அதிமுக பொதுச் செயலாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி நேற்று (ஏப்ரல் 26) இரவு 9 மணிக்கு டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை அவரது இல்லத்தில் சந்தித்தார். 50 நிமிடங்கள் நீடித்த இந்த சந்திப்பின் போது தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையும் உடன் இருந்தது இந்த சந்திப்பின் முக்கியத்துவத்தையும் பரபரப்பையும் அதிகப்படுத்தியுள்ளது.
கடந்த மார்ச், ஏப்ரல் மாதங்களில் தமிழகத்தில் பாஜகவுக்கும் அதிமுகவுக்கும் இடையிலான பரஸ்பர தாக்குதல்கள் அதிகமாகிக் கொண்டே சென்றன. கடைசியாக இது எங்கே வந்து நின்றது என்றால்…. செய்தியாளர்களை சந்திக்கும்போது எடப்பாடி பழனிசாமியிடம் அண்ணாமலை பற்றி கேள்வி கேட்கப்பட்டது.
‘அவரைப் பத்தியெல்லாம் என்கிட்ட கேக்காதீங்க. அவரெல்லாம் நீங்கதான் (ஊடகத்தினர்) பேசிப் பேசி பெரிய ஆளா ஆக்குறீங்க. நாங்க தேசிய தலைமையோட கூட்டணி வச்சிருக்கோம். பிஜேபியின் பாஸ் அமித் ஷா, மோடி, நட்டாதான். கீழ இருக்குறவங்கள பத்தி என்கிட்ட பேசாதீங்க’ என்று அண்ணாமலையை அண்டர் எஸ்டிமேட் செய்து பதில் சொன்னார் எடப்பாடி பழனிசாமி.
இந்த நிலையில் பொதுச் செயலாளர் தேர்தலில் வெற்றிபெற்ற நிலையில் அதை நீதிமன்றமும் உறுதிப்படுத்திய நிலையில் அமித் ஷாவிடம் அப்பாயின்மென்ட் கேட்டிருந்தார் எடப்பாடி. அதன் அடிப்படையில் 26 ஆம் தேதி இரவு அமித் ஷா எடப்பாடிக்கு நேரம் கொடுத்தார்.

கர்நாடக தேர்தலில் கடுமையான பிசியாக இருக்கும் அமித் ஷா இந்த சூழலில் எடப்பாடிக்கு நேரம் கொடுத்தது முக்கியத்துவம் நிறைந்ததாக கருதப்பட்டது. இந்த நிலையில் அமித் ஷாவை எடப்பாடி சந்திக்கும்போது தேசிய பாஜக தலைவர் நட்டா, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ஆகியோரும் இருந்திருக்கிறார்கள்.
சந்திப்பின்போது அண்ணாமலையும் இருக்கும் தகவல் சில மணி நேரங்களுக்கு முன்புதான் எடப்பாடிக்கு தெரியவந்திருக்கிறது. எடப்பாடி பழனிசாமியோடு அதிமுக நிர்வாகிகளும் முன்னாள் அமைச்சர்களுமான சி.வி. சண்முகம், கே.பி.முனுசாமி, தங்கமணி. வேலுமணி, ஜெயக்குமார் ஆகியோரும் இருந்தார்கள். கூட இந்த பக்கம் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையும் இருந்தார்.
சந்திப்பு முடிந்ததும் இந்தப் புகைப்படத்தை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையே தனது ட்விட்டர் தளத்தில் பகிர்ந்தார்.
எடப்பாடி பழனிசாமியை சந்திக்கும்போது அண்ணாமலையும் இருக்க வேண்டும் என்பதற்காக கர்நாடக தேர்தல் பணியில் இருந்த அவரை நட்டா மூலமாக டெல்லி வரச் சொல்லியிருக்கிறார் அமித் ஷா.

இந்த சந்திப்பில் பேசப்பட்ட விஷயங்கள் முக்கியத்துவம் வாய்ந்தவை என்றாலும்… ‘நாங்க அண்ணாமலையோட பேசமாட்டோம். அமித் ஷாவோடதான் பேசுவோம்’ என்று சொல்லி வந்த எடப்பாடி பழனிசாமியை சந்திக்கும் போது அமித் ஷா தன் பக்கத்தில் அண்ணாமலையை வைத்துக் கொண்டது முக்கியமான பேசுபொருளாகியுள்ளது.
இந்த சந்திப்பின் போது எடப்பாடி பழனிசாமி, அண்ணாமலை ஆகிய இருவருக்குமே அமித் ஷா சில அறிவுறுத்தல்களை வழங்கியிருப்பதாக முதல் கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
–வேந்தன்
போராட்டம் வீண்: சொந்த அணியால் நொந்துகொண்ட விராட்கோலி
சிறப்புக் கட்டுரை: ஐந்து பெருநிறுவனங்களை (Big 5) மட்டும்தான் உடைக்கவேண்டுமா?