வைஃபை ஆன் செய்ததும் எடப்பாடி, ஸ்டாலின் டெல்லி பயணம் பற்றிய செய்திகள் இன்பாக்ஸில் வந்து விழுந்தன.
அவற்றைப் பார்த்துவிட்டு வாட்ஸ் அப் தனது மெசேஜை டைப் செய்யத் தொடங்கியது.
“அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று (ஏப்ரல் 26) டெல்லி சென்றுள்ளார். கோவையில் இருந்து விமானம் மூலம் புறப்பட்டு டெல்லி செல்லும் அவர் உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்திக்கிறார். இதே போல முதலமைச்சர் ஸ்டாலின் நாளை ஏப்ரல் 27 சென்னையில் இருந்து புறப்பட்டு டெல்லி செல்கிறார். தமிழ்நாட்டின் முதல்வரும் எதிர்க்கட்சித் தலைவரும் ஒரே சமயத்தில் டெல்லி செல்வது என்பது தமிழ்நாட்டு அரசியலில் டெல்லி செலுத்தும் செல்வாக்கை நிரூபிப்பதாகவே உள்ளது.
ஈரோடு கிழக்கு இடைத் தேர்தலுக்குப் பின்னால் அதிமுகவுக்கும் பாஜகவுக்குமான நல்லுறவு தொடர்ந்து பின்னடைவை சந்தித்துக் கொண்டே வந்திருக்கிறது. கடந்த சில நாட்களாக அண்ணாமலை பற்றி கேள்வி கேட்டாலே எடப்பாடி பழனிசாமி, ‘அவரைப் பத்தி எல்லாம் என்கிட்ட கேட்காதீங்க. நாங்க பாரதப் பிரதமர் மோடியோடும், மரியாதைக்குரிய உள்துறை அமைச்சர் அமித் ஷாவோடும் ஜேபி நட்டாவோடும்தான் கூட்டணி பேசியிருக்கிறோம். கடந்த சட்டமன்றத் தேர்தலிலும் அப்படித்தான் பேசியிருக்கிறோம். தமிழிசை இருந்தார்கள், முருகன் இருந்தார், இப்போது இவர் இருக்கிறார். நாளை யார் வேண்டுமானாலும் இருக்கலாம். நாங்கள் பேசுவது மேலே இருக்கும் பாஸ் உடன் தான். இங்கே இருப்பவர்களோடு அல்ல’ என்று பதிலளித்திருந்தார் எடப்பாடி பழனிசாமி. தொடர்ந்து அண்ணாமலையை புறக்கணிக்கும் வகையிலேயே பதில்களை சொல்லிவந்தார்.
இதேநேரம் எடப்பாடி இப்படி சொல்லிவருவது பற்றி கர்நாடக தேர்தல் பணிகளில் ஈடுபட்டிருக்கும் அண்ணாமலையிடம் செய்தியாளர்கள் கேட்டபோது, ‘என் கட்சியை பற்றி மட்டும்தான் நான் பேச முடியும். எங்க கட்சியில பாஸ்னு யாருமே இல்லை’ என்று சொல்லியிருக்கிறார்.
இந்த நிலையில்தான் எடப்பாடி பழனிசாமி டெல்லி சென்றிருக்கிறார். இந்த நேரத்தில் எடப்பாடி டெல்லி செல்ல வேண்டிய பர்பஸ் என்ன என்று அதிமுக வட்டாரத்தில் விசாரித்தோம்.
‘மக்களவைத் தேர்தலுக்கு இன்னும் முழுதாக ஒரு வருடம் இருக்கிறது. அண்ணாமலை தனது மேலிடத்தில் சில விஷயங்களை சொல்லி அதற்கு அனுமதி வாங்கி அதன்படி செயல்பட்டு வருகிறார். அதாவது பாஜக தலைமையில் தமிழ்நாட்டில் ஒரு கூட்டணி அமைப்பதுதான் அண்ணாமலையின் ஐடியா. அதற்கு குறிப்பிட்ட கால அவகாசம் கொடுத்து அனுமதி கொடுத்திருக்கிறது பாஜக தலைமை. இது எடப்பாடிக்கும் தெரியும். அதனால் கூட்டணி பற்றி இப்போதைக்கு எடப்பாடி அலட்டிக் கொள்வதில்லை.
