பன்னீருக்கு ஆதரவு தெரிவிக்கும் எடப்பாடி ஆதரவாளர்கள்: வைத்திலிங்கம்

அரசியல்


எடப்பாடி ஆதரவாளர்கள் தங்கள் பக்கம் வந்து கொண்டிருப்பதாக ஓ.பன்னீர் செல்வம் ஆதரவாளர் வைத்திலிங்கம் தெரிவித்துள்ளார்.

அதிமுக பொதுக்குழு செல்லாது என்று சென்னை உயர் நீதிமன்றம் ஒருங்கிணைப்பாளர் பன்னீர் செல்வத்துக்கு ஆதரவாகத் தீர்ப்பு வழங்கியது.

இதையடுத்து இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி பக்கம் இருப்பவர்கள் பன்னீர் பக்கம் தாவலாம் என்று அரசியல் வட்டாரங்கள் தெரிவித்தன.

அதன்படி, எடப்பாடி பழனிசாமி ஆதரவாளராக இருந்த வேடசந்தூர் மேற்கு ஒன்றிய செயலாளர் சுப்பிரமணியன் பன்னீர் செல்வத்தைச் சந்தித்து பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்து தனது ஆதரவைத் தெரிவித்தார்.

இந்நிலையில் இன்று (ஆகஸ்ட் 19) தஞ்சாவூரில் செய்தியாளர்களைச் சந்தித்த வைத்திலிங்கம், “எடப்பாடி செய்த சூழ்ச்சிகளை எல்லாம் சொல்லாமல், அவரது நயவஞ்சகத்தை வெளிப்படுத்தாமல் நாம் ஒற்றுமையாக இருக்க வேண்டும்.

நடந்தவை நடந்தவையாக இருக்கட்டும். நடப்பவை நல்லவையாக இருக்கட்டும். மனக்கசப்பை மறந்து இந்த இயக்கத்தை வலிமையாக மாற்ற, ஆளும் கட்சியாக வருவதற்கான செயலை முன்னிறுத்தி பன்னீர் செல்வம் அழைப்பு விடுத்தார்.

அதை அவர்கள் ஏற்க மறுத்துவிட்டார்கள். எடப்பாடி பழனிசாமி கொடுத்த அறிக்கையை மக்களும், தொண்டர்களும் ஏற்றுக்கொள்ளவில்லை. எடப்பாடி பழனிசாமி ஆதரவாளராக இருந்த வேடசந்தூர் ஒன்றிய செயலாளர் பன்னீர் செல்வம் பக்கம் வந்துவிட்டார்.

இப்படி தினமும் பொதுக்குழு உறுப்பினர்கள் எங்களை நோக்கி வர இருக்கிறார்கள். அதை ஒரு வாரத்தில் பார்க்கலாம்” என்றார்.

சசிகலா குறித்து கேள்விக்கு, “எம்.ஜி.ஆர் காலத்தில் இந்த இயக்கம் வளர்வதற்கு தன்னால் முயன்ற வரை பாடுபட்டவர்களைப் பாருங்கள் என்று அழைத்திருக்கிறார். பிரிந்து சென்றவர்களையும் வாருங்கள் என்று அழைத்திருக்கிறார்.

அனைவருக்கும் இந்த அழைப்பு உண்டு. டிடிவி தினகரன் மற்றும் சசிகலாவுக்குத்தான் இந்த அழைப்பு என்று ஓபிஎஸ் தெரிவித்தார்” என்றார்.

எடப்பாடி பழனிசாமி மேல்முறையீடு செய்தது பற்றி கேட்டதற்கு, “இதனை நாங்கள் எதிர்கொள்வோம். எங்களுக்கு கூட்டுத் தலைமை வேண்டும். கூட்டு தலைமையாக இருந்தால் தான் வலுவான இயக்கமாக இருக்க முடியும்.

நேற்று எடப்பாடி பழனிசாமியின் முகத்தைப் பார்த்தால் தெரிந்திருக்கும். அவரது முகம் எவ்வளவு கொடூரமாக இருந்தது என்று. அதுவே, பன்னீரின் முகம் புன்சிரிப்போடு இருந்தது. உள்ளத்தில் இருப்பதுதான் முகத்தில் தெரியும்” என்றார்.

அதிமுக அலுவலகத்திலிருந்து ஆவணங்கள் எடுத்துச் சென்றது தொடர்பான கேள்விக்கு, பன்னீர்தான் ஒருங்கிணைப்பாளர், அவர்தான் பொருளாளர். அதனால் நாங்கள் அலுவலகத்துக்குச் சென்றோம் என்று கூறினார்.

பாஜக மற்றும் மற்ற கட்சிகளை இவ்விவாகரத்தில் இணைத்துப் பேசாதீர்கள் என்று கூறிய வைத்திலிங்கம், எடப்பாடி பழனிசாமி வேண்டுமானால் எங்களுடன் சேராமல் இருக்கலாம். ஆனால் கோடிக்கணக்கான தொண்டர்கள் எங்களுடன் சேர தயாராக இருக்கிறார்கள் என கூறிவிட்டுச் சென்றார்.

பிரியா

எடப்பாடிக்கு எதிராக ஓ.பன்னீர்செல்வம் கேவியட் மனு!

+1
1
+1
2
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *