அதிமுக ஆட்சியில் எதுவும் செய்யவில்லை என்று முதல்வர் ஸ்டாலின் என்னைப் பற்றி விமர்சனம் செய்வது கேலிக்கூத்தாக உள்ளது என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று (நவம்பர் 10) தெரிவித்துள்ளார்.
விருதுநகரில் இன்று நடைபெற்ற அரசு விழாவில் பேசிய முதல்வர் ஸ்டாலின், “மக்கள் நலத் திட்டங்களுக்கு மூலதன செலவுகளை மேற்கொள்ளாமல் கலைஞர் பெயரில் மக்களுக்கு பயன்படாத திட்டங்களுக்கு கோடிக்கணக்கில் நிதியை நான் ஒதுக்கி வருவதாக எடப்பாடி பழனிச்சாமி உளறி இருக்கிறார்.
தமிழினத்திற்காக 80 ஆண்டுகள் ஓயாமல் உழைத்த கலைஞரின் பெயரை மக்கள் நலத் திட்டங்களுக்கு வைக்காமல் வேறு யார் பெயரை வைப்பது? பதவி சுகத்திற்காக கரப்பான்பூச்சி மாதிரி ஊர்ந்து போனீங்களே.. உங்கள் பெயரை வைக்கமுடியுமா?” என்று கடுமையாக விமர்சித்திருந்தார்.
முதல்வர் ஸ்டாலின் விமர்சனத்திற்கு திருச்சி விமான நிலையத்தில் இன்று பதிலளித்துள்ள எடப்பாடி பழனிசாமி, “விருதுநகரில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் எதுவுமே செய்யவில்லை என்ற குற்றச்சாட்டை முன்வைத்திருக்கிறார் முதல்வர் ஸ்டாலின். 2011 முதல் 2021 வரை மிகச்சிறப்பான ஆட்சியை அதிமுக மக்களுக்கு தந்துள்ளது. வேண்டுமென்றே திட்டமிட்டு முதல்வர் ஸ்டாலின் என்னைப் பற்றி விமர்சனம் செய்வது, கேலிக்கூத்தாக பார்க்கப்படுகிறது.
பல திட்டங்களை அதிமுக ஆட்சியில் கொண்டு வந்தோம். அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட திட்டங்களை முடக்கும் திராணியற்ற அரசாக தான் திமுக அரசு இருக்கிறது. 2021 சட்டமன்ற தேர்தலில் கொடுத்த வாக்குறுதிகளில் 10 சதவிகித அறிவிப்புகளைக் கூட நிறைவேற்ற முடியவில்லை. இப்படி கவர்ச்சிகரமான வாக்குறுதிகளைக் கொடுத்து கொல்லைப்புறத்தின் வழியாக ஆட்சிக்கு வந்தவர் தான் ஸ்டாலின். குடும்பத்தைப் பற்றி சிந்திப்பதற்கு தான் முதல்வருக்கு நேரம் இருக்கிறது. மக்களைப் பற்றி சிந்திப்பதற்கு அவருக்கு நேரமில்லை.
எனக்கு திறமையில்லை என்கிறார். திறமையைப் பற்றி பேசுவதற்கு அவருக்கு தகுதியில்லை. சாதாரண கிளைச்செயலாளரான நான் இவ்வளவு பெரிய கட்சிக்கு பொதுச்செயலாளரானது தான் திறமை. தந்தையின் அடையாளத்தை வைத்து தான் திமுக கட்சி தலைவராகவும் முதல்வராகவும் ஆகியிருக்கிறீர்கள். கலைஞர் குடும்பத்தில் மட்டும் பிறக்காவிட்டால் ஸ்டாலினால் கவுன்சிலர் கூட ஆகியிருக்க முடியாது.
உதயநிதி ஸ்டாலினுக்கு எந்த தகுதியின் அடிப்படையில் பதவி கொடுத்தீர்கள். திமுகவுக்காக எத்தனை முறை உதயநிதி சிறை சென்றார்? கலைஞரின் பேரன், ஸ்டாலினின் மகன், இந்த ஒரே அடையாளத்தை வைத்து தான் துணை முதல்வராக்கியுள்ளீர்கள்.
அதிமுக தான் ஜனநாயக கட்சி. சாதாரண தொண்டன் கூட உச்சபட்ச பதவிகளுக்கு செல்ல முடியும். திமுகவில் கலைஞர் குடும்பத்தை சேர்ந்தவர்களுக்கு மட்டும் தான் முக்கிய பதவிகள் கிடைக்கும். வேறு யாருக்கும் கிடைக்காது.
அண்மையில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ஸ்டாலின், உதயநிதிக்கு கொடுக்கப்பட்ட பொறுப்பில் 100 சதவிகிதம் மார்க் வாங்கிவிட்டதாக பேசுகிறார். மற்ற அமைச்சர்கள் எல்லாம் தோல்வி அடைந்துவிட்டார்களா? திமுகவை தூக்கி நிறுத்தியதே கட்சியின் சீனியர்கள் தான். ஆனால், அவர்களைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல் தன்னுடைய மகன் உயர்ந்த நிலைக்கு வர வேண்டும் என்று புகழ்ந்து பேசுகிறார்” என்று தெரிவித்தார்.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பயிர் சாகுபடி அளவீடு… மாணவர்களை பயன்படுத்துவதா? – சீமான் கண்டனம்!