பார்க்கலாம்.

தமிழக சட்டசபை தேர்தலுடன் பொதுத்தேர்தலும் நடத்தப்படும் என்று சொன்னீர்களே?

அது என்னுடைய கருத்து. ஏற்கனவே அமைச்சர்கள் செந்தில் பாலாஜி, அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோர் அமலாக்கத் துறை  கண்காணிப்பில் இருக்கின்றனர். ஊழல் குற்றச்சாட்டுகள் உண்மையானால், மேற்கு வங்கத்தில் நடந்தது போல் சோதனை நடத்தினால் இவர்கள் ஆட்சியை விட்டு செல்லவேண்டிய நிலை ஏற்படலாம்.  கடந்த ஆட்சியை விட ஸ்டாலின் ஆட்சியில் ஊழல் அதிகம் என்று மக்கள் நினைக்கிறார்கள். 

எங்களை மதிக்கும் தேசியக் கட்சியுடன் கூட்டணி

உங்கள் அரசியல் எதிர்காலத்தையும், அமமுகவின் எதிர்காலத்தையும் எப்படிப் பார்க்கிறீர்கள்?

உண்மையான அம்மாவின் ஆதரவாளர்கள்  எங்களுடன் உள்ளனர், எதிர்காலத்தில் மக்கள் எங்களை ஆதரிப்பார்கள் .தேர்தலில் ‘குக்கர்’ சின்னம் வெற்றி பெறும். அதுவே எங்களின் எதிர்பார்ப்பு, அதற்கான பணிகளில் ஈடுபட்டுள்ளோம்.

2024 மக்களவைத் தேர்தலில் அனைத்து அணிகளையும் ஒன்றிணைப்பதில் பாஜக ஆர்வமாக இருப்பதாகப் பேசப்படுகிறதே?

2024 தேர்தல் பாஜகவுக்கு மிக முக்கியமான தேர்தல். என்ன நடக்கிறது என பொறுத்திருந்து பார்ப்போம். எங்களை மதித்து நடந்தால் எந்த தேசிய கட்சியுடன் வேண்டுமானாலும் இணைந்து போட்டியிடுவோம். இல்லையெனில் தனித்து போட்டியிடுவோம். நாங்கள் பெரியாரை பின்பற்றுபவர்கள்.  தமிழகத்தை சேர்ந்தவர்கள். நாங்கள் சுயமரியாதை மிக்கவர்கள்.

நன்றி : டைம்ஸ் ஆப் இந்தியா

தொடக்க நாளே காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்ட புதுச்சேரி சட்டப்பேரவை!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel