அனைத்து அதிகாரங்களையும் கொண்ட அதிமுக பொதுக்குழு உறுப்பினர்கள் எடப்பாடி பழனிசாமியை தலைவராக ஏற்றுக்கொண்டிருப்பதால் இந்த தீர்ப்பு தங்களுக்கு பின்னடைவு இல்லை என்று ஈபிஎஸ் ஆதரவாளர்கள் விளக்கம் அளித்துள்ளனர்.
எம்.ஜி.ஆர், ஜெயலலிதா வழியிலேயே பொதுக்குழு
அதிமுக பொதுக்குழு செல்லாது என்று உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கிய நிலையில் அதுகுறித்து எடப்பாடி பழனிசாமி ஆதரவாளரான கே.பி.முனுசாமி, ஜெயக்குமார், பொன்னையன், திண்டுக்கல் சீனிவாசன், எம்.ஆர்.விஜயபாஸ்கர், ஆர்.பி, உதயகுமார், உள்ளிட்டோர் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய கே.பி.முனுசாமி , “தீர்ப்பின் முழு விவரம் வந்த பிறகு தலைமை கழகத்தின் வாயிலாக பதிலளிக்கப்படும் என்றார்.
மேலும் பேசிய அவர், நடந்து முடிந்த செயற்குழு, பொதுக்குழு என்பது புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா நடத்தியதை போலவே நடத்தப்பட்டது என்பதை தெரிவிக்க கடமைப்பட்டு இருக்கிறோம்.
ஓபிஎஸ்-க்கு ஆதரவு இல்லை
இந்த பொதுக்குழுவில் கலந்துகொண்ட அனைத்து உறுப்பினர்களும், ஜூன் 23-ல் நடைபெற்ற பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களும் நிராகரிக்கப்பட்டது என்பதையும், அதேபோல ஜூலை 11-ல் நடைபெற்ற பொதுக்குழுவில் கொண்டு வந்த தீர்மானங்களையும் அனைத்து உறுப்பினர்களும் முழு மனதாக ஏற்றுக்கொண்டனர். 100 பொதுக்குழு உறுப்பினர்களை வைத்துக்கொண்டு ஓபிஎஸ் அணியினர் நீதிமன்றத்துக்கு சென்றுள்ளனர்.
பின்னடைவே இல்லை
100-ல் 90 சதவீத உறுப்பினர்கள் எடப்பாடி பழனிசாமியை தலைவராக ஏற்றுக் கொண்டுள்ளனர். பொதுக்குழு உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதே கட்சியின் கீழ்மட்ட உறுப்பினர்கள் தான்.
எனவே கட்சியின் அனைத்து அதிகாரங்களும் படைத்தவர்களாக இந்த பொதுக்குழு உறுப்பினர்கள் தான் இருக்கிறார்கள். எனவே பெரும்பான்மையான பொதுக்குழு உறுப்பினர்கள் ஒருமனதாக எடப்பாடி பழனிசாமியை தலைவராக ஏற்றுக்கொண்டிருப்பதால் இது பின்னடைவு என்பதற்கான பேச்சுக்கே இடமில்லை. சட்ட வல்லுனர்களுடன் கலந்து ஆலோசித்து அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து முடிவு எடுக்கப்படும்” என்றார்.
கலை.ரா
அதிமுக பொதுக்குழு தீர்ப்பு: எடப்பாடி பழனிசாமி மேல்முறையீடு!