தமிழக அரசின் மூன்றாவது பட்ஜெட் நாட்டிற்கு எந்தவித வெளிச்சத்தையும் தராத மின்மினி பூச்சாக பார்க்கப்படுகிறது என்று எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.
இன்று (மார்ச் 20) பட்ஜெட் கூட்டத்தொடர் துவங்கியதும் அதிமுகவினர் வெளிநடப்பு செய்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிசாமி,
“ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் மக்களை ஆடு மாடுகளை போல அடைத்து சித்தரவதை செய்து அச்சுறுத்தி வாக்களிக்க வைத்தது,
விலைவாசி உயர்வு, மின் கட்டண உயர்வு, சொத்து வரி, குடிநீர், அதிமுக தொண்டர்கள் மீது பொய் வழக்கு போடுவது, தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு அடியோடு சீர்குலைந்துள்ளதை கண்டித்து வெளிநடப்பு செய்தோம்.
அனைத்து வரிகளையும் உயர்த்தியது தான் இந்த ஆட்சி மக்களுக்கு கொடுத்த பரிசாக உள்ளது. ஒன்றரை லட்சம் கோடி ரூபாய் கடன் வாங்கியுள்ளனர். இந்த ஆண்டு ரூ.90 ஆயிரம் கோடி கடன் வாங்கியதாக கூறுகிறார்கள்.
திட்டங்களை அறிவித்து அதற்கு தேவையான நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை. அரசிற்கு வருவாய் அதிகரித்துள்ளது. ஆனால் வருவாய் பற்றாக்குறை உள்ளது. மக்களை ஏமாற்றும் அரசாக திமுக அரசு உள்ளது.
நீட் தேர்வு ரத்து என்று கூறினார்கள். ஆட்சி பொறுப்பேற்று இரண்டு ஆண்டுகள் ஆனாலும் நீட் தேர்வை ரத்து செய்யவில்லை.
உதயநிதி ஸ்டாலின் நீட் தேர்வை ரத்து செய்யும் ரகசியம் சட்டபோராட்டம் நடத்துவது என்று கூறுகிறார். நாங்கள் சட்டபோராட்டம் நடத்தவில்லையா. இந்த ரகசியத்தை வெளியிட்ட உதயநிதி ஸ்டாலினுக்கு நோபல் பரிசு கொடுக்கலாம்.
இந்த ஆண்டு ரூ.91 ஆயிரம் கோடி கடன் வாங்குவதாக தெரிவித்துள்ளார்கள். கடன் வாங்காமல் இந்த ஆட்சி நடைபெறவில்லை. மூன்று ஆண்டுகளில் ரூ.2,40,000 கோடி திமுக அரசு கடன் வாங்கியுள்ளது. எந்த ஒரு புதிய திட்டத்தையும் அரசு அறிவிக்கவில்லை.
ஆதி திராவிட மக்களுக்கு நிதி ஒதுக்கீடு குறைக்கப்பட்டுள்ளது. இதனை நாங்கள் கண்டிக்கிறோம்.
மகளிர் உரிமைத்தொகை தமிழகத்தில் உள்ள அனைத்து குடும்ப தலைவிகளுக்கும் வழங்கப்படும் என்று கூறி வாக்குகளை பெற்று ஆட்சிக்கு வந்துவிட்டு தற்போது தகுதியானவர்களுக்கு மட்டுமே வழங்கப்படும் என்று கூறுகிறார்கள்.
எந்த அடிப்படையில் இதனை நிர்ணயிக்கிறீர்கள். ரூ.7000 கோடி மட்டுமே நிதி ஒதுக்கீடு செய்துள்ளார்கள். 1 கோடி பேருக்கு கூட கொடுக்க முடியாது.
மக்களை ஏமாற்றி பிழைப்பதையே தொழிலாக கொண்ட விடியா திமுக அரசின் மூன்றாவது பட்ஜெட் மின்மினி பூச்சாக பார்க்கப்படுகிறது.
நாட்டிற்கும் நாட்டு மக்களுக்கும் இந்த பட்ஜெட் எந்தவித வெளிச்சத்தையும் தராது. இது ஒரு கானல் நீர். மக்களின் தாகம் தீர்க்காது” என்று தெரிவித்தார்.
செல்வம்
மகளிருக்கு மாதம் 1000 ரூபாய்: பட்ஜெட்டில் முக்கிய அறிவிப்பு!
பட்ஜெட்: புதிதாக 1 லட்சம் பேருக்கு முதியோர் உதவித்தொகை!