நீலகிரி நாடாளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளரும், முன்னாள் சபாநாயகர் தனபால் மகனுமான லோகேஷ் தமிழ்ச்செல்வனை ஆதரித்து நீலகிரியில் இன்று (ஏப்ரல் 4) எடப்பாடி பழனிசாமி பிரச்சாரம் செய்தார்.
அப்போது பேசிய அவர், “தமிழகத்தில் போதைப்பொருள் விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது. அதையெல்லாம் அவர்களால் கட்டுப்படுத்த முடியவில்லை. ஏனென்றால் திமுகவினரே போதைப்பொருள் விற்பனை செய்கிறார்கள்.
நீலகிரி திமுக வேட்பாளர் ஆ.ராசாவுக்கு வாக்களித்து எந்த பயனுமில்லை. தேர்தல் பிரச்சாரத்தில் என்னை பற்றி பேசுவது தான் ஸ்டாலினுக்கு வாடிக்கை. வேறு எதுவுமே அவருக்கு தெரியவில்லை. மூன்று ஆண்டுகளில் திமுக ஆட்சியில் செய்த திட்டங்கள் குறித்து பிரச்சாரம் செய்ய வேண்டும். ஆனால், அவர்கள் எதுவுமே தமிழகத்திற்கு செய்யவில்லை.
திமுக ஆட்சிக்கு வந்தபிறகு எந்த மாவட்டத்திற்காவது ஒரு பெரிய திட்டத்தை கொண்டு வந்தார்களா? ஒரு சிறு துரும்பை கூட கிள்ளிப்போடவில்லை.
நீலகிரி மாவட்டத்தை அதிகமாக நேசித்தவர் ஜெயலலிதா. ஒவ்வொரு முறையும் நீலகிரி வரும்போது கொடநாட்டில் தங்கி ஓய்வெடுப்பார். ஊட்டியில் வாழ்கின்ற மலைவாழ் மக்களுடன் நன்கு பழகியவர்.
ஜெயலலிதா அடிக்கடி ஊட்டிக்கு வந்ததால், அரசியல் காழ்ப்புணர்ச்சியின் காரணமாக இந்த மாவட்ட மக்களுக்கு எந்த திட்டங்களையும் ஸ்டாலின் செயல்படுத்தவில்லை.
எடப்பாடி பழனிசாமி ஆட்சி இருண்ட ஆட்சி என்று ஸ்டாலின் பேசுகிறார். அவர் கண்ணை மூடிக்கொண்டிருந்தால் இருட்டாக தான் தெரியும். ஊட்டிக்கு வந்து நாங்கள் கட்டிய அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையை பாருங்கள். நாங்கள் கட்டிய அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவனையை நீங்கள் ஸ்டிக்கர் ஒட்டி திறந்து வைக்கிறீர்கள்” என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
நடராஜன் பர்த்டே பார்ட்டியில் அஜித்… இதுதான் காரணமா? வெளியான சுவாரஸ்ய தகவல்!
“சனாதனத்திற்கு எதிராக பேச முடியாது” : காங்கிரஸில் இருந்து விலகினார் கவுரவ் வல்லப்