மேலும் சமீபத்தில் திருச்சியில் நடந்த ஓபிஎஸ் மாநாட்டுக்கு மாநில ஆளுங்கட்சியான திமுகவும், மத்திய ஆளுங்கட்சியான பாஜகவும் சைலன்ட்டாக சில விஷயங்களை செய்துகொடுத்திருப்பதையும் எடப்பாடி அறிந்திருக்கிறார். ஜி.கே.வாசன், பாரிவேந்தர் ஆகியோர் மூலம் ஓபிஎஸ் மாநாட்டுக்கு அரசியல் ரீதியாக இல்லாமல் சமுதாய ரீதியாக உதவிகள் செய்யப்பட்டிருப்பதை எடப்பாடி அறிந்துகொண்டார். இன்னமும் ஓபிஎஸ் சுக்கு பாஜகவின் சிற்சில உதவிகள் தொடர்வதை எடப்பாடி விரும்பவில்லை. இதுபற்றி அமித் ஷாவிடம் எடப்பாடி முறையிட இருக்கிறார்.
இன்னொரு முக்கியமான விஷயம் தேர்தல் ஆணையம் சமீபத்தில் எடப்பாடியை அதிமுக பொதுச் செயலாளர் என்று தனது ஆவணங்களில் பதிவு செய்வதாக அவருக்கு கடிதம் எழுதியது. அதேநேரம் இது எதிர்வரும் காலங்களில் நீதிமன்ற உத்தரவுகளுக்கும், அறிவுறுத்தல்களுக்கும் உட்பட்டது என்றும் தெரிவித்திருந்தது. தேர்தல் ஆணையம் சிவசேனா கட்சி வழக்கில் ஏக் நாத் ஷிண்டேவுக்கு வழங்கியதைப் போல தெளிவான உத்தரவை தனக்கு வழங்கவில்லை என்பது எடப்பாடிக்கு இருக்கும் குறை. அதை உள்துறை அமைச்சர் அமித் ஷாவிடம் தெரிவித்துள்ளார். இந்த விஷயத்தை நேரிலும் வலியுறுத்துகிறார். வெளியிலே என்ன விஷயங்கள் பேசப்பட்டாலும் எடப்பாடி அமித் ஷாவிடம் வலியுறுத்தும் முக்கியமான கோரிக்கைகள் இந்த இரண்டுதான் என்கிறார்கள் அதிமுக வட்டாரங்களில்.
எடப்பாடி பழனிசாமியின் டெல்லி பயணத்துக்கு இதுதான் அஜெண்டா என்றால் முதலமைச்சர் ஸ்டாலின் நாளை டெல்லி செல்கிறார். நாளை மறுநாள் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை சந்திக்கிறார். கிண்டி பன்னோக்கு மருத்துவமனை திறப்பு விழாவுக்கு குடியரசுத் தலைவரை அழைக்கிறார்.
இந்த பயணத்தின்போது டெல்லியில் மேலும் சிலரையும் தொடர்புகொள்ளும் திட்டமும் ஸ்டாலினிடம் இருக்கிறது என்கிறார்கள். ஜி ஸ்கொயர் தற்போது வருமான வரித்துறையால் ரவுண்டு கட்டப்பட்டு வரும் நிலையில், அண்ணாமலை வெளியிட்ட டிஎம்கே ஃபைல்ஸ், பிடிஆர் ஆடியோ என திமுகவைச் சுற்றி அரசியல் பரபரப்பு எழுந்துள்ள நிலையில்… ஸ்டாலினின் இந்த டெல்லி பயணம் மேலும் முக்கியத்துவம் பெறுகிறது. ஸ்டாலின் டெல்லியில் இருந்தபடி சில காய்களை நகர்த்த இருக்கிறார் ” என்ற மெசேஜுக்கு செண்ட் கொடுத்து ஆஃப் லைன் போனது வாட்ஸ் அப்.
“பிரதமர் வீடு கட்டும் திட்டத்தில் மெகா ஊழல்”: அன்பில் மகேஷ்
’எனக்கு பிரச்சனையே நீங்க தான்’ : பத்திரிகையாளரை திட்டிய மும்பை இந்தியன்ஸ் வீரர்